Sunday, September 29, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் (3)


பூனைகள் நாய்கள் மட்டும் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு எப்படி மனிதனுடன் ஆழமான உறவை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திக்கொள்கின்றன? என்ற கேள்வியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை மனிதன் கொடுக்கும் பயிற்சிகள் ஒரு கர
ணம் என்றாலும் முழு மாமிச பட்சிணியான நாய்கள் பூனைகள் இன்று மனிதனை போல எல்லாவற்றையுமே உண்டு வாழ்வது எப்படி சாத்தியமானது?

பூனைகள் வளரும்போது எப்படியெல்லாம் மனிதனோடு இயல்பாக ஒன்று கலக்கின்றன என்பதை கறுப்பனிடம் தான் கண்டுகொண்டேன்.   அவனிடம் மனித உணர்வுகள் அசாத்தியமாக நிறைந்துபோயிருந்தன  நிறையவே கோபம், பிடிவாதம், புரிந்துகொள்ளல் அன்பு, ஏக்கம் என்று நிறைய மனித உணர்வுகள் அளவுக்கு அதிகமாகவே அவனிடம் நிறைந்துபோயிருந்தன்

நிற்க


நான் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வந்து வீட்டில் என்னிடம் கொட்டிய பாசமும்  ஐயையோ..... ஆனந்தமே!!! ...கறுப்பனை அப்பா எப்படி வீட்டுக்கு கொண்டு வந்தார் என்ற கேள்விக்கு இரவில் தான் பதில் வாங்க முடிந்தது. இதற்கு மத்தியில் என்னை துரத்து துரத்தென்று துரத்தியடித்த அந்த நாய்குட்டி இன்னமும் நான் அவனை தாண்டி போகும்போதெல்லாம் எதோ வேண்டாதவனை பார்ப்பதுபோல முறைக்குறான்.

அப்பா வேலை செய்யும் பகுதியில் இருந்து கருப்பனை வீட்டுக்கு கொண்டுவர எந்த வாகனத்தையும் நம்ப முடியாது யாரும் பூனைகளை வண்டியில் ஏற்ற அனுமதிக்க  மாட்டார்கள். பையில் போட்டு பஸ்ஸில் யாருக்கும் தெரியாமல் கொண்டுவருவது கறுப்பனுக்கு ஆபத்தானது. இருக்கும் ஒரே வழி அட்டைபெட்டிக்குள் நாய்க்குட்டியை கொண்டுவருவது போல கொண்டுவருவதுதான்


 எங்க ஊரில் கிட்டத்தட்ட 98 வீதமானவர்கள் தேயிலையை நம்பி வருமானம் ஈட்டுபவர்கள்.(அந்த ஒரே காரணத்துக்காக இன்றுவரை என் மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாலாது ) நாங்களும் அப்படித்தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசம்  அப்பா ஒரு நிறுவனத்தில்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அம்மா தேயிலை தோட்டம் ஒன்றின் அலுவலக தலைமை  குமாஸ்தா  எங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களை விடவும் எவ்வளவோ பரவாயில்லை. ஆக  போக்குவரத்து என்றால் அங்க பேருந்துதான் ஒரே ஆபத்பாண்டவன். இப்படி வாகனங்களில் நாய்களுக்கு இடமுண்டு ஆனால் அட்டைபெட்டிக்குள் சுவாசிக்க சில துவாரங்களை உருவாக்கி அதற்குள் நாய்களை போட்டு பஸ்ஸில் கொண்டுவந்துவிடலாம் இடையில் பசிக்காமல் இருக்க பன் ஏதாவது உள்ளே வைத்துவிடலாம் இதே முறையில்தான் கருப்பனை ரொம்ப கவனமாக கொண்டுவர வேண்டும்.

ஆனால் இடையில் கருப்பன் கத்தி உள்ளே இருப்பது பூனைதான் என்று காட்டிக்கொடுத்துவிட்டால் கெதி  அந்தரம். எப்படியோ அப்படி எதுவும் நடக்கவில்லையாம் ரொம்ப சமத்தாக தூங்கிவிட்டானாம் பிரச்சினையே இல்லாம கறுப்பன் வீட்டில் லேண்ட் ஆகிட்டான்.

இது நடந்து ஒரு மாத இடையில் இதே முறையில் வீட்டுக்கு வந்த எip தான் என்னை கதற கதற துரத்தின அந்த சின்னப்பயல். :)

(தொடரும் )

Thursday, September 26, 2013

யாழ் பயண அனுபவம் 2

மொத்தம் 8 நாட்கள் யாழில் தங்கி இருந்த நாட்கள் எப்போதும் போல அழகானவை. கடந்த ஆண்டுக்கு முன்னைய ஆண்டு யாழ்பாணம் செல்லும் போது  இருந்த குழு இந்த முறை இல்லை. அப்போது எனக்கென்று எந்த பொறுப்பும் இருக்கவில்லை, அதே வேளை யாழ்பாணம் சென்றது முதல் தடவை என்பதால் ஒவ்வொன்றிலும் ஆச்சர்யம் நிறைந்து போயிருந்தது இம்முறை அப்படியல்ல ஒரு சில பொறுப்புகள் இருந்ததும் பழைய ஆச்சர்யம் மிஸ்ஸிங் .

சக்தியின் யாழ் கலையகம் அமைந்திருந்த பகுதியில் நிறைய கடை தொகுதிகள் அமைந்திருக்கும்  அதில் யாழ் விழிப்புலனற்றோர்  சங்கமும் தங்களுடைய கைவண்ணத்தில் உருவான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது. அதன் உறுப்பினர்கள் இருவர் பாதையில் நின்று அதிஷ்ட சீட்டுக்களை வித்துக்கொண்டிருந்தார்கள்

அதன் முன்னைய நாள் கலையகத்துக்கு சந்திக்க வந்த விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேச கிடைத்தது.  பேசும்போது அவர் எனது ஊர்காரர் என்றும்   10 வருடத்துக்கு முன்பு சக்தியின் ஊடாக யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணைந்ததாக கூறியிருந்தார் ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது பார்வை அற்றோருக்கு உதவுவதை விடவும் இந்த உலகின் உச்சகட்ட சந்தோசம் திருப்தி வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை ,

மறுநாள் கடை தொகுதிகளை தாண்டி செல்லும்போது மேற்படி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதிஷ்ட டிக்கட் விற்றுக்கொண்டிருந்தார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாத அவர் வாய் விடாமல் கூவிக்கொண்டே இருந்தது. என்னிடம் இருபது ரூபாய் தாள் இருந்தது அதை கொடுத்து ஒரு டிக்கட் கொடுங்கோ என்று கேட்க அவர் ஒரு டிக்கட் கொடுத்தார் எவ்வளவு தந்தீர்கள் என்று கேட்டார் 20 ரூபாய் என்று சொன்னேன் ஒரு டிக்கட் 10 ரூபாய்தான் என்று மீதத்தை  தர போனார் நான் வேண்டாம் இருக்கட்டும்  என்று சொல்லி நகரப்போக அவர் என் கையை பிடித்து வலுக்கட்டாயமாக பணத்தை தந்துவிட்டார் கொஞ்சம் கடுமையான குரலில் "பிடியுங்கோ" என்று சொன்னது அவரின்  கோபத்தை உணர்த்தியது.

