Monday, June 9, 2014

வலிக்கிறதா ???

வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்ட வியட்நாமிய போராளி ஒருவன்  நிர்வாணப்படுத்தப்பட்டு மரத்தில் கட்டப்படுகிறான் கிட்டத்தட்ட உயிர் மட்டுமே ஒட்டியிருக்கும் ஆனாலும் ஒரு ராணுவ தளபதிக்கு அவனிடம் இன்னும் கொஞ்சம் "நரக வதை விளையாட்டு விளையாட வேண்டும் போல  தோன்றுகிறது" இரும்பு கம்பியினால் அவனை தாக்குகிறான் ...தாக்கிவிட்டு வலிக்கிறதா என்று ஏகத்தாளமாக கேட்கிறான் "வலிக்கிறது ஆனால் என் நாட்டின் சுதந்திரம் ரொம்ப இனிக்கிறது என்கிறான் " கோபத்தில் தளபதி மீண்டும் தாக்குகிறான் இப்போது வலிக்கிறதா ?? " ஆம் மோசமாக வலிக்கிறது ஆனால் இப்போதும் என் நாட்டின் சுதந்திரம் ரொம்ப இனிக்கிறது " கோபத்தின் உச்சியில் அகோரமாக தாக்குகிறான் .....அவன் விரல்களை உடைக்கிறான் ....அவன் ஆண் உறுப்பு வெடிக்கும் வரை  சரமாரியாக இரும்பினால் அடிக்கிறான் உயிர் பிரிய ஒரு சில செக்கனுக்கு முன்பு " வலிக்கிறது..... வலிக்கிறது...... ஆனாலும் என் சுதந்திரம் இனிக்கிறது" என்று சொல்லி அவன் உயிர் அடங்குகிறது ..ஒரு போராளியின் மன உறுதியின் முன் தாம் தோற்கடிக்கப்பட்டதை நினைத்து நினைத்து அந்த தளபதி வெட்கப்படுகிறான் ............

Tuesday, April 22, 2014

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் (4)

எல்லா குட்டி பூனைகள் போலத்தான் கருப்பனின் சின்ன வயதும்  ஆனால் ஏற்கனவே சொன்னது போல அவன் கொஞ்சம் வித்யாசமானவன் மனிதனுக்கு இருக்கும் சில உணர்வுகளை புரிதல் அவனிடம் இருந்தது இது ஒரு வகையில் என் கணித்தலின் தவறோ என்னவோ ஆனால் அடம் பிடித்தல் ,அன்பு காட்டுதல் கோபப்படுதல் ஏன் சில நேரங்களில் பொசசிவ்னஸ், என்று கருப்பன் கொஞ்சம் வித்யாசம் வீட்டுக்கு கூட்டி வந்த காலத்தில் அவன் ரொம்ப சின்னவன் தூங்குதல் பிடித்த பொழுது போக்கு சதா சர்வ காலமும் தூங்குவான் அதை ரசிப்பதே ஒரு தனி அழகு

என்ன ஒரு ஆத்மார்த்தமான உறக்கம் அது ....என் அளவில் அப்படி ஒரு மெய் மறந்த தூக்கத்தை கண்டு நீண்ட காலம் இன்னுமொன்று நம் மனதுக்கு பிடித்தவர்கள் எப்போ ரொம்ப அழகா இருப்பாங்கனா கண்டிப்பா அது தூங்கும் நேரமாகத்தான் இருக்கும் நான் என் காதல் காலங்களில் அவளிடம் அடிக்கடி  சொல்வது  அவள் தூங்கும்  போது அவளை பார்க்க வேணும் என்று ஆனால் காலம் அதெல்லாம் வெறும் கானல் நீராக்கி அவளை ஒரு திசைக்கும்  என்னை வேறு திசைக்கும்  அடித்து இழுத்து வந்துவிட்டது.

பிறந்த சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆன  குழந்தைகளின்   உறக்கத்தை பார்த்திருப்போம் என்ன ஒரு ஆனந்தமான உறக்கம் ஆழ் மனதில் எந்த சிந்தனையும் இல்லாதவிடத்து மட்டுமே அது சாத்தியப்படும்   அந்த உறக்கம் .கருப்பன் எப்போதுமே அப்படித்தான் அவன் தூங்குவதை பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு வகையில்  தியானம், இருதய நோயாளர்களை மீன் தொட்டி மீன்கள் அசைந்து விளையாடுவதை பார்க்க சொல்வார்களே ...அதுபோல. கருப்பன் சின்ன வயதில் பால் குடிப்பது என்றால் வேறு ஒன்றுமே வேண்டாம் இவன் வேறு கரு கருவென்று இருப்பதால் பாலை மண்டுவதை பார்த்து இப்படியாவது வெள்ளை ஆகிவிட வேண்டும் என்று ஆசைபடுகின்றானோ என்று நானும் தம்பியும் பேசி சிரிப்போம்.

இதில் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவனுக்கு அப்பாவை பார்த்து விடவேண்டும் இல்லையென்றால் உண்ணாவிரதம் தான் கருப்பனுக்கு அப்பாவின் சப்பாத்துக்குள் சுருண்டு தூங்குவது ரொம்ப பிடிக்கும் எப்படி  பழகினானோ  தெரியவில்லை தூங்குவதென்றால் கண்டிப்பாக அப்பாவின் சப்பாத்துள் சுருண்டுவிடுவான்.
சில  நேரம் இவன் எழுந்திருக்கும் வரை அப்பா வேலைக்கு போகாமல் நின்றுக்கொண்டிருப்பார் ......சசிக்குமார் இன்னும் ஒரு படி மேல் எங்காவது கிளம்புகிறோம் என்றால் கூடவே வந்து வழி அனுப்பி வைப்பது அவன் முதல் கடமையாக இருக்கும்.

