Sunday, October 21, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ .. ( அறிந்ததை உளறுகிறேன் ) - 3


ஞாயிறு மாலை நேரம் கடைசி நேர பரபரப்பை வேண்டுமென்றே உருவாக்கும் என் கோனாங்கி தனத்திற்கு அன்றைய நாளும் தப்பவில்லை , நான்கு மணிக்கு அலுவலகத்தில் நிற்க வேண்டும்... ( இப்போ யோசிச்சு என்ன பிரயோசனம் ஏகன் கிற மொக்க படத்த பதினாறாவது தடவையா கலைஞர் டி வீல   முடியிற வரைக்கும் பார்க்கும் போது யோசிச்சு இருக்கணும் )  என்னை நானே திட்டிக்கொண்டு ஓடினேன்... நடந்தேன்... ஓடினேன் , சும்மா சொல்லக்கூடாது அலுவலகம் இருக்கும் பண்ணிபிட்டியாவுக்கு தெகிவளை இல்  இருந்து பத்து நிமிடத்துக்கொரு தடவை பஸ் இருப்பதால் ஓகே ஓகே .... அரக்க பறக்க அவசரமாய் ஓடி வந்து ஏறுவதற்கும் வண்டி  கிளம்புவதட்கும் சரியாய் இருந்தது, இரவு  நிகழ்ச்சில  என்ன என்ன பேசலாம் என்றெல்லாம்... " கிழிச்ச அவ்ளோ எல்லாம் சிந்திச்சா  நீ   ( மைன்ட் வாய்சு...)....

ஆ..... ஆகா ... அடடா  என்னா ஸ்பீடு  மனுஷன் யார்கூட என்ன கோவமோ " அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் யா இருக்கு " ஓகே நேரத்துக்கு அலுவலகம் போய்டலாம் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே " ( மைன்ட் வாய்சு  இல்ல மைன்ட் சாங்கு ...) சடார்னு வண்டி நின்னாலும்  சாங்கு நிக்கல , முதல்ல ஒரு வயசான பாட்டி அவங்க பின்னால யம்ம்மா ..... கொழும்புல நமக்கு பிடிச்ச விசயங்கள்ல இந்த சகோதர மொழி பொண்ணுங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு " "என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் " ( இப்போ மைன்ட்  சாங்கு இல்ல வண்டி நிறுத்துன இடத்துல இருந்த கடைல ரேடியோ ...)... பொண்ணுக்கு பின்னால ச்சே சீ ... அப்டி இல்ல அவ பின்னால ஒரு மனிதர் அடடா ... பார்வை இல்ல, கண் பார்வை இல்லாத ஒருத்தர் தடுமாறி வண்டில ஏற , உதவியா கண்டக்டரும் உதவ எனக்கு முன் சீட்ல உட்கார்ந்துட்டார். அவருக்கு பக்கத்துல வயசான பாட்டி.... என் பக்கத்துல..... ( ஆஹா... கனவே தானா... மறுபடி மைன்ட் சாங்கு ) .... 

பக்கத்துலையே வந்து உட்கார்ந்த சமந்தாவ பார்க்கனும்னு மனசு போகுது ( நிஜமா நம்ம நடிகை சமந்தாவே தோற்று போய்டுவாங்க ) ஆனா நமக்கு இயல்பாவே கொஞ்சம் இல்ல நெறைய கூச்சம் நாள மனசு போற பக்கம் கண் போகல "ஹா .... பரவாலயே வர வர கௌரவத்த காப்பாத்திக்கிரா மாதிரி எழுதி  பழகிட்ட ( மைன்ட் வாய்சு )  .. இருந்தாலும் கரண்ட் அடிச்சவன் மாறி அப்டியே முன்னாலேயே பார்க்க ஆசை... முடியுமா????.... முடியுமா????? ஹீ ஹீ ..." நெருங்க விடுதில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்"....( மறுபடி மைன்ட்  சாங்கு ) 

எனக்கு முன்னால இருக்குறவர பாருங்க.. பார்வயில்லாதது எவ்ளோ நல்லது இல்ல ( ச்சே வர வர ரொம்ப கீழ்த்தரமா யோசிக்க ஆரம்பிச்சுட்ட ) ஆனாலும் உண்மைதான் வண்டி ஒவ்வொரு ஸ்டாப்பா நின்னு நின்னு போகுது அப்புறம் மனசுக்கும் கண்ணுக்கும் இடைல உள்ள சண்டைல கண்ணுதான் ஜெயிச்சுது நா அவள பார்க்க..... அவள நான் பார்க்க .....பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் பார்த்த பக்கமே பார்திட்டிருக்க ... எனக்கே கொஞ்சம் கூச்சமாயிடுச்சு "ச்சே நம்ம பார்வை எவ்ளோ மட்டமா இருக்கு கண்ட இடத்துலயும் கண்ணு போக முதல்ல பார்வைய திருப்பு ... திருப்பு ...திருப்பு ..."( மைன்ட் வாய்சு இப்போ எக்கோ உடன் )   எப்டி ???? "ஹா அதான் இரவு  நிகழ்ச்சி அதபத்தி யோசிக்கலாமே " நெனச்சு  முடிக்குறதுக்குள்ள சிட்டு பரந்துடும்னு நெனைக்கவே இல்ல .. ( பறந்ததடி ஒரு பெண் புறா )அட அட என்ன நடந்தாலும் ஒரே பக்கம் முகத்த வச்சுட்டு.... சுக வாசிப்பா நீ ( பார்வையில்லாதவர் பார்த்து மைன்ட் வாய்சு )

  அட நாம இறங்க வேண்டிய இடத்துக்கும் வந்தாச்சே எல்லாரும் இறங்கியாச்சு நானும் இறங்கியாச்சு பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் அப்டியே உட்கார்ந்திருக்கிறார் பாவம் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சுன்னு தெரியல போல ... போய் சொல்லுவோமா ??? ஐயோ... மழை... குடையும் இல்ல அடுத்த வண்டிய பிடிக்கணும் ஓடு ... ஓடு .... 

அடுத்த வண்டியையும் பிடிச்சாச்சு வேலைக்கும் வந்தாச்சு ....பயங்கர குற்ற உணர்வு " ஒரு பொண்ண பார்த்து வழிய தெரியுது " ஒரு மனுஷனுக்கு உதவ தெரியலையே ... ச்சே அந்த மனுஷன் யாருமே இல்லாத வண்டில எல்லாரும் இருக்காங்கனு நெனச்சுட்டு இன்னமும் இருக்குமோ? இல்ல ஒருத்தரும் இல்லாத வண்டில யாராவது சண்டி புகுந்து மனுஷனோட பணத்த கிணத்த பரிச்சுடுமோ... அந்த பொண்ணு  ... ஆ ..அவள விடு அடுத்த நாள் அடுத்த வண்டி இன்னொரு பொண்ணு ஆனா அந்த பார்வை இல்லாத மனிதர் ( ச்சே என்ன   மனசு வண்டில இருந்து இன்னமும் இறங்கல ......)

 வண்டில கண்ட இடத்துல மேஞ்சி கண்டதையும் கற்பனை பண்ண வச்சு இறங்கினதுக்கு பிறகும் பல மணி நேரம் ஆகியும்  என் பார்வை இன்னமும் வண்டில ,  நான் போன அடுத்த நிமிஷம் யாரோ ஒருத்தன் உதவில அந்த பார்வை இல்லாதவர் இறங்கி போயிருப்பார் அடுத்த நிமிஷமே அந்த வண்டியின் சத்தங்களையும் மறந்திருப்பார் இல்ல ??? இதுல உண்மையிலேயே பார்வை பற்றி வருத்தப்பட வேண்டியது நானா??? இல்ல பார்வை இல்லாத அவரா??? .....

கொசுறு - "யாவும் கற்பனையே " (நம்புங்கோல் )

Sunday, October 7, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-1


(இந்த பதிவு ஒரு தொடர் பதிவு... சைக்கோ   என்று ரொம்ப சாதாரணமாக அடையாளப்படுத்தப்படும் பலர் பற்றியது வார்த்தை கோர்வைகள் சில நேரம் புரியாமல் இருக்கலாம் இரண்டொரு தடவை பொறுமையாய் வாசித்து பாருங்கள் .. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும்  சைக்கோ   தனத்தை அல்லது மன நிலை மாற்றத்தை பதிவிடும் ஒரு முயற்சி ..)

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மிகவும்  சிக்கலான வார்த்தைதான். அதில் பொதிந்து போயிருக்கும் அர்த்தமும் மிக  ஆழமானது. ஆழமாய் போக போக என்ன ஏது என்ற முடிவு பெறுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. இந்த வார்த்தைக்குள் நாம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை அடக்கி வைத்தியசாலை என்ற பெயரில் அடைத்து வைத்துவிட்டிருக்கின்றோம் என்றால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் என்பதும் உண்மை அல்ல.

 கடைசி வரியில் எழுதியிருப்பது பலருக்கு பரீட்சயமானது. நம் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்க்குமொவ்வொருவரும் விதம் விதமான மனோபாவம் கொண்டவர்கள்.  பல விடயங்களில் இந்த மனோபாவங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் அதில் இருந்து யாரேனும் ஒரு சின்ன வித்தியாசத்தை காட்டினாலும் அவனை வித்தியாசமாக பார்க்க வைப்பதும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தைதான் .மிக சராசரியான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக இருக்கட்டும் , அந்தந்த வயதில் கிடைப்பதெல்லாமே கிடைத்தவனாக இருக்கட்டும் சராசரியான வாழ்க்கை அமையாதவனாக இருக்கட்டும் , அல்லது அதை தேடுபவனாக இருக்கட்டும்  ( வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் இந்த நான்கு பிரிவுக்குள் அடக்கிவிடலாம ) எல்லோருக்குமே இந்த வார்த்தை மிக பொதுவானது. 

ஆனால் பைத்தியம் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் பைத்தியமா? பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டால் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா? பைத்தியம் என்றவனும் சிரிக்கிறான், அழுகிறான், கோபப்படுகிறான் அவனை பைத்தியம் என்று அடையாளம் கொடுத்தவனும் இந்த சராசரி உணர்வுகளை அசாமான்யமாய் வெளிக்காட்டும் பல சந்தர்ப்பங்களை நினைக்க முடிகின்றது  , மன நலம் பாதிக்கப்பட்டவன் தனியாய் சிரிக்கின்றான் என்றால், ஒருவன் சிரிப்பதை பார்த்து காரணமே இல்லாமல் சிரிப்பவனையும் அடுத்தவனை காயப்படுத்தி சிரிப்பவனையும் , விரக்தியில் சிரிப்பவனையும் வெறியில் சிரிப்பவனையும் எந்த வார்த்தையில் அடக்குவது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணம் வந்தவனும், இல்லை நான் தெளிவு என்ற எண்ணம் கொண்டவனும் என்று எவனுமே மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தையில் இருந்த இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் தப்பவே முடியாது .... (இரண்டாம் தொடுப்பு வரும் )
Copyright © 2014 நட்சத்திரவீதியில்