ஏன் இப்படி செய்தார் நான் அதை உதவியாகத்தானே செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டு நடந்தேன் பிறகுதான் ஒரு உண்மை உரைத்தது. "அட கண் பார்வை இல்லாமல் ஒருத்தன் உழைச்சிட்டிருக்கான் ஒரே நிமிஷத்துல வெறும் பத்து ரூபாய நீட்டி அந்த உழைப்பாளிய கொச்சைப்படுத்தி பிச்சைக்காரனாக்க பார்த்திருக்கேன்னு" நெனச்சப்போ மனசே இறுகிவிட்டது. என்னை அறியாத ஒரு கூச்சம் அருவருப்பு  மனதுக்குள்  தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மறுநாள் முதல் வேலையாக அந்த வழியில் அவரை தேடி பிடித்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சாந்தமானது மனது.  இதில ஆச்சர்யம் என்னனா அவர் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்திருந்தார் என்னை பொருத்தவரைக்கும் நான் செய்தது மிக பெரிய தவறு

ஊனம் என்பது ஈனமல்ல ஊனத்தை குறையாக நினைக்கும் மனதுதான் ஈனம்

Wednesday, September 25, 2013

யாழ் பயண அனுபவம் - 1

பயண அனுபவங்களை  பதிவிடுவதென்பது ஒரு அலாதியான விடயம்.  பயணம் அனுபவிக்க வேண்டிய அழகான புத்தகம் போல. ஒவ்வொரு இடமும் ஏதாவது ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுக்கும் புதிதாய் சந்திக்கும் இயற்கையின் மாற்றங்கள், சில கிலோமீட்டர் வித்தியாசத்திலேயே மாறும் இயற்கையின் வடிவங்கள் மனிதர்களின் மொழி நிற வேறுபாடுகள்  என்று ஒவ்வொரு பயணமும் "அகிரா குரோசோவாவின்" படங்கள் கொடுக்கும் எல்லா உணர்வுகளையும் அதன் உச்சத்தில் சேர்த்து கொடுக்கின்றது

எனக்கு உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வாழ்நாள் லட்சியமாகவே மாறிப்போய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் மிருக பலம் கொண்டு உறங்கிக்கொண்டிருக்கின்றது ஹி ஹீ ...இலங்கை பயணம் செய்ய மிக அழகான ஒரு நாடு. சந்தேகமே இல்லை உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் இயற்கை மாற்றங்களை தேடி தமது தேச எல்லைகளை கடந்து செல்ல வேண்டிய நிலைமை. ஆனால்  இலங்கை அப்படி அல்ல "ஒரு மாவட்டத்துக்கு ஒரு காலநிலை இயற்கை வடிவ மாற்றம், சில நேரங்களில் ஒரு பிரதேசத்துக்கு  பிரதேசம் கூட காலநிலையில் மாற்றம் காட்டுவது" இலங்கையை நினைத்து  எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கின்றது.

வடக்கு கிழக்குக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அதை நான் உணர்வு சார்ந்த விடயமாகவே எண்ணுவதுண்டு (இதை என் அருகில் இருக்கும் பலரே  கேலியாக பேசுவதுண்டு ) திரும்பும் பக்கம் எல்லாம் தமிழ் வாச
சக்தி fm குழுவுடன் நல்லூர் ஆலய முன்றலில்


னை என்பது  எனக்குள் பல உணர்வுகளை கிளரச்செய்து எதோ ஒரு பெருமிதத்தை கர்வத்தை  கொண்டுவரும்.
யாழ்பானம் தனியாக செல்வது என்பது வேறு ஆனால் "சக்தி" என்ற மிக வலுவான பிரம்மிக்க வைக்கும் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு ஊடகத்துடன் நானும் ஒரு அங்கத்தவன் என்ற வகையிள் செல்லும் போது கிடைக்கும் அனுபவங்கள் அபாரமானவை அருமையானவை.

இம்முறை  யாழ் சென்றது சக்தியுடன் என் கடைசி பயணமாக கூட இருக்கலாம் என்பதால் நிறைய ரசித்தேன் ...நிறைய சிந்தித்தேன் நிறைய உணர்ந்தேன் ...இடையில் வடக்கு மற்றும் நான் சார்ந்த மத்திய மாகானத்துக்குமான தேர்தலும் நடந்து  முடிந்துவிட்டது. வடக்கில் மக்களின் இயல்பான போராட்ட குணமும் தமிழனுக்கே உரிய திமிரும் வெளிப்பட்டுவிட்டது மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் என்பது இலங்கையை பொறுத்த வரைக்கும் ஒரு கேலிக்கூத்தான விடயம்தான். ஆனாலும் "கடுகு என்றாலும் அதை என்னவன் தரவேண்டும் நீ வேண்டாம்" என்று மக்கள் கொடுத்த அடி வரலாற்று  திருப்புமுனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா  மிக பலம் வாய்ந்த பழுத்த கல்விமான் அரசியலின் சானக்கியங்களுக்குள் எப்படி தமிழ் மக்களின் விடியலுக்காக காய்களை  நகர்த்துவார் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.

வட மாகாண முதலமைச்சர்
மறுபக்கம் நான் சார்ந்த மலையக தமிழர்கள் இனியாவது கிடைக்கும் என்று 100 வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சலுகைகளுக்காக மீண்டும் அணி திரண்டு உரத்த குரலில் வாக்களித்துள்ளனர்.ஆனால் உரிமைகள் கிடைத்தால் சலுகைகள் தானே கிடைக்கும் என்பதை என் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றார்கள் என்பதை காண ஆசையாக உள்ளது.  வழக்கம் போல  இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியும் தொழிலாளர் தேசிய சங்கம் அடுத்த இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது மலையகத்தை பொறுத்த வரைக்கும் அங்கும் ஒரு வரலாற்று வெற்றி தமிழர்கள் சார்பில் நிலைநாட்ட பட்டுள்ளது தமிழ் பிரதிநிதிகள் 11 பேர் என்பது அர்த்தமற்ற அதே நேரத்தில் ஒரு வரலாற்று வெற்றிதான் .

