Friday, November 11, 2011

அஜீத் என்னும் ”மனிதன்” - ஒரு மேக்கப்மேனின் பார்வையிலிருந்து ..





நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.
கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.
‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.
‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.


‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.


‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.
‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.


‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’


‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’
‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’



இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’
‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’


‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’
‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

ஹெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’


‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’


‘அது பெரிய விஷயமாப்பா?’
‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’


‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’
‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’
‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’


‘அப்புறம்?’
‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’


‘சாப்பாடு மட்டும்தானா?’
‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’ இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.
மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.



பத்ரி சேசாத்ரி கிழக்கு பதிப்பக உரிமையாளர் ( நன்றி -அஜித் ரசிகர் இணையம் )
Copyright © 2014 நட்சத்திரவீதியில்