ஒரு முறை உறவுக்காரர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம் 3 நாட்கள்  அங்கேயே தங்க வேண்டி வரும் என்பதால் சசிக்குமாருக்கு உணவு ஏற்பாடு செய்தாக வேணும் கருப்பன் எப்படியோ சமாளிப்பான் காரணம் அவனை கட்டிப்போட முடியாதே!! மேலும் அக்கம் பக்கத்தில் அவன் மீது நல்ல அபிப்ராயம் எலி பிடிப்பதில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தான் எங்கள் வீட்டின் ஓரத்தில் இருந்த எலி வளையும்  அவர்கள் காலி செய்து பாதுகாப்பான இடம் தேடி போய்விட்டார்கள் ஆனால் சசிக்குமார் அப்படி அல்ல யாரும் ஏதும் கொடுத்தால் சாப்பிட்டு தொலைய மாட்டான் வீட்டில் எங்களுக்கு சமைப்பதுதான் அவனுக்கும்

எனவே அக்கம் பக்கத்தில் சொல்லிவிட்டு சென்றே ஆக  வேண்டும் எங்கள் அயல் வீட்டுக்காரர்கள் சிங்களவர்கள் நல்ல மனிதர்கள்  பார்த்துக்கொள்வார்கள் கிளம்பிவிட்டோம் நம்புவீர்களா ??? 3 நாள் எந்த உணவும் எடுக்காம படுத்த படுக்கையாகி கிடந்தான் , !!! ...நாம வந்து உணவு சமைத்து தந்த பிறகுதான் சாப்பிட்டான் இது எங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான் இவனாலே சில பயணங்களை தவிர்த்ததும் உண்டு

கருப்பன் விளையாடுவது பார்க்க ரொம்ப பிடிக்கும் எல்லா பூனயார்களையும் போலத்தான் தன்  வாலை தானே பிடிக்கும் பாரம்பரிய முயற்சி பல நூறாண்டுகால முயற்சி இல்லையா?? கருப்பனும் தன பங்குக்கு தன்  இனத்தின் கடமையை நிறைவேற்ற படாதா பாடு  படுவான் இதை ஓரமாக சசிக்குமார் ஆச்சர்யத்தை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருப்பான் ஹி .....ஹீ... சசியை வம்புக்கிளுப்பதில் கருப்பனுக்கு அலாதி ப்ரியம்  அதுவும் தொங்கும் அவன் காதுகளை அசைத்து  பார்க்க பயங்கர இஷ்டம் அவனுக்கு ... சசி கடுப்பானாலும் ஒன்றும் செய்ய முடியாது காரணம் அவனை கட்டிப்போட்டிருப்பது  கருப்பனுக்கு  தெரியும்


கருப்பனை வைத்துக்கொண்டு வீடு கூட்டிப்பெருக்க   ஐயோ... அம்மா படும் கஷ்டம் இருக்கே தும்பு தடியின் அசைவை பாய்ந்து பிடிக்க கருப்பன் தொடர்ந்து முயற்சி செய்து செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்வான் இதற்கு மத்தியில் அம்மாவுக்கு கருப்பனுக்கும் இடையில் நடக்கும் சம்பாசனைதான் செம்ம ஜாலி ! ஆனால் இது ஒரு வித்யாசமான உணர்வு எதிர்முனையில் இருந்து பதில் வராது என்று தெரிந்த அதனிடம் பேசுதல் கோபப்படுதல் சிணுங்குதல் அன்புபாராட்டுதல் என அநேகமாக பூனைகளுடனும் நாய்களிடமும்தான்  தான் நடக்குது பாம்புக்கூடயா  பேச முடியும் !!!  ஆனால் சில காலம் கடந்த பிறகு விளையாட்டு மறந்துவிட்டது சசியுடனும் நல்ல உறவு வளர்ந்துவிட்டது சசிகுமார் தூங்கும்போது அவன் கழுத்தின் மேல் ஏறி நம்மாலும் தூங்க ஆரபித்து விடுவான் செம நட்பு அது
Wednesday, April 16, 2014

திருமிகு மலிங்க

அப்போதே என் பெயரில் பல சாதனைகள் இருந்தன ...ஆனாலும் பலர் பார்வையில் நான்  முடிக்கு சாயம் பூசிக்கொண்ட ,காதுக்கு தோடு போட்ட ...,டட்டூ அடித்திருக்கும் ( கிட்டத்தட்ட ரௌடி ) ஒரு ஒழுக்கமற்றவனாகவே தெரிந்தேன். அதனாலேதான் இந்த பதவி என்னிடம் வர இவ்வளவு காலமோ என்னவோ.! கடைசி போட்டியில் பிடிஒன்றை தவறவிட்டபோது அணியின் தலைவனாக அவமானமாக இருந்தது ! ஆனால் அதற்காக என்னால் தலை  குனிய முடியாது அப்படி குனிந்தால் தலைவனாக அணியை என்னால் வழி நடத்த முடியாமல் போயிருக்கும். அதை அந்த நிமிடமே மறந்துவிட்டு அடுத்த பந்திலிருந்து அணியை மீண்டும் தன்னம்பிக்கையுடன் வழி நடத்தினேன் உலகக்கின்னத்தையும் வென்றேன் 


