Wednesday, May 8, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும்

திடீரென்று வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் என்று வீட்டில் யாருமே நினைத்து பார்த்ததில்லை,  இப்போது இருப்பது சொந்த வீடு என்றாலும் பெரியளவு வசதி கிடையாது போகப்போகும் இடம் தற்காலிகமானதுதான் ஆனால்  கொஞ்சம் வசதியான இடம் எனவே அரை மனதுடன் அங்கே செல்ல தயாரானோம், 

பிறந்து வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட 17 வருடம் அந்த வீட்டுடன் அதுதான் உலகம் என்று வாழ்ந்திருந்ததால் எனக்கும் கொஞ்சம் கஷ்டம். எல்லா பொருட்களையும் எடுத்து கொண்டு வண்டி முன்னாள் கிளம்பி விட்டது பின்னால் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அப்பா தலைமையில் குடும்பம் கிளம்புகிறது. இந்த இடத்தில்தான் சிக்கல் கருப்பனை காணவில்லை!!! ....... காலையில் இருந்து யாரும் பார்க்கவும் இல்லை உடனே கிளம்பியாக வேண்டும் என்று சாரதி கூப்பிடுகிறான், சசிகுமாரை பாதுகாப்புக்காக பொருட்களுடன் அனுப்பிவிட்டோம் ஆனால் கருப்பன் இல்லாமல் எப்படி போவது? நான் சென்று கொஞ்சம் அக்கம் பக்கத்தில் பார்த்துவிட்டு உடனே வந்துவிடுகின்றேன் என்று ஓடி தேடி பார்த்ததில் தோல்விதான் கருப்பன் இல்லை, என்ன நடந்தது நேற்று இரவு ஏதும் அவனை திட்டினீர்கலா? என்று அம்மா கொஞ்சம் கடிந்துகொள்ள நான் ஏன் திட்டுறேன் நீதான் எப்பவும் திட்டிடிருப்ப என்று அப்பா கடிக்க ஐயோ  சண்டயாகிடுமோ என்று பயந்தால் இல்லை .  


சரி இரண்டு நாட்கள் கழித்து வந்து கண்டிப்பாக அழைத்து வருவதாக அப்பா உறுதி மொழி கொடுத்த பின்பு அரை மனதுடன் நாம் கிளம்பி விட்டோம். கருப்பன் கொஞ்சம் திமிர் பிடித்தவன் யாரும் அவனை அதட்டுவது அவனுக்கு பிடிக்காது முகத்தை திருப்பிக்கொள்வான், உண்ணாவிரதம் இருப்பான்,    சில நேரங்களில் மௌன விரதம் இருப்பதும் உண்டு ஆனாலும் வன்முறையில் இறங்கமாட்டான்  அஹிம்சை போராட்டத்துக்கு நல்ல உதாரணம் அவன் ! காணாமல் போனது கிடையாது எங்கே சென்றாலும் இரவுக்குள் வீடு வந்துவிடுவான். அன்று என்ன நடந்தது ஒரு வேளை  நாம் அந்த வீட்டை காலி செய்வது அவனுக்கு பிடிக்க வில்லை போல! என்று நானும் தம்பியும் பலமாக பேசிக்கொண்டே புது வீட்டுக்கு சென்றுவிட்டோம் போக முதல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் "கொஞ்சம் கருப்பனை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு போக மறக்கவில்லை. அயலவர்களுக்கும் கருப்பன் மீது நல்ல அன்பு இருந்தது 


கருப்பன் அறிமுகம்  
...........................................

