Tuesday, January 22, 2013

" கடிநாய் கவனம் "



"நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையில் பெரும்பகுதி பிரயாணங்களுக்காக காத்திருப்பதிலேயே செலவாகின்றது" என்றால் தவறில்லை அந்த காத்திருப்பு ஒரு இனிய காத்திருப்பு அல்ல எரிச்சலை கொண்டுதரகூடியது.  கிராமத்துப்பக்கம் ஒரு பேருந்தின்  வருகைக்காக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்த நாட்களும் உண்டு. ஒரு பேருந்தில் இருந்து இன்னுமொரு பேருந்து அதிலிருந்து இன்னுமொரு வண்டி என்று இயங்கும்  நாளில் மூன்றில் ஒரு பங்கை பிரயாணமும் அதற்காய் காத்திருக்கும் நேரங்களும் தின்றுவிடும். 

எனக்கு இதில் உடன்பாடே கிடையாது இதனால் காத்துக்கொண்டு ஒரு இடத்தில் நிற்பதையும் விட நடந்துவிடுவது மேல் என்பதே எண்ணம் , அதை பழக்கமாக்கியும் வைத்திருந்தேன். அது இன்றும் தொடர்கின்றது. பெரும்பாலும் இரவில் நடப்பது ரொம்ப பிடித்திருந்தது. ஊரில் இரவு 7 மணி ஆனாலே கடுமையாக இருட்டிவிடும் அந்த கருமையின் கடுமையையும் விழுங்கும் வீதத்தில் குளிரும்.... ஊரில் நள்ளிரவு தாண்டியும் ஒத்தையாக  நடந்து செல்லலாம்.  பாதுகாப்பு குறித்த பயமே எழாது சில நாய்களிடம் இருந்து தப்பினால் போதும்  .அதற்குள் நடப்பதெல்லாம் மிகப்பெரிய அனுபவம். 

பௌர்ணமி நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் இருளை தவிர எதுவுமே தெரியாது நாம் ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் செல்வது போல இருக்கும், எதோ ஒரு அசாத்தியமான உருவம் நம்மை விழுங்குவது போல உணர்வு தரும். கொழும்புக்கு வந்த பிறகு இரவில் நடப்பதற்கான தேவை வெகுவாக குறைந்துவிட்டது, அப்படியே நடக்கும் வாய்ப்பிருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்த முயல்வதில்லை காரணம் அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்ற சந்தேகம் ,  அப்படியே நடந்தாலும் இந்த செயற்கை வெளிச்சம் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசத்தை குறைத்துவிடும் என்பதால் நடந்து செல்வது திருப்தியாகவும் அமையாது .


ஆனால் இங்கும் நடந்துவர ஆசைப்படும் ஒரு இடம் உண்டு. அது எமது அலுவலகத்துக்கு வரும் வழி, வண்டியில் வந்தால் வெறும் 7 நிமிட தூரம் நடந்தால் 20 நிமிடம் . ஆனால் இரவு நேர கடமைகளின் போது  அந்த வழியில் பெரும்பாலும் நடந்து வரவே ஆசைப்படுவேன், காரணம் பாதையின் இரு மருங்கிலும் இருக்கும் மிகப்பெரிய வயல்வெளிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சை பசேலென்று தெரியும் அந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் நடப்பது ஏதோ புதுமையான ஒரு உலகத்தில் நடப்பது போன்றிருக்கும். வயல்வெளிப்பாதைக்குள்  வந்ததுமே அங்கிருக்கும் ஒவ்வொன்றும் என் வருகைக்காகவே காத்திருந்து சத்தமிடும், சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் , நான் ரசிக்கின்றேன் என்ற நாணமோ என்னமோ நெற்கதிர்கள் அடிக்கடி தலையை குனிந்துகொள்ளும், 

அதில் பெரும்பாலும் 10 மணி அளவில் நடந்து வருவது மிகவும் பிடிக்கும் வயல் வெளிகளை   கடந்து செல்லும் போது கேற்கும் விதம் விதமான பறவைகளின் சத்தங்களை ஆழமாய் அனுபவிப்பதுண்டு. அண்ணாந்து வானத்தை பார்த்தபடி நடப்பதும் ரொம்ப பிடிக்கும் , காதுகளுக்குள் பறவைகளின் சத்தங்கள் ,காற்றின் ஓசை, மெல்லிய குளிர், காற்றில் நெற்கதிர்கள் அசையும் அழகு மெல்லிய ஒளியில் தெரிவது  என்று அத்தனையும் கடந்து நம் முன்னே "நீ ஒன்றும் இல்லை" என்று  சொல்வதுபோல மிகப்பெரிய அகன்ற திரையாக காட்சி தரும் வானம் ஆகா .... இவற்றில் இருந்து ஏதோ ஒரு சந்தோசம் கிடைக்கின்றது என்பதை உணரும்போது     ஒரு "அகந்தயில்லாத கர்வமும் வருவதுண்டு" ... ஆனால்  அந்த பாதை அவ்வளவு தூரம் பாதுகாப்பானதும் அல்ல 