என் வெளித்தோற்றத்தை பார்த்து என்னை எடை போட்டபோதேல்லாம் என்னால் கிரிக்கட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே யோசித்தேன், எவருக்காகவும் என்னை மாற்றிக்கொண்டதில்லை மாற்றப்போவதுமில்லை, தலைமை பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை சிந்தனையில் இருந்ததெல்லாம் முடியுமான காலம் வரை கிரிக்கட் விளையாட வேண்டும் என்பது மட்டுமே ..இப்போதும் என்னால் ஆனதை சொல்லித்தருவேன் ஆனால் என் வெளிதோற்றத்தை கண்டு யாரும் என்னை எடை போட்டால் அது என் தவறு அல்ல 

லசித் மலிங்க ஒரு தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி அந்த செவ்வி முழுக்க மலிங்க கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை சொல்லும் செவ்வியாக இருந்தது 

Tuesday, April 15, 2014

சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது

புதுவருட வாழ்த்துக்கள் சில மாதங்கள் கழித்து மீண்டும் எழுதி பார்க்க மனம் சொல்லியது கடந்த 14 திகதி அதிகாலை KTV இல் வண்ண வண்ண பூக்கள் படம் பார்த்தேன் நீண்ட காலமாக பார்க்க ஆசைப்பட்ட படம் அதிகாலை பொழுது என்பதால் விளம்பர தொல்லையும் இல்லை அதிலும்  முழுமையாக இரண்டரை மணி நேரம் ஒரு படம் இடைவெளி இல்லாமல் விளம்பர தொல்லை இல்லாமல்  KTV ல பார்க்க கிடைப்பது அபூர்வம்

காட்டுக்குள் தனியாக நிக்கும் ஒரு பெண் அவள் மீது காதல் கொள்ளும் நாயகன் நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் இன்னுமொரு நாயகி பிரஷாந்தின் ஆரம்ப கால முகம் பாலுமகேந்திரா இயக்கம் என்பதால் மிகைபடுத்தாத நடிப்பு

பிரஷாந்த் மீது சராசரி ரசிகனுக்கு இருக்கும் கோவம் மிக சாதாரணமானது அவரின் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மட்டும் சில படங்களை தவிர்த்திருந்தால் இன்று பிரசாந்த் இன் நிலைமையே வேறு .ஒரு நல்ல நடிகனை நாசமாக்கிவிட்டார்கள் ...அடுத்தது தமிழின் மிக இயற்கையான இயல்பான அழகு கொண்ட நடிகைகளில் மௌனிகா , வினோதினி இருவருக்கும் முதல் 10 இடங்களுக்குள் கண்டிப்பாக இடம் இருக்கும் எவ்வளவு இயல்பு அதிலயும் வினோதினி இயல்பிலும் இயல்பு

ஒரு காட்சியில் விநோதினியை திருமணம் செய்ய ஆசைபடும் பிரசாந்திடம் எதோ தான்  செக்ஸுக்காக மட்டுமே பழகியதை போல சில வசனங்களை உச்சரிப்பார் வினோதினி கல்யாணத்துக்கு முன்னாள் உடல் உறவு என்பது எதோ மாபாதகம் போல காட்டப்பட்ட காலத்தில் பாலுமகேந்திரா அதை விரசமோ ஆபாசமோ இல்லாமல் இயல்பாக காட்டுகின்றார்  ,  அப்படி இல்ல தன்னால் நீண்ட காலம் வாழ முடியாது என்று பிரஷாந்தின் நண்பனிடம் சொல்லும் காட்சி என்று வினோதினி அழகு


மௌனிகாவின் இயற்கையான அழகு தமிழில் அபூர்வம் பாலுமகேந்திரா ரசனைகாரர் ....முள்ளும் மலரும் ஷோபாவுக்கு இயல்பான அழகு என்றால் மௌனிகா அதன் அடுத்த உயரம் ( இதுல முக்கியமானது இரண்டு பேரோடையும் பாலுமகேந்திரா கிசு கிசுக்கப்பட்டார் மௌனிகா இறுதி காலத்தில் அவரை மணந்துகொண்டார் )

எப்படியோ இந்த சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது சுவாரஷ்யம்  பின்னணி இசை என்னவோ அவ்வளவாக ஒட்டவில்லை ராஜா சாரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்

Sunday, September 29, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் (3)


பூனைகள் நாய்கள் மட்டும் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு எப்படி மனிதனுடன் ஆழமான உறவை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திக்கொள்கின்றன? என்ற கேள்வியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை மனிதன் கொடுக்கும் பயிற்சிகள் ஒரு கர
ணம் என்றாலும் முழு மாமிச பட்சிணியான நாய்கள் பூனைகள் இன்று மனிதனை போல எல்லாவற்றையுமே உண்டு வாழ்வது எப்படி சாத்தியமானது?