அந்த நாள் இன்னமும் நினைவில் இருக்கின்றது. ஒரு பதினாறு வயது இருக்கும் சாதாரண தரம் பரீட்சை முடிந்த நேரம் ( + 1 தேர்வு ) சில நாட்கள் ஊர் சுத்தலாம் என்ற எண்ணத்தில் ஊரை விட்டு கிளம்பி விட்டேன். போகும் வழியில் அப்பா தொழில் பார்க்கும் இடத்திற்கு சென்று செலவுக்கு பணமும் வாங்கிக்கொள்ள வேண்டும், அப்படி காலையிலேயே அப்பாவின் வேலை தளத்திற்கு சென்றபோதுதான் கருப்பனை முதல் முறை கண்டேன் "ஒரு அட்டைபெட்டிக்குள் இருந்து மியாவ் ..... என்று வெளியே வந்தான்".  


அப்போது அவன் பிறந்து கொஞ்ச நாள் கூட இருக்காது.ஒரு கைக்குள் அடக்கி விடலாம்  ஏன் கருப்பன் என்று பெயர் கூட பிறகு வைத்ததுதான் நல்ல கரு கரு தோற்றம் "வருங்காலத்தில் எலிகளை கட்டுப்படுத்தும் வித்தையில் சிறப்பான்" என்பதை காட்டியது.  குடும்பம் இருக்குற நிலைமைல இப்போ இன்னொருத்தன் வேறயா? எப்புடி சமாளிக்க போறாங்க ? என்ற கேள்வி வந்தாலும் ஒரு பக்கம் நிம்மதி காரணம் நான் இன்னும் மூன்று மாதங்களுக்கு ( பெறுபேறுகள் கிடைக்கும் வரை ) வீட்டு பக்கம் போக போவதில்லை என்னை கட்டி காக்குரத விட இவனை இலகுவாக கட்டி காக்க முடியும் என்ற வகையில் நிம்மதி 

அப்பா இருக்கும் இடத்துக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் பயணிக்க வேண்டும் எப்படி இவனை கொண்டு செல்வது என்று அப்பாவிடம் கேட்டேன். (அவன் இவன் என்று அழைப்பதற்கு காரணம் ஆண் என்பதால்தான், பெண்ணாக இருந்தால் வீட்டில் அனுமதி கிடையாது பிறகு குழந்தைகளையும் சேர்த்து பராமரிக்க வேண்டி வரும் அது சுமை என்பது ஊர் வழக்கம்) எனவே வாங்கும் போதே ஆண் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் அப்பா வாங்கி இருப்பார் இன்னுமொன்று ஏற்கனவே வீட்டில் ஒருத்தி இருந்தாள் ஆனால் அவளால் பிரயோசனமே இல்லை ( எலி பிடிப்பதில்தான்  தான் ) நேரத்திற்கு சாப்பிட்டு தூங்கிவிடுவாள் அவளால் எலிகளுக்கு மட்டும்தான் சந்தோசம் பிறகு திடீரென எங்கேயோ போய்விட்டாள்.  ( ச்சே இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்து ஓடுகாலி கழுத..... ச்சே.... பூனை இப்படி எங்கயோ ஓடிடுச்சேனு அம்மா திட்டினது நினைவில் இருக்கு ). "எனவே நல்ல திடகாத்திரமான ஆண்தான் எலிகளை கட்டுபடுத்த முடியும் என்று பலமான நம்பிக்கைதான் கருப்பனை தேடி தந்திருக்கின்றது  என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.  

எப்படியும் கருப்பனை வீட்டுக்கு கொண்டு செல்வது ரொம்ப கஷ்டமான காரியம் பூனைகளை வண்டியில் ஏற்றுவது ஒரு அபசகுனமாக பார்க்கப்படும் ஊர் எங்க ஊர் நடந்தும் போக முடியாது பின்னே எப்படி இந்த மனுஷன் கருப்பன் என்னும் இந்த பூனை சிறுவனை வீட்டுக்கு கொண்டு போகப்போகிறார் என்ற சிந்தனையுடனேயே நான் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன் ...........


 (தொடரும் )

3 comments :

  1. great great........:-) தொடரும் so sad....
    I am very curious to read the rest..Please post as soon as possible anna.............

    ReplyDelete
  2. Meethi KADHAI enga?

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்