Wednesday, May 15, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் ( இரண்டாம் பகுதி )

பூனைகளை வாகனத்தில் ஏற்றுவதோ அல்லது வாகனத்தை   கொண்டு ஏற்றுவதோ மிகப்பெரிய அபசகுனமாக பார்க்கப்பட்ட இடம் அது. ஒரு முறை கேசவன் குடித்து  வந்து பூனை மீது வண்டியை பார்க் பண்ணியதன் பின் அவன் பட்ட கஷ்டம் கொஞ்ச நெஞ்சமல்ல, சந்தனம் முதலாளியும் புது லாரி ஒன்று வாங்கி முதல் நாளே கொண்டுபோய்  முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் செய்த ஒரே தவறு லாரி புறப்படும் போது  குறுக்கே சென்ற நம்ம நண்பரை கண்டுகொள்ளாமல் விட்டது  இது போன்ற பல உதாரணங்கள் உண்டு இதனால் பூனை குறுக்கே போனாலோ அல்லது வண்டியில் அடிபட்டாலோ குறித்த வாகனம் தூய்மையாக கழுவப்படும் 3 நாட்களுக்கு எங்கேயும் நகராது. 

இப்போ எப்புடி இவனை கொண்டு போகப்போகிறார்  என்ற சிந்தனையோடு நான் ரொம்ப தூரம் போய்விட்டேன். நாட்கள் கடக்கும் வேகத்தை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கின்றது இரண்டு மாத்திரை இடைவெளிக்குள்   மூன்று மாசம்   ஓடிவிட்டது.  பெறுபேறுகளும் வெளிவர போகின்றது என்ற தகவல் வரவே நானும் ஊருக்கு  திரும்பிவிட்டேன். 

அடடா 3 மாசம் நம்மள பார்க்காம குடும்பம் எவ்வளவு கஷ்டபட்டிருக்கும் இன்னைக்கு நமக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் அம்மா அப்புடியே  ஆரத்தழுவி அழுது தீத்துடுவாளே நாமளும் முகத்த கொஞ்சம் சென்டிமன்டா வச்சுப்போம்...... தம்பி...... கேட்கவே வேணாம் பாசத்துல அவன் அம்மாவ விஞ்சுனவன் ஹ்ம்ம் ......இப்டி பல எண்ணங்களுடன் வீட்டிற்கு வந்து இறங்கியாச்சு , கதவை திறக்கிறேன் எதிர்பார்த்தா  மாறியே அம்மா முன்னால நிக்குறாங்க .........."டே தம்பி வா.. வா... வாடா இந்த பக்கத்து கடைக்கு பொய் 100 g புளி வாங்கிட்டு வந்துடுடா இப்போதான் பார்க்குறேன் டப்பா காலி ..இந்த சின்னவன முதல்ல இருந்து சொல்லிட்டே இருக்கேன்  .இந்த பொட்டிக்கு முன்னால இருந்து நகர மாட்டேன்றான் இந்த tv ய உடைச்சு வீசுறேனா இல்லையா பார்."....   கையில இருந்த பைய வாங்கிகிட்டே சொல்லிட்டு உள்ள  போய்டாங்க  , தம்பி   ஒரு ஹலோ சொல்லிவிட்டே கிரிக்கட் ...நல்ல குடும்பம்யா ..ஹ்ம்ம்ம்ம் .....   

 என்ன   ஆரம்பமே இப்புடி டஸ்  ஆச்சே ...இதான் அதிகமா சினிமா பார்க்க கூடாதுன்றதுன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே கடைல புளி வாங்கி வீட்டு   வாசலுக்கு வந்தப்போ ....அவன் என்னை பார்த்து முறைக்கிறான் யாரிவன் ?புதுசா இருக்கானே ? இந்த  ஏரியால முன்ன  பின்ன பார்த்ததே இல்லையே? இவன் எதுக்கு நம்ம வீட்டுல இருக்குறான்  .....நாசமா போச்சு இந்த கேள்வியெல்லாம் அவனுக்கும் வந்துடுச்சு போல சடுதியாக என்ன நினைச்சானோ உர்ர்ர்ர்ர்ர்ர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு துரத்த ஆரம்பிச்சுட்டான் விட்டானே ஓட்டம்....... 

 நமக்கு நாய்னா எப்பவும் ஒத்துவராது ,அந்த நேரம் மட்டும் எங்க இருந்துதான் ஓட்டம்  வருமோ கிட்டத்தட்ட பத்து நிமிஷம் நான் ஓட அவன்  துரத்த  ,அவன் துரத்த நான் ஓட ஒரே ரகளை எதிர்பார்க்காம தடுக்கு பட்டு விழுந்துட்டேன்.!   என் மேல அவனும் "வவ்"  நு கத்திட்டே விழுந்துட்டான் அம்மா இத கொஞ்சமும் எதிர்பார்க்கல   அது சரி மகனுக்கு அடிபட்டா யாருக்குதான் பொறுக்கும் ரொம்ப பதறி போய்ட்டா ஓடிவந்து ரொம்ப வலிக்குதாபா ... நு   சொல்லிகிட்டே நாய் குட்டிய தூக்குறா .....கூடவே குடு அந்த புளிய நு சீக்கிரம் எழுந்து வா வந்ததும் வராததுமா நாய் குட்டியோட விளையாண்டுகிட்டு!!!! 

 .........எது விளையாடிட்டிருந்தணா????     .....என்ன ஆச்சு  நம்ம குடும்பத்துக்கு மகனுக்கு அடிபட்டது கூட தெரியல நாய்க்குட்டிய கொஞ்சிட்டிருக்காங்க .... யார் இவன் ? நம்ம  வீட்டுக்குள்ள என்னையே விட மாட்டேன்றான் ????

அப்போ கருப்பன் எங்க ???? 

தொடரும் ..........