நான் இருபது நிமிடங்கள் கடந்து வரும் அந்த பாதையை சூழ அமைந்துள்ள கிராமம் முழுவதும் சிங்களவர்களே வாழ்கின்றனர். மொழி தெரியாத ஒருவனாக அதை கடந்து வருவதில் உள்ள த்ரில் ரொம்ப பிடிக்குமென்பது இன்னுமொரு காரணம் , அடுத்தது திருடர்களும் அதிகம் என்று கேள்விபட்டிருக்கின்றேன் ஒன்று என்னை திருடன் என்று யாரும் நினைத்துவிடும் வாய்ப்பும் உண்டு சின்னதாக ஒரு சந்தேகம் வந்தாலும் அவ்வளவுதான் மொழியும் தெரியாது என்பதால் பின்னி எடுத்துவிடுவார்கள் அதிலும் தமிழ் என்று தெரிந்தால்???? ...அந்த த்ரில்லும் பிடிக்கும் ,


இன்னுமொரு சிக்கல் நாய்கள்.. கடி நாய்கள். கிட்டத்தட்ட 15 வயது வரையில் நாய்கள் என்றாலே அலறி அடித்து ஓடிவிடும் பழக்கம்  இருந்தது. ஆனால்  இப்போது நாய்களை எவ்வளவு கொடூரமான நாய்களாக இருந்தாலும் சமாளிக்கும்வித்தை என்னவென்று தெரிந்துவிட்டதால் பாதையை கடக்கும் நிமிடங்களில் நாய்களை இலகுவாக சமாளிக்க முடிகின்றது. நாய்களிடம் ஒரு பண்பு உண்டு நாம் அவற்றின் குரலுக்கு அசைவை காட்டினால்தான் அவை பிரச்சினை கொடுக்கின்றன ( react  பண்ணினால் ) எந்த சலனமும் இல்லாமல் அவற்றின் குறைப்பை சட்டை செய்யாமல் நடந்துகொண்டே இருந்தால்  சில நேர பின்தொடறலின் பின் அவை தாமாக அடங்கிவிடுகின்றன.இவன் பயணத்தால் நமக்கு பாதிப்பு இல்லை என்று தாமாக விலகி நமக்கு வழி விட்டு விடுகின்றன!.  இதுதான் மனிதர்களை சமாளிக்கும் வித்தையும் கூட ஆனால் துரதிஷ்டவசமாக சில  மனிதர்கள் நம் பயணத்துக்கு   அவ்வளவு நாகரீகமாக  வழி விடுவதில்லை ......! தமக்கு பாதிப்பே இல்லாவிட்டாலும் ....     ( " கடிநாய் கவனம் ")

2 comments :

  1. இரவின் அழகை ரசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்ல..அந்த வகையில் நீங்க பெரிய அதிஷ்டசாலி...

    நான் ரசித்த வரிகள்:
    'வயல்வெளிப்பாதைக்குள் வந்ததுமே அங்கிருக்கும் ஒவ்வொன்றும் என் வருகைக்காகவே காத்திருந்து சத்தமிடும், சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் , நான் ரசிக்கின்றேன் என்ற நாணமோ என்னமோ நெற்கதிர்கள் அடிக்கடி தலையை குனிந்துகொள்ளும், '

    எல்லா பயணத்திற்கும் வழி சுலபமாக அமைந்து விட்டால்..அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது???!!!

    இந்த அருமையான எழுத்து படிவங்கள் நூல் வடிவம் பெறவேண்டும் என அடியேனின் தாழ்மையான விண்ணப்பம்.

    (பின் குறிப்பு; சிங்கள மொழி கத்துக் கொள்வதால எதாவது நஷ்டமா...என்ன?)

    வியக்கிறேன்...
    உன் ரசனை கண்டு!
    ஆகி விடாதே...
    ஞானியாய்...
    நான் உன்னை..
    சந்திக்கும் முன்பு!

    பிரியமுடன் சகி..

    ReplyDelete
  2. இதை விமர்சிக்கும் அளவுக்கு நான் வளரவில்லை....ஆனால் இந்த இடுகை எனக்கு மிகவும் பிடித்துள்ளது அண்ணா.......எனக்கு இரவில் தனிமையில் இவ்வாறு நடந்து செல்ல மிகவும் பிடிக்கும்......ஆனால் எங்களுடைய ஊரில் இதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.....ஒரு விடயத்தை மட்டும் சொல்லுவாங்க பெண் பிள்ளைகள் நாட்டு நிலைமையில் தனியாக பகலில் செல்வதே பயங்கரம்னு சொல்லியே எங்களுடைய சுதந்திரத்தை பறிக்கிறார்கள்.....இந்த் வார்த்தைகளும் ஒரு நாள் மாறும் நம்புகிறேன்......இருளின் கருமையை வீட்டிலேயே வெளிச்சம் இன்றி இரசிக்க மிகவும் பிடிக்கும்......அண்ணா பேருந்துக்காக நாங்களும் காத்திருந்தது அந்த காத்திருப்பு ஒரு இனிய காத்திருப்பு அல்ல எரிச்சலை கொண்டுதரகூடியது உணரிந்து இருக்கிறேன்......எனக்கு நாய்கள் நண்பர்கள்........
    எனக்கு இதில் உள்ள அனைத்து வரிகளுமே பிடித்து இருக்கு அண்ணா......மிக்க நன்றி,,,,,,,,,,,,,,

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்