பூனைகள் வளரும்போது எப்படியெல்லாம் மனிதனோடு இயல்பாக ஒன்று கலக்கின்றன என்பதை கறுப்பனிடம் தான் கண்டுகொண்டேன்.   அவனிடம் மனித உணர்வுகள் அசாத்தியமாக நிறைந்துபோயிருந்தன  நிறையவே கோபம், பிடிவாதம், புரிந்துகொள்ளல் அன்பு, ஏக்கம் என்று நிறைய மனித உணர்வுகள் அளவுக்கு அதிகமாகவே அவனிடம் நிறைந்துபோயிருந்தன்

நிற்க


நான் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வந்து வீட்டில் என்னிடம் கொட்டிய பாசமும்  ஐயையோ..... ஆனந்தமே!!! ...கறுப்பனை அப்பா எப்படி வீட்டுக்கு கொண்டு வந்தார் என்ற கேள்விக்கு இரவில் தான் பதில் வாங்க முடிந்தது. இதற்கு மத்தியில் என்னை துரத்து துரத்தென்று துரத்தியடித்த அந்த நாய்குட்டி இன்னமும் நான் அவனை தாண்டி போகும்போதெல்லாம் எதோ வேண்டாதவனை பார்ப்பதுபோல முறைக்குறான்.

அப்பா வேலை செய்யும் பகுதியில் இருந்து கருப்பனை வீட்டுக்கு கொண்டுவர எந்த வாகனத்தையும் நம்ப முடியாது யாரும் பூனைகளை வண்டியில் ஏற்ற அனுமதிக்க  மாட்டார்கள். பையில் போட்டு பஸ்ஸில் யாருக்கும் தெரியாமல் கொண்டுவருவது கறுப்பனுக்கு ஆபத்தானது. இருக்கும் ஒரே வழி அட்டைபெட்டிக்குள் நாய்க்குட்டியை கொண்டுவருவது போல கொண்டுவருவதுதான்


 எங்க ஊரில் கிட்டத்தட்ட 98 வீதமானவர்கள் தேயிலையை நம்பி வருமானம் ஈட்டுபவர்கள்.(அந்த ஒரே காரணத்துக்காக இன்றுவரை என் மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாலாது ) நாங்களும் அப்படித்தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசம்  அப்பா ஒரு நிறுவனத்தில்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அம்மா தேயிலை தோட்டம் ஒன்றின் அலுவலக தலைமை  குமாஸ்தா  எங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களை விடவும் எவ்வளவோ பரவாயில்லை. ஆக  போக்குவரத்து என்றால் அங்க பேருந்துதான் ஒரே ஆபத்பாண்டவன். இப்படி வாகனங்களில் நாய்களுக்கு இடமுண்டு ஆனால் அட்டைபெட்டிக்குள் சுவாசிக்க சில துவாரங்களை உருவாக்கி அதற்குள் நாய்களை போட்டு பஸ்ஸில் கொண்டுவந்துவிடலாம் இடையில் பசிக்காமல் இருக்க பன் ஏதாவது உள்ளே வைத்துவிடலாம் இதே முறையில்தான் கருப்பனை ரொம்ப கவனமாக கொண்டுவர வேண்டும்.

ஆனால் இடையில் கருப்பன் கத்தி உள்ளே இருப்பது பூனைதான் என்று காட்டிக்கொடுத்துவிட்டால் கெதி  அந்தரம். எப்படியோ அப்படி எதுவும் நடக்கவில்லையாம் ரொம்ப சமத்தாக தூங்கிவிட்டானாம் பிரச்சினையே இல்லாம கறுப்பன் வீட்டில் லேண்ட் ஆகிட்டான்.

இது நடந்து ஒரு மாத இடையில் இதே முறையில் வீட்டுக்கு வந்த எip தான் என்னை கதற கதற துரத்தின அந்த சின்னப்பயல். :)

(தொடரும் )

Thursday, September 26, 2013

யாழ் பயண அனுபவம் 2

மொத்தம் 8 நாட்கள் யாழில் தங்கி இருந்த நாட்கள் எப்போதும் போல அழகானவை. கடந்த ஆண்டுக்கு முன்னைய ஆண்டு யாழ்பாணம் செல்லும் போது  இருந்த குழு இந்த முறை இல்லை. அப்போது எனக்கென்று எந்த பொறுப்பும் இருக்கவில்லை, அதே வேளை யாழ்பாணம் சென்றது முதல் தடவை என்பதால் ஒவ்வொன்றிலும் ஆச்சர்யம் நிறைந்து போயிருந்தது இம்முறை அப்படியல்ல ஒரு சில பொறுப்புகள் இருந்ததும் பழைய ஆச்சர்யம் மிஸ்ஸிங் .

சக்தியின் யாழ் கலையகம் அமைந்திருந்த பகுதியில் நிறைய கடை தொகுதிகள் அமைந்திருக்கும்  அதில் யாழ் விழிப்புலனற்றோர்  சங்கமும் தங்களுடைய கைவண்ணத்தில் உருவான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது. அதன் உறுப்பினர்கள் இருவர் பாதையில் நின்று அதிஷ்ட சீட்டுக்களை வித்துக்கொண்டிருந்தார்கள்

அதன் முன்னைய நாள் கலையகத்துக்கு சந்திக்க வந்த விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேச கிடைத்தது.  பேசும்போது அவர் எனது ஊர்காரர் என்றும்   10 வருடத்துக்கு முன்பு சக்தியின் ஊடாக யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணைந்ததாக கூறியிருந்தார் ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது பார்வை அற்றோருக்கு உதவுவதை விடவும் இந்த உலகின் உச்சகட்ட சந்தோசம் திருப்தி வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை ,

மறுநாள் கடை தொகுதிகளை தாண்டி செல்லும்போது மேற்படி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதிஷ்ட டிக்கட் விற்றுக்கொண்டிருந்தார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாத அவர் வாய் விடாமல் கூவிக்கொண்டே இருந்தது. என்னிடம் இருபது ரூபாய் தாள் இருந்தது அதை கொடுத்து ஒரு டிக்கட் கொடுங்கோ என்று கேட்க அவர் ஒரு டிக்கட் கொடுத்தார் எவ்வளவு தந்தீர்கள் என்று கேட்டார் 20 ரூபாய் என்று சொன்னேன் ஒரு டிக்கட் 10 ரூபாய்தான் என்று மீதத்தை  தர போனார் நான் வேண்டாம் இருக்கட்டும்  என்று சொல்லி நகரப்போக அவர் என் கையை பிடித்து வலுக்கட்டாயமாக பணத்தை தந்துவிட்டார் கொஞ்சம் கடுமையான குரலில் "பிடியுங்கோ" என்று சொன்னது அவரின்  கோபத்தை உணர்த்தியது.

ஏன் இப்படி செய்தார் நான் அதை உதவியாகத்தானே செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டு நடந்தேன் பிறகுதான் ஒரு உண்மை உரைத்தது. "அட கண் பார்வை இல்லாமல் ஒருத்தன் உழைச்சிட்டிருக்கான் ஒரே நிமிஷத்துல வெறும் பத்து ரூபாய நீட்டி அந்த உழைப்பாளிய கொச்சைப்படுத்தி பிச்சைக்காரனாக்க பார்த்திருக்கேன்னு" நெனச்சப்போ மனசே இறுகிவிட்டது. என்னை அறியாத ஒரு கூச்சம் அருவருப்பு  மனதுக்குள்  தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மறுநாள் முதல் வேலையாக அந்த வழியில் அவரை தேடி பிடித்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சாந்தமானது மனது.  இதில ஆச்சர்யம் என்னனா அவர் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்திருந்தார் என்னை பொருத்தவரைக்கும் நான் செய்தது மிக பெரிய தவறு

ஊனம் என்பது ஈனமல்ல ஊனத்தை குறையாக நினைக்கும் மனதுதான் ஈனம்

Wednesday, September 25, 2013

யாழ் பயண அனுபவம் - 1

பயண அனுபவங்களை  பதிவிடுவதென்பது ஒரு அலாதியான விடயம்.  பயணம் அனுபவிக்க வேண்டிய அழகான புத்தகம் போல. ஒவ்வொரு இடமும் ஏதாவது ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுக்கும் புதிதாய் சந்திக்கும் இயற்கையின் மாற்றங்கள், சில கிலோமீட்டர் வித்தியாசத்திலேயே மாறும் இயற்கையின் வடிவங்கள் மனிதர்களின் மொழி நிற வேறுபாடுகள்  என்று ஒவ்வொரு பயணமும் "அகிரா குரோசோவாவின்" படங்கள் கொடுக்கும் எல்லா உணர்வுகளையும் அதன் உச்சத்தில் சேர்த்து கொடுக்கின்றது

எனக்கு உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வாழ்நாள் லட்சியமாகவே மாறிப்போய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் மிருக பலம் கொண்டு உறங்கிக்கொண்டிருக்கின்றது ஹி ஹீ ...இலங்கை பயணம் செய்ய மிக அழகான ஒரு நாடு. சந்தேகமே இல்லை உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் இயற்கை மாற்றங்களை தேடி தமது தேச எல்லைகளை கடந்து செல்ல வேண்டிய நிலைமை. ஆனால்  இலங்கை அப்படி அல்ல "ஒரு மாவட்டத்துக்கு ஒரு காலநிலை இயற்கை வடிவ மாற்றம், சில நேரங்களில் ஒரு பிரதேசத்துக்கு  பிரதேசம் கூட காலநிலையில் மாற்றம் காட்டுவது" இலங்கையை நினைத்து  எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கின்றது.

வடக்கு கிழக்குக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அதை நான் உணர்வு சார்ந்த விடயமாகவே எண்ணுவதுண்டு (இதை என் அருகில் இருக்கும் பலரே  கேலியாக பேசுவதுண்டு ) திரும்பும் பக்கம் எல்லாம் தமிழ் வாச
சக்தி fm குழுவுடன் நல்லூர் ஆலய முன்றலில்


னை என்பது  எனக்குள் பல உணர்வுகளை கிளரச்செய்து எதோ ஒரு பெருமிதத்தை கர்வத்தை  கொண்டுவரும்.
யாழ்பானம் தனியாக செல்வது என்பது வேறு ஆனால் "சக்தி" என்ற மிக வலுவான பிரம்மிக்க வைக்கும் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு ஊடகத்துடன் நானும் ஒரு அங்கத்தவன் என்ற வகையிள் செல்லும் போது கிடைக்கும் அனுபவங்கள் அபாரமானவை அருமையானவை.

இம்முறை  யாழ் சென்றது சக்தியுடன் என் கடைசி பயணமாக கூட இருக்கலாம் என்பதால் நிறைய ரசித்தேன் ...நிறைய சிந்தித்தேன் நிறைய உணர்ந்தேன் ...இடையில் வடக்கு மற்றும் நான் சார்ந்த மத்திய மாகானத்துக்குமான தேர்தலும் நடந்து  முடிந்துவிட்டது. வடக்கில் மக்களின் இயல்பான போராட்ட குணமும் தமிழனுக்கே உரிய திமிரும் வெளிப்பட்டுவிட்டது மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் என்பது இலங்கையை பொறுத்த வரைக்கும் ஒரு கேலிக்கூத்தான விடயம்தான். ஆனாலும் "கடுகு என்றாலும் அதை என்னவன் தரவேண்டும் நீ வேண்டாம்" என்று மக்கள் கொடுத்த அடி வரலாற்று  திருப்புமுனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா  மிக பலம் வாய்ந்த பழுத்த கல்விமான் அரசியலின் சானக்கியங்களுக்குள் எப்படி தமிழ் மக்களின் விடியலுக்காக காய்களை  நகர்த்துவார் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.

வட மாகாண முதலமைச்சர்
மறுபக்கம் நான் சார்ந்த மலையக தமிழர்கள் இனியாவது கிடைக்கும் என்று 100 வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சலுகைகளுக்காக மீண்டும் அணி திரண்டு உரத்த குரலில் வாக்களித்துள்ளனர்.ஆனால் உரிமைகள் கிடைத்தால் சலுகைகள் தானே கிடைக்கும் என்பதை என் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றார்கள் என்பதை காண ஆசையாக உள்ளது.  வழக்கம் போல  இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியும் தொழிலாளர் தேசிய சங்கம் அடுத்த இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது மலையகத்தை பொறுத்த வரைக்கும் அங்கும் ஒரு வரலாற்று வெற்றி தமிழர்கள் சார்பில் நிலைநாட்ட பட்டுள்ளது தமிழ் பிரதிநிதிகள் 11 பேர் என்பது அர்த்தமற்ற அதே நேரத்தில் ஒரு வரலாற்று வெற்றிதான் .

Wednesday, May 15, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் ( இரண்டாம் பகுதி )

பூனைகளை வாகனத்தில் ஏற்றுவதோ அல்லது வாகனத்தை   கொண்டு ஏற்றுவதோ மிகப்பெரிய அபசகுனமாக பார்க்கப்பட்ட இடம் அது. ஒரு முறை கேசவன் குடித்து  வந்து பூனை மீது வண்டியை பார்க் பண்ணியதன் பின் அவன் பட்ட கஷ்டம் கொஞ்ச நெஞ்சமல்ல, சந்தனம் முதலாளியும் புது லாரி ஒன்று வாங்கி முதல் நாளே கொண்டுபோய்  முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் செய்த ஒரே தவறு லாரி புறப்படும் போது  குறுக்கே சென்ற நம்ம நண்பரை கண்டுகொள்ளாமல் விட்டது  இது போன்ற பல உதாரணங்கள் உண்டு இதனால் பூனை குறுக்கே போனாலோ அல்லது வண்டியில் அடிபட்டாலோ குறித்த வாகனம் தூய்மையாக கழுவப்படும் 3 நாட்களுக்கு எங்கேயும் நகராது. 

இப்போ எப்புடி இவனை கொண்டு போகப்போகிறார்  என்ற சிந்தனையோடு நான் ரொம்ப தூரம் போய்விட்டேன். நாட்கள் கடக்கும் வேகத்தை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கின்றது இரண்டு மாத்திரை இடைவெளிக்குள்   மூன்று மாசம்   ஓடிவிட்டது.  பெறுபேறுகளும் வெளிவர போகின்றது என்ற தகவல் வரவே நானும் ஊருக்கு  திரும்பிவிட்டேன். 

அடடா 3 மாசம் நம்மள பார்க்காம குடும்பம் எவ்வளவு கஷ்டபட்டிருக்கும் இன்னைக்கு நமக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் அம்மா அப்புடியே  ஆரத்தழுவி அழுது தீத்துடுவாளே நாமளும் முகத்த கொஞ்சம் சென்டிமன்டா வச்சுப்போம்...... தம்பி...... கேட்கவே வேணாம் பாசத்துல அவன் அம்மாவ விஞ்சுனவன் ஹ்ம்ம் ......இப்டி பல எண்ணங்களுடன் வீட்டிற்கு வந்து இறங்கியாச்சு , கதவை திறக்கிறேன் எதிர்பார்த்தா  மாறியே அம்மா முன்னால நிக்குறாங்க .........."டே தம்பி வா.. வா... வாடா இந்த பக்கத்து கடைக்கு பொய் 100 g புளி வாங்கிட்டு வந்துடுடா இப்போதான் பார்க்குறேன் டப்பா காலி ..இந்த சின்னவன முதல்ல இருந்து சொல்லிட்டே இருக்கேன்  .இந்த பொட்டிக்கு முன்னால இருந்து நகர மாட்டேன்றான் இந்த tv ய உடைச்சு வீசுறேனா இல்லையா பார்."....   கையில இருந்த பைய வாங்கிகிட்டே சொல்லிட்டு உள்ள  போய்டாங்க  , தம்பி   ஒரு ஹலோ சொல்லிவிட்டே கிரிக்கட் ...நல்ல குடும்பம்யா ..ஹ்ம்ம்ம்ம் .....   

 என்ன   ஆரம்பமே இப்புடி டஸ்  ஆச்சே ...இதான் அதிகமா சினிமா பார்க்க கூடாதுன்றதுன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே கடைல புளி வாங்கி வீட்டு   வாசலுக்கு வந்தப்போ ....அவன் என்னை பார்த்து முறைக்கிறான் யாரிவன் ?புதுசா இருக்கானே ? இந்த  ஏரியால முன்ன  பின்ன பார்த்ததே இல்லையே? இவன் எதுக்கு நம்ம வீட்டுல இருக்குறான்  .....நாசமா போச்சு இந்த கேள்வியெல்லாம் அவனுக்கும் வந்துடுச்சு போல சடுதியாக என்ன நினைச்சானோ உர்ர்ர்ர்ர்ர்ர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு துரத்த ஆரம்பிச்சுட்டான் விட்டானே ஓட்டம்....... 

 நமக்கு நாய்னா எப்பவும் ஒத்துவராது ,அந்த நேரம் மட்டும் எங்க இருந்துதான் ஓட்டம்  வருமோ கிட்டத்தட்ட பத்து நிமிஷம் நான் ஓட அவன்  துரத்த  ,அவன் துரத்த நான் ஓட ஒரே ரகளை எதிர்பார்க்காம தடுக்கு பட்டு விழுந்துட்டேன்.!   என் மேல அவனும் "வவ்"  நு கத்திட்டே விழுந்துட்டான் அம்மா இத கொஞ்சமும் எதிர்பார்க்கல   அது சரி மகனுக்கு அடிபட்டா யாருக்குதான் பொறுக்கும் ரொம்ப பதறி போய்ட்டா ஓடிவந்து ரொம்ப வலிக்குதாபா ... நு   சொல்லிகிட்டே நாய் குட்டிய தூக்குறா .....கூடவே குடு அந்த புளிய நு சீக்கிரம் எழுந்து வா வந்ததும் வராததுமா நாய் குட்டியோட விளையாண்டுகிட்டு!!!! 

 .........எது விளையாடிட்டிருந்தணா????     .....என்ன ஆச்சு  நம்ம குடும்பத்துக்கு மகனுக்கு அடிபட்டது கூட தெரியல நாய்க்குட்டிய கொஞ்சிட்டிருக்காங்க .... யார் இவன் ? நம்ம  வீட்டுக்குள்ள என்னையே விட மாட்டேன்றான் ????

அப்போ கருப்பன் எங்க ???? 

தொடரும் ..........

ஒரு கதை

எங்கே படித்தோம் என்று சரியாக நினைவில் இல்லை அநேகமாக ஒரு  வலை தளத்தில்தான் படித்ததாக ஞாபகம் வலியை  சகித்துக்கொள்வதற்கான   அவசியத்தை அழுத்தமாய் சொல்லும் ஒரு குட்டிக்கதை அடிக்கடி நினைவில் வந்து சமரசம் செய்கின்றது அந்த வலை தளத்துக்கு நன்றி ( மன்னிக்கவும் பெயர் நினைவில் இல்லை )

ஒரு ஆலயத்தின்  படியில் இருக்கும்   ஒரு கல் சிற்பம் ஒன்றிடம்   கேட்கின்றது. நீயும் என்னை போன்று ஒரு கல்தான். என்னை போலத்தான் நீயும் ஆனால் உன்னை வணங்குகின்றார்கள் , என்னையோ மிதிக்கின்றார்கள் ஏன் இந்த பாகுபாடு உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?

சிற்பம் அதற்கு பதில் சொல்கின்றது நீயும் நானும் ஒன்றுதான் ஒரே இடத்தில்  இருந்துதான் வந்தோம் என்னை சிற்பி  செதுக்கும் போது  நான் வலியை பொறுத்துக்கொண்டேன் எவ்வளவு என்னை அடித்தாலும் அசராமல் நின்றேன் நான் சிற்பம் ஆகிவிட்டேன் என்னை வணங்குகிறார்கள், நீயோ சில அடிகளிலேயே வீழ்ந்துவிட்டாய் வலியை சகிக்க முடியாமல் ஒத்துழைக்க மறுத்துவிட்டாய் இன்னும் கல்லாகவே இருக்கின்றாய் ...

Wednesday, May 8, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும்

திடீரென்று வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் என்று வீட்டில் யாருமே நினைத்து பார்த்ததில்லை,  இப்போது இருப்பது சொந்த வீடு என்றாலும் பெரியளவு வசதி கிடையாது போகப்போகும் இடம் தற்காலிகமானதுதான் ஆனால்  கொஞ்சம் வசதியான இடம் எனவே அரை மனதுடன் அங்கே செல்ல தயாரானோம், 

பிறந்து வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட 17 வருடம் அந்த வீட்டுடன் அதுதான் உலகம் என்று வாழ்ந்திருந்ததால் எனக்கும் கொஞ்சம் கஷ்டம். எல்லா பொருட்களையும் எடுத்து கொண்டு வண்டி முன்னாள் கிளம்பி விட்டது பின்னால் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அப்பா தலைமையில் குடும்பம் கிளம்புகிறது. இந்த இடத்தில்தான் சிக்கல் கருப்பனை காணவில்லை!!! ....... காலையில் இருந்து யாரும் பார்க்கவும் இல்லை உடனே கிளம்பியாக வேண்டும் என்று சாரதி கூப்பிடுகிறான், சசிகுமாரை பாதுகாப்புக்காக பொருட்களுடன் அனுப்பிவிட்டோம் ஆனால் கருப்பன் இல்லாமல் எப்படி போவது? நான் சென்று கொஞ்சம் அக்கம் பக்கத்தில் பார்த்துவிட்டு உடனே வந்துவிடுகின்றேன் என்று ஓடி தேடி பார்த்ததில் தோல்விதான் கருப்பன் இல்லை, என்ன நடந்தது நேற்று இரவு ஏதும் அவனை திட்டினீர்கலா? என்று அம்மா கொஞ்சம் கடிந்துகொள்ள நான் ஏன் திட்டுறேன் நீதான் எப்பவும் திட்டிடிருப்ப என்று அப்பா கடிக்க ஐயோ  சண்டயாகிடுமோ என்று பயந்தால் இல்லை .  


சரி இரண்டு நாட்கள் கழித்து வந்து கண்டிப்பாக அழைத்து வருவதாக அப்பா உறுதி மொழி கொடுத்த பின்பு அரை மனதுடன் நாம் கிளம்பி விட்டோம். கருப்பன் கொஞ்சம் திமிர் பிடித்தவன் யாரும் அவனை அதட்டுவது அவனுக்கு பிடிக்காது முகத்தை திருப்பிக்கொள்வான், உண்ணாவிரதம் இருப்பான்,    சில நேரங்களில் மௌன விரதம் இருப்பதும் உண்டு ஆனாலும் வன்முறையில் இறங்கமாட்டான்  அஹிம்சை போராட்டத்துக்கு நல்ல உதாரணம் அவன் ! காணாமல் போனது கிடையாது எங்கே சென்றாலும் இரவுக்குள் வீடு வந்துவிடுவான். அன்று என்ன நடந்தது ஒரு வேளை  நாம் அந்த வீட்டை காலி செய்வது அவனுக்கு பிடிக்க வில்லை போல! என்று நானும் தம்பியும் பலமாக பேசிக்கொண்டே புது வீட்டுக்கு சென்றுவிட்டோம் போக முதல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் "கொஞ்சம் கருப்பனை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு போக மறக்கவில்லை. அயலவர்களுக்கும் கருப்பன் மீது நல்ல அன்பு இருந்தது 


கருப்பன் அறிமுகம்  
...........................................

அந்த நாள் இன்னமும் நினைவில் இருக்கின்றது. ஒரு பதினாறு வயது இருக்கும் சாதாரண தரம் பரீட்சை முடிந்த நேரம் ( + 1 தேர்வு ) சில நாட்கள் ஊர் சுத்தலாம் என்ற எண்ணத்தில் ஊரை விட்டு கிளம்பி விட்டேன். போகும் வழியில் அப்பா தொழில் பார்க்கும் இடத்திற்கு சென்று செலவுக்கு பணமும் வாங்கிக்கொள்ள வேண்டும், அப்படி காலையிலேயே அப்பாவின் வேலை தளத்திற்கு சென்றபோதுதான் கருப்பனை முதல் முறை கண்டேன் "ஒரு அட்டைபெட்டிக்குள் இருந்து மியாவ் ..... என்று வெளியே வந்தான்".  


அப்போது அவன் பிறந்து கொஞ்ச நாள் கூட இருக்காது.ஒரு கைக்குள் அடக்கி விடலாம்  ஏன் கருப்பன் என்று பெயர் கூட பிறகு வைத்ததுதான் நல்ல கரு கரு தோற்றம் "வருங்காலத்தில் எலிகளை கட்டுப்படுத்தும் வித்தையில் சிறப்பான்" என்பதை காட்டியது.  குடும்பம் இருக்குற நிலைமைல இப்போ இன்னொருத்தன் வேறயா? எப்புடி சமாளிக்க போறாங்க ? என்ற கேள்வி வந்தாலும் ஒரு பக்கம் நிம்மதி காரணம் நான் இன்னும் மூன்று மாதங்களுக்கு ( பெறுபேறுகள் கிடைக்கும் வரை ) வீட்டு பக்கம் போக போவதில்லை என்னை கட்டி காக்குரத விட இவனை இலகுவாக கட்டி காக்க முடியும் என்ற வகையில் நிம்மதி 

அப்பா இருக்கும் இடத்துக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் பயணிக்க வேண்டும் எப்படி இவனை கொண்டு செல்வது என்று அப்பாவிடம் கேட்டேன். (அவன் இவன் என்று அழைப்பதற்கு காரணம் ஆண் என்பதால்தான், பெண்ணாக இருந்தால் வீட்டில் அனுமதி கிடையாது பிறகு குழந்தைகளையும் சேர்த்து பராமரிக்க வேண்டி வரும் அது சுமை என்பது ஊர் வழக்கம்) எனவே வாங்கும் போதே ஆண் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் அப்பா வாங்கி இருப்பார் இன்னுமொன்று ஏற்கனவே வீட்டில் ஒருத்தி இருந்தாள் ஆனால் அவளால் பிரயோசனமே இல்லை ( எலி பிடிப்பதில்தான்  தான் ) நேரத்திற்கு சாப்பிட்டு தூங்கிவிடுவாள் அவளால் எலிகளுக்கு மட்டும்தான் சந்தோசம் பிறகு திடீரென எங்கேயோ போய்விட்டாள்.  ( ச்சே இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்து ஓடுகாலி கழுத..... ச்சே.... பூனை இப்படி எங்கயோ ஓடிடுச்சேனு அம்மா திட்டினது நினைவில் இருக்கு ). "எனவே நல்ல திடகாத்திரமான ஆண்தான் எலிகளை கட்டுபடுத்த முடியும் என்று பலமான நம்பிக்கைதான் கருப்பனை தேடி தந்திருக்கின்றது  என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.  

எப்படியும் கருப்பனை வீட்டுக்கு கொண்டு செல்வது ரொம்ப கஷ்டமான காரியம் பூனைகளை வண்டியில் ஏற்றுவது ஒரு அபசகுனமாக பார்க்கப்படும் ஊர் எங்க ஊர் நடந்தும் போக முடியாது பின்னே எப்படி இந்த மனுஷன் கருப்பன் என்னும் இந்த பூனை சிறுவனை வீட்டுக்கு கொண்டு போகப்போகிறார் என்ற சிந்தனையுடனேயே நான் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன் ...........


 (தொடரும் )
Copyright © 2014 நட்சத்திரவீதியில்