ஒரு கதை

எங்கே படித்தோம் என்று சரியாக நினைவில் இல்லை அநேகமாக ஒரு  வலை தளத்தில்தான் படித்ததாக ஞாபகம் வலியை  சகித்துக்கொள்வதற்கான   அவசியத்தை அழுத்தமாய் சொல்லும் ஒரு குட்டிக்கதை அடிக்கடி நினைவில் வந்து சமரசம் செய்கின்றது அந்த வலை தளத்துக்கு நன்றி ( மன்னிக்கவும் பெயர் நினைவில் இல்லை )

ஒரு ஆலயத்தின்  படியில் இருக்கும்   ஒரு கல் சிற்பம் ஒன்றிடம்   கேட்கின்றது. நீயும் என்னை போன்று ஒரு கல்தான். என்னை போலத்தான் நீயும் ஆனால் உன்னை வணங்குகின்றார்கள் , என்னையோ மிதிக்கின்றார்கள் ஏன் இந்த பாகுபாடு உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?

சிற்பம் அதற்கு பதில் சொல்கின்றது நீயும் நானும் ஒன்றுதான் ஒரே இடத்தில்  இருந்துதான் வந்தோம் என்னை சிற்பி  செதுக்கும் போது  நான் வலியை பொறுத்துக்கொண்டேன் எவ்வளவு என்னை அடித்தாலும் அசராமல் நின்றேன் நான் சிற்பம் ஆகிவிட்டேன் என்னை வணங்குகிறார்கள், நீயோ சில அடிகளிலேயே வீழ்ந்துவிட்டாய் வலியை சகிக்க முடியாமல் ஒத்துழைக்க மறுத்துவிட்டாய் இன்னும் கல்லாகவே இருக்கின்றாய் ...

Wednesday, May 8, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும்

திடீரென்று வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் என்று வீட்டில் யாருமே நினைத்து பார்த்ததில்லை,  இப்போது இருப்பது சொந்த வீடு என்றாலும் பெரியளவு வசதி கிடையாது போகப்போகும் இடம் தற்காலிகமானதுதான் ஆனால்  கொஞ்சம் வசதியான இடம் எனவே அரை மனதுடன் அங்கே செல்ல தயாரானோம், 

பிறந்து வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட 17 வருடம் அந்த வீட்டுடன் அதுதான் உலகம் என்று வாழ்ந்திருந்ததால் எனக்கும் கொஞ்சம் கஷ்டம். எல்லா பொருட்களையும் எடுத்து கொண்டு வண்டி முன்னாள் கிளம்பி விட்டது பின்னால் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அப்பா தலைமையில் குடும்பம் கிளம்புகிறது. இந்த இடத்தில்தான் சிக்கல் கருப்பனை காணவில்லை!!! ....... காலையில் இருந்து யாரும் பார்க்கவும் இல்லை உடனே கிளம்பியாக வேண்டும் என்று சாரதி கூப்பிடுகிறான், சசிகுமாரை பாதுகாப்புக்காக பொருட்களுடன் அனுப்பிவிட்டோம் ஆனால் கருப்பன் இல்லாமல் எப்படி போவது? நான் சென்று கொஞ்சம் அக்கம் பக்கத்தில் பார்த்துவிட்டு உடனே வந்துவிடுகின்றேன் என்று ஓடி தேடி பார்த்ததில் தோல்விதான் கருப்பன் இல்லை, என்ன நடந்தது நேற்று இரவு ஏதும் அவனை திட்டினீர்கலா? என்று அம்மா கொஞ்சம் கடிந்துகொள்ள நான் ஏன் திட்டுறேன் நீதான் எப்பவும் திட்டிடிருப்ப என்று அப்பா கடிக்க ஐயோ  சண்டயாகிடுமோ என்று பயந்தால் இல்லை .  


சரி இரண்டு நாட்கள் கழித்து வந்து கண்டிப்பாக அழைத்து வருவதாக அப்பா உறுதி மொழி கொடுத்த பின்பு அரை மனதுடன் நாம் கிளம்பி விட்டோம். கருப்பன் கொஞ்சம் திமிர் பிடித்தவன் யாரும் அவனை அதட்டுவது அவனுக்கு பிடிக்காது முகத்தை திருப்பிக்கொள்வான், உண்ணாவிரதம் இருப்பான்,    சில நேரங்களில் மௌன விரதம் இருப்பதும் உண்டு ஆனாலும் வன்முறையில் இறங்கமாட்டான்  அஹிம்சை போராட்டத்துக்கு நல்ல உதாரணம் அவன் ! காணாமல் போனது கிடையாது எங்கே சென்றாலும் இரவுக்குள் வீடு வந்துவிடுவான். அன்று என்ன நடந்தது ஒரு வேளை  நாம் அந்த வீட்டை காலி செய்வது அவனுக்கு பிடிக்க வில்லை போல! என்று நானும் தம்பியும் பலமாக பேசிக்கொண்டே புது வீட்டுக்கு சென்றுவிட்டோம் போக முதல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் "கொஞ்சம் கருப்பனை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு போக மறக்கவில்லை. அயலவர்களுக்கும் கருப்பன் மீது நல்ல அன்பு இருந்தது 


கருப்பன் அறிமுகம்  
...........................................

அந்த நாள் இன்னமும் நினைவில் இருக்கின்றது. ஒரு பதினாறு வயது இருக்கும் சாதாரண தரம் பரீட்சை முடிந்த நேரம் ( + 1 தேர்வு ) சில நாட்கள் ஊர் சுத்தலாம் என்ற எண்ணத்தில் ஊரை விட்டு கிளம்பி விட்டேன். போகும் வழியில் அப்பா தொழில் பார்க்கும் இடத்திற்கு சென்று செலவுக்கு பணமும் வாங்கிக்கொள்ள வேண்டும், அப்படி காலையிலேயே அப்பாவின் வேலை தளத்திற்கு சென்றபோதுதான் கருப்பனை முதல் முறை கண்டேன் "ஒரு அட்டைபெட்டிக்குள் இருந்து மியாவ் ..... என்று வெளியே வந்தான்".  


அப்போது அவன் பிறந்து கொஞ்ச நாள் கூட இருக்காது.ஒரு கைக்குள் அடக்கி விடலாம்  ஏன் கருப்பன் என்று பெயர் கூட பிறகு வைத்ததுதான் நல்ல கரு கரு தோற்றம் "வருங்காலத்தில் எலிகளை கட்டுப்படுத்தும் வித்தையில் சிறப்பான்" என்பதை காட்டியது.  குடும்பம் இருக்குற நிலைமைல இப்போ இன்னொருத்தன் வேறயா? எப்புடி சமாளிக்க போறாங்க ? என்ற கேள்வி வந்தாலும் ஒரு பக்கம் நிம்மதி காரணம் நான் இன்னும் மூன்று மாதங்களுக்கு ( பெறுபேறுகள் கிடைக்கும் வரை ) வீட்டு பக்கம் போக போவதில்லை என்னை கட்டி காக்குரத விட இவனை இலகுவாக கட்டி காக்க முடியும் என்ற வகையில் நிம்மதி 

அப்பா இருக்கும் இடத்துக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் பயணிக்க வேண்டும் எப்படி இவனை கொண்டு செல்வது என்று அப்பாவிடம் கேட்டேன். (அவன் இவன் என்று அழைப்பதற்கு காரணம் ஆண் என்பதால்தான், பெண்ணாக இருந்தால் வீட்டில் அனுமதி கிடையாது பிறகு குழந்தைகளையும் சேர்த்து பராமரிக்க வேண்டி வரும் அது சுமை என்பது ஊர் வழக்கம்) எனவே வாங்கும் போதே ஆண் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் அப்பா வாங்கி இருப்பார் இன்னுமொன்று ஏற்கனவே வீட்டில் ஒருத்தி இருந்தாள் ஆனால் அவளால் பிரயோசனமே இல்லை ( எலி பிடிப்பதில்தான்  தான் ) நேரத்திற்கு சாப்பிட்டு தூங்கிவிடுவாள் அவளால் எலிகளுக்கு மட்டும்தான் சந்தோசம் பிறகு திடீரென எங்கேயோ போய்விட்டாள்.  ( ச்சே இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்து ஓடுகாலி கழுத..... ச்சே.... பூனை இப்படி எங்கயோ ஓடிடுச்சேனு அம்மா திட்டினது நினைவில் இருக்கு ). "எனவே நல்ல திடகாத்திரமான ஆண்தான் எலிகளை கட்டுபடுத்த முடியும் என்று பலமான நம்பிக்கைதான் கருப்பனை தேடி தந்திருக்கின்றது  என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.  

எப்படியும் கருப்பனை வீட்டுக்கு கொண்டு செல்வது ரொம்ப கஷ்டமான காரியம் பூனைகளை வண்டியில் ஏற்றுவது ஒரு அபசகுனமாக பார்க்கப்படும் ஊர் எங்க ஊர் நடந்தும் போக முடியாது பின்னே எப்படி இந்த மனுஷன் கருப்பன் என்னும் இந்த பூனை சிறுவனை வீட்டுக்கு கொண்டு போகப்போகிறார் என்ற சிந்தனையுடனேயே நான் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன் ...........


 (தொடரும் )

Thursday, April 11, 2013

எழுதி கிழித்த நூறு


 நட்சத்திர வீதியில் பயணிப்பவர்களுக்கு எதை கொடுப்பது என்பதில் இருக்கும் கவனம். கூடவே மிதமிஞ்சிய சோம்பேறித்தனம், கொஞ்சமாய் அதிகம் இருக்கும் தொழில், வார்த்தை வரட்சி  கூடவே கற்பனை வரட்சி    என்று 3 வருடங்களில் 100 தான் எழுதி கிழிக்க முடிந்தது. உண்மையில்  இது வெட்கப்பட வேண்டிய ஒன்று பெருமையடிக்க இதில் ஒன்றும் இல்லை , ஆனால் நூறு என்பதை எதற்காக கொண்டாட வேண்டும் என்பதை அறியாமலேயே கொண்டாடும் ஒருவனாக  அதையும் போகிற போக்கில் நினைவுபடுத்த ஒரு முயற்சி அவ்வளவே.

  எழுத்து   என்பது படிக்க படிக்க கொடுக்கும் சுவை என்ன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நாமே எழுதவேண்டும் என்ற எண்ணமே எவ்வளவு பெரிய விபரீதமான எண்ணம் என்பதை உணர நட்சத்திரவீதியில் எனக்கு   கைகொடுத்திருக்கின்றது என்பதை ஆணவம் இல்லாமல் சொல்லலாம்.  இன்னும் நிறைய எழுத எழுத்தில் மூத்தவர்கள் அறிவில்  பெற்றிருக்கும் அனுபவத்தின் சில துளிகளாவது ஆயுளுக்குள்  எனக்கும் கொடு என்று இறைவனிடம் இந்த நூறாவது பதிவில் யாசிக்கிறேன்.

சில  வருடங்களுக்கு முதல் வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திவைத்த அருமை நண்பன் பஹத் a . மஜீத்துக்கு (fahath a  majeeth ) முதல் நன்றி ,  எழுத்துக்களை அறிமுகப்படுத்தி    வைத்த அண்ணன் ராஜ் மோகன் (சென்னை )அவர்களுக்கும் , blog  சம்பந்தமாக பல விடயங்களை அறிமுகப்படுத்தி தந்த சகோதரி ஹோஷியா ( சக்தி fm ) அவர்களுக்கும் நன்றி. பிற்பட்ட காலத்தில் அடிக்கடி  பதிவுகளை பார்த்துவிட்டு பல்வேறுபட்ட  விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லிவரும் வலையுலக நண்பர்களுக்கும் facebook நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் இனியாவது உருப்படியாக எழுதி கிழிக்க முயல்கின்றேன் !!!! 

Wednesday, April 3, 2013

"பரதேசி "... பாலா சொன்னது சரி - 2

 கடந்த பதிவுடன் இதையும் இணைத்துக்கொள்கிறேன் "பரதேசி" படத்திலும்  சரி அதன் மூலமான "எரியும் பணிக்காட்டிலும்" சரி ஒரு பூசாரி கதாபாத்திரம் உலவிக்கொண்டிருக்கும் கொடுமைகளாலும் ,    குளிராலும், மலேரியாவினாலும் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை கடவுள் பெயரால் அரித்து தின்றுக்கொண்டிருக்கும் , அது எப்படி எல்லாம் மனிதர்களின் பயத்தை வைத்து தன பிழைப்பை தேடியது என்பது பற்றி ph .டேனியல்  தெளிவாக சொல்லியிருப்பார் விளக்கியிருப்பார்.

 தாயத்துக்கு நாலு அனா , ஆத்தாளுக்கு பூஜை என்று எட்டணா இப்படி அந்த சனத்தின் ரத்தத்தில் பாதியை தன பங்குக்கு உறிஞ்சுக்கொள்ளும், ஏற்கனவே கடனில் இருக்கும் அந்த மனிதர்களின் கடனை இன்னுமின்னும் உயர்த்தும்.   கடைசியில் வள்ளி என்ற அந்த முதல் கதாபாத்திரம் தாயத்தும் பிரயோசனமின்றி நம்பிய  கடவுளும் பிரயோசனம் இன்றி பரிதாபமாய் இறந்து போவாள்   நான் கேட்கிறேன் "ph .டேனியல் என்ற வேற்று மதக்காரர் ஒருவர் இந்துத்துவ கடவுளை அவமானப்படுத்துகிறார் என்று சொல்ல முடியுமா???  "

அப்படி சொல்வது எவ்வளவு அடி மட்டமான புத்தி ? அப்படித்தான் பாலாவை விமர்சிப்பதும் ,   பாலா கிறிஸ்தவர்களை சாடுகிறார் என்றால் அந்த பூசாரி கதாபாத்திரத்தை எதற்கு காட்ட வேண்டும் ?    பாலா அந்த மக்கள் பட்ட ஒட்டுமொத்த வலியையும்    2 மணிகளுக்குள் சொல்ல முற்பட்டிருக்கின்றார் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் .....

Tuesday, April 2, 2013

"பரதேசி "... பாலா சொன்னது சரி - 1


எரியும் பனிக்காடு நாவலில் இருக்கும் ஒரே ஆறுதல் அந்த வைத்தியரின் வருகைதான் ( p .h .டேனியல் ).உண்மைதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை அதை பாலா கொச்சைப்படுத்தியதாக அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு மீதான் என் பார்வை இது .

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் "வறுமையை" காரணம் காட்டி மத மாற்றம்  செயல்கள் இன்னமும் நடப்பதுதான் 

தமிழகத்தில் இருந்து அடிமைகளாக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களில் பலர் இப்படி மூளை சலவை செய்யப்பட்டும், வறுமையை காரணம் காட்டியும் ஏன் பலவந்தப்படுத்தியும்   மதம் மாற்றம் செய்யப்பட்டது உண்மையா? பொய்யா ? ...பர்மாவுக்கு, மொரீசியசுக்கு, இலங்கைக்கு, தென் ஆபிரிக்காவுக்கு , பிஜி தீவுகளுக்கு மலேசியாவுக்கு என்று உலகம் முழுவதும் கூட்டி செல்லப்பட்ட பலர் இப்படி மதமாற்றம் செய்யப்பட்டார்களா இல்லையா? 

வெள்ளைக்காரன் உச்சரிக்க முடியாத பெயர்களை தமக்கு உச்சரிக்க  முடிந்தவகையில் மாற்றி வைத்து ( eg -  மாரியம்மா   - மரியம் ) ஒரு மத அடையாளத்தையே அழித்து  வைத்த வரலாறு ஆதார பூர்வமானது யாராவது மறுக்க முடியுமா ?

இன்றும் இலங்கையில் நான் பார்த்திருக்கிறேன். இந்த நிமிடம் கூட தேயிலை தோட்டங்களில் வறுமையை நீக்குவதாக சொல்லியும் , கல்வி தருவதாக சொல்லியும் "கர்த்தர்" என்ற பெயரை பயன்படுத்தி மத மாற்றம் செய்யப்படுகின்றது , உணவுக்கு வழி இல்லாதவனுக்கு அதை தருவதாக சொல்லி மதத்தை விலையாக கேட்பது  சரி தவறு என்பதல்ல என் வாதம்  ஆனால் அது மாறுபவர்களின் சுய விருப்பில் நடக்க வேண்டும் அதை தருவோம் இதை தருவோம் என்ற ஆசை வார்த்தைகளை காட்டி மத வியாபாரம் செய்வது அற்பத்தனமானது ."தூய்மையான உண்மை கத்தோலிக்கர்கள் இப்படி யாரையும் மதம் மாற்றி நான் கண்டதில்லை "ஆனால் "பரதேசி படத்தில்" வரும்  ( எரியும் தணலில் அல்ல ) அந்த டாக்டர் கதாபாத்திரம் ஒரு அடையாளம் அதன் எச்சங்கள் இன்னமும் வீரியமாக செயட்படுகின்றது பசியை தீர்த்து வைப்பதாக கூறி மதத்தை விலையாகவோ பிச்சையாகவோ கேட்கின்றது ,இத்தனைக்கும் இப்படி மதமாற்றம் செய்யப்படுபவர்கள் " உண்மையான கத்தோலிக்கர்களாக" அங்கீகரிக்கப்படுவதும் இல்லை 

இப்படி எதுவும் தெரியாமல் பாலா red tea  நாவல் ஆசிரியரான வைத்தியரை கொச்சைப்படுத்தியதாக பேசுவது எவ்வளவு மடமை " சாறு நிவேதிதா மாதிரி " மனிதர்கள் புகழுக்காக எதையும் நிறுவ முயற்சிப்பது அவர் பாணியிலேயே சொல்வதானால் "குடிகாரன் எடுத்து வைத்த வாந்தியை நக்குவதற்கு ஒப்பானது" ( படிப்பவர்கள் மேற்படி வார்த்தைக்கு மன்னிக்கவும் )

எரியும் பனிக்காடு நாவல் சொல்லும் காலத்தில் அந்த குறித்த பகுதியில் அந்த டாக்டர் கதாபாத்திரம் பல நன்மைகளை செய்தும் தொழிலார் உரிமைகளையும் பெற்று கொடுத்தது உண்மை என்றால் .அவரை போன்ற உண்மையானவர்கள் தூய்மையானவர்கள் இருந்த சம நேரத்தில் வலியை  மதத்திற்கு விலையாக பேசியவர்களும் இருந்தார்கள் அதை பாலா காட்டியது தவறாகுமா?  இன்று இலங்கையில் தோட்டப்புற மக்களில் 80 வீதமானவர்கள் பரதேசி படத்தில்  காட்டப்படுவது  போன்று    மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் .  

பரதேசி என்ற 2 மணித்தியால படத்தின் மூலம் செல்போன் இல்லாத காலத்தில் எந்த வீடியோ ஆதாரமும் இல்லாமல் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட ஒரு தமிழர் சமூகத்தின் அவலம் வெளி வந்திருக்கின்றது, சொல்லப்பட்டிருக்கின்றது. , 48 நாள் நடை பயணம் என்பது  தலை மன்னாரில் இருந்து இலங்கையின் மத்திய பகுதிக்கு நடந்தே சென்ற அவலத்தின் அடையாளம் , சொல்லப்படாத கதை , வரும் வழியில் கொடூர மிருகங்களுக்கும் , மனித மிருகங்களுக்கும் உணவாகிப்போன நம் தமிழனின் உண்மை , எரியும் பனிக்காடு நாவலில் கதை நடக்கும்  பகுதி மற்றைய பகுதிகளில் நடந்த கொடூரங்களை விடவும் "பரவாயில்லை" என்று சொல்லக்கூடிய கொடுமைகள் நடந்த இடம் , ஆனால் அதை தாண்டிய கொடூரங்கள் நடந்த மலைகள் உள்ளன அங்கு கொன்று புதைக்கப்பட்ட உயிர்களின் ஆத்மாக்களைத்தான் நாம் அழகு அழகு என்று ரசிக்கிறோம்.    அவை அத்தனையையும் சொல்ல பாலா முயன்றிருக்கின்றார்.  பரதேசி ஒரு அழுத்தமான பதிப்பு , ஆதாரமில்லாமல் அழிந்துபோன உனதும் எனதும் முப்பாட்டனின் வலி .......

கடைசியாக ஒன்றை  சொல்லிவிடுகின்றேன் "மதம் மாறுவதோ அல்லது மாற்றுவதோ இதெல்லாமே நியாயமாக கொள்ளலாம்" தவறு இல்லை, ஆயிரமே இருந்தாலும் அது தனி  உரிமை  ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் ஒரு அபாரமான படைப்பாளியை கீழ்த்தரமாக கொச்சைப்படுத்துவதும் மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது , மேற்படி அத்தனையும் பாலா என்ற படைப்பாளியின் மீது கொண்ட அளவற்ற அன்பில் எழுதியது .. ..

Sunday, March 10, 2013

"பரதேசி "பாடல்களும் ..."எரியும் பனிக்காடு" நாவலும்

பாலாவின் "பரதேசி " இன்னும் சில தினங்களில் வெளியாக் இருக்கின்றது. படத்தின் 1st look  இல் ஆரம்பித்து முன்னோட்டம் மற்றும் மேக்கிங் காட்சிகள் என பாலாவின் தனித்துவ முத்திரை தெளிவாய் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல்களும் வெளியாகியது. எல்லோர் வாயிலும் முனுமுனுக்கும் அளவுக்கு பெரியளவு ஹிட் ஆனது என்று சொல்ல முடியாது இருந்தாலும் பாலா  படம் என்பதால் படத்தின் காட்சிகளோடு அவை வெளிவரும்போது தாக்கம் தரும் என்ற நம்பிக்கை இன்னமும் உண்டு ... பரதேசி படத்தின் கருவாக சொல்லப்படும் red  tea நாவல் (தமிழில் "எரியும் பனிக்காடு ") தந்த விம்மல்களை பரதேசி பாடல்கள் மீள அசைபோட வைத்தது. அந்த பாடல்களும் அது எரியும் பனிக்காடு நாவலில் நினைவு படுத்தும் பகுதிகளையும் இங்கு பதிவிடுகிறேன் .....

1) ஒ...செங்காடே ....

கயத்தாறு கிராமத்தின் பஞ்சத்தினால் வாரக்கணக்கில் நெல்லு உணவு கிடைக்காமல் வாடும் கருப்பன் மற்றும் அவனோடு சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களை அதிகம் கொண்ட கிராமம் . வாட்டும் வறுமையில் இருந்து விமோசனமாக கிடைக்கும் தேயிலை மலை தொழிலை நம்பி கருப்பன் தன மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறுவான் அந்த காட்சியும் சொந்த மண்ணை விட்டு செல்லும்  போது   அவன் மனம்  வலித்ததையும்   இந்த பாடல் நினைவு படுத்துகின்றது // 

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது 

//கவிப்பேரரசு அவர்கள் 1920 கயத்தாறு வறண்ட பூமியில் வாழ்ந்து விடைபெற்றது போலவே வரிகளை இழைத்திருக்கின்றார் அருமை //

2..)யாத்தே -

கயத்தாறில் இருந்து தோட்ட  தொழிலுக்கு ஆசை வார்த்தை காட்டி கொண்டுவரப்பட்ட கருப்பனும் அவன் மனைவியும் அத்தனையும் பொய் என்பதை கண்டு துவல்கிரார்கள். நரக பசியில் இருந்து உயிர் பிழைக்க வந்த இடமும் கொடூர நரகம் என்பதை உணர்கிறார்கள் ,தினம் தினம் அடி  உதை  என டீ எஸ்டேட்டில் அவர்களும் சக தொழிளார்களும் சக்கையாக பிளியப்படுவர், ஏன் என்று கேட்க முடியாது .தப்பி ஓடவும் முடியாது .ஆடு மாடுகள் போல கொட்டிலுக்குள் சித்திர வதை அனுபவிப்பர் அந்த காட்சியை கண் முன் கொண்டு வரும் வரிகள் //

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை 

3...)அவத்த பையா - .....


பரதேசி பாடல்களில் சிறந்த முறையில் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் பாடல் இது, கயத்தாறு வரட்சியில் ஏழ்மையில், காதலை மற்றும் அது தரும் ஆறுதலை  சொல்லும் பாடலாக எடுக்கலாம் அதுதான் உண்மையும் கூட 

நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு... 

4..)தன்னை தானே -

தேயிலை தோட்டத்தில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கும் அந்த நாளில் மட்டும்தான் தொழிலாளர்கள் நிம்மதியாய் இருப்பார் விடிய விடிய கூத்தும் இடம்பெறும் , அந்த காட்சியை நினைவுபடுத்தும் வரிகள் கிருஸ்துவை துதிக்கும் பாடல்


//தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆற்று மாதின் சாட்சியாக நீ //


மொத்தத்தில் எல்லா பாடல்களுமே எரியும் பனிக்காடு நாவலையும் அது தந்த விம்மல்களையும் அதிர்ச்சிகளையும் மீள நினைவு படுத்தி இன்னும் சில அதிர்ச்சிகளை தந்துவிட்டது எனலாம்.  இதுவரை யாருமே தொடாத தோட்ட தொழிலார்களின் வாழ்கையை சொல்ல துணிந்த பாலாவுக்கு நன்றிகள் ...

//ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே // இது இன்னமும் தோட்டங்களில் மக்கள் படும் அவலம்தான் ....

Sunday, March 3, 2013

"பூரண மதுவிலக்கு- தலைமுறை கடமை"பூரண மது விலக்கு சாத்தியப்படுமா? கற்பனையில்  கூட அப்படி நினைக்க முடியவில்லை காரணம் ஒரு நாட்டின் வருவாயில் மிகப்பெரிய வருவாய் அதில் தங்கி இருக்கின்றது , இன்னுமொரு பக்கம் பிரதான உணவுகளில் ஒன்றாகவே மது கலந்து போய்  இருக்கின்றது , நேற்று இரவு "சண் தொலைகாட்சி" இது தொடர்பாக ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சியை செய்திருந்தது  விவாதத்தில் பங்கு கொண்டவர்களில் ஒரு முகம் என்னை நிகழ்ச்சி பால் ஈர்த்தது    அந்த முகம் எழுத்தாளர் சாருவினுடயது , மனிதன் கண்டிப்பாக விவகாரமாக எதையாவது சொல்வார்  என்ற நம்பிக்கையில் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தேன் .....

எதிர்பார்த்தது போல சில விவகாரமான கருத்தக்களை  சாறு நிவேதிதா  முன் வைக்க லாவகமாக முகத்தில் கறியை பூசிக்கொண்டார். குடிப்பதற்கும் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக சொல்லி, அதை நிருவப்போய் பலரிடம் மூக்குடைப்பட்டார்,  பதில் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதி நல்ல ஆளுமையான கருத்துக்களை முன்வைத்தார், குடி என்பது ஒரு வியாதி எல்லா பாரதூரமான பிரச்சினைகளுக்கும் அடிப்படையில் போதைதான் அமைந்திருக்கின்றது. இது குடிக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியும் ( எனக்கும் தெரியும் ) நாம் செய்யும் காரியத்திற்கு நாமே பொறுப்பு சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைமையை குடி கொண்டு தருகிறது

..இது ஒரு பக்கம்.  ஒரு நாட்டிலோ அல்லது சுயமான ஆட்சியுடைய ஒரு மாநிலத்திலோ பூரண மது விலக்கு  சாத்தியப்படுமா என்றால் அது கண்டிப்பாக கனவுதான் அல்லது ரொம்ப கடினமான வேலை ,ஆனால் ஒன்று மட்டும் உண்மை பூரண மது விலக்கை  தமிழகத்தில் கோருபவர்கள் சொல்லும் "அமுல்படுத்தல் முறை" கண்டிப்பாக ஏற்புடையது. அதேதான் சாருவும் சொல்கிறார்.. ஒரு வழிப்படுத்தல் வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் அதனூடாக பூரணமான மது விலக்கை நோக்கி செல்ல வேண்டும் .

இது விடயத்தில் இலங்கை பல வகையில் முன்னணியில் இருக்கின்றது 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த பொருளும்  விற்பனை  செய்வது
பூரணமாக தடை செய்யப்பட்டுள்ளது , பொது இடங்களில் குடித்தாலோ சாராயக்கடை முன்றலில்  குடிப்பதோ , சிகரட் அடிப்பதோ   , குடிக்கும் மற்றும் புகைக்கும் காட்சிகள் ஒளிபரப்பபடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது ... 9 மணிக்கு மேல் சாராயக்கடைகள் திறக்க முடியாது , பண்டிகை நாட்களில் சாராயக்கடைகள் கண்டிப்பாக மூடப்படும் ...

பூரண மதுவிலக்கு வேண்டுமா? இல்லையா? என்றால் கண்டிப்பாக வேண்டும். காரணம் அது தலைமுறை கடமை குடி என்பதே அந்நியமானதாக நம் அடுத்த தலைமுறை நினைக்க வேண்டும் அல்லது குடி என்று ஒன்றே அவர்களுக்கு தெரியாததாக ஆக்க வேண்டும் எனில் கண்டிப்பாக  மதுவை தடை செய்ய வேண்டும். ஒரு போதைப்பொருளை கண்டு அஞ்சுவது போல் மதுவை கண்டு அஞ்சுமாட்போல் செய்ய கண்டிப்பாக மதுவை தடை செய்ய வேண்டும் அது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை  .....குடிக்க யோசித்த காலம் போய் இப்போ குடிக்குறதுக்கு   யோசனையா? என்று கேட்கும் காலத்தை பார்க்க   பயமாக இருக்கின்றது

Thursday, February 14, 2013

தலைமுறை கனவு


எப்போதோ ஒரு காலத்தில் திருச்சியில் வாழ்ந்தபோது   "ஆல் இந்தியா ரேடியோவில் " எப்படியாவது ஒரு முறை பேசிவிட வேண்டும் என்று தாத்தா ரொம்ப ஆசைப்பட்டதாக என் அப்பா சொல்லுவார்... ஆனால் வானொலியில் "பாடல் கேட்கிறார்" என்று கூட அவர் பெயர் வந்ததில்லையாம் பிறகு அதை மறந்து இலங்கைக்கு வந்து   செத்தும் போய்விட்டார் அப்பா அப்படி எதுவும் முயற்சி செய்யவில்லை, நான் வானொலியில் தொழில் முறை அறிவிப்பாளன் ஆகிவிட்டேன்  .வசதி குறைந்த மனிதர்கள் நேர்மையான வழியில் லட்சியங்களை  அடைய குறைந்தது மூன்று தலைமுறைகள் ஆகின்றதே ....நினைக்கும்போது சிரிப்பாய் இருக்கின்றது

வானொலி தின வாழ்த்துக்கள் 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் "நியாயமும், நியாயமின்மையும்"


"உலகம்  முழுவதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதி தமிழ் நாட்டில் நமது சக ரத்த உறவுகள் இஸ்லாமியர்களுடன் தங்கி இருக்கின்றான்" என்பது போல காட்டப்படுவதுதான் இஸ்லாமிய அமைப்புகளுக்கு பெரும் நெருடலாக அமைந்ததாக சொல்லப்படுகின்றது. அப்படி அமைவது  நியாயமும் உண்டு தமிழகத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க பட்ட பாட்டை என்னிடம் சொல்லி ரொம்பவே வருந்தினார். யுத்த காலத்தில் இலங்கையில் இந்த அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டதுண்டு  அவர்களின் போராட்டத்தில் நியாயம் உண்டு  தைரியமாக மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா " இப்படி ஒரு இந்துத்துவ தீவிரவாதி ஒருவனை பற்றி  தமிழில் அல்லது இந்தியாவில் எந்த மொழியில் படம்  எடுத்தாலும் அதை அங்கு திரையிட முடியும் என்று ?" 

சினிமா என்பது ஒரு வலுவான  ஊடகம் அதில் உயிரோட்டமாக சொல்லப்படும் எந்த விசயமும் ஏற்படுத்தும் தாக்கமும் பாய்ச்சலும் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை உண்டு பண்ணும்.  எனவே இப்படியான காட்சிகள் எல்லா முஸ்லிம்  சகோதரர்களையும் அச்சத்துடன் அருவருப்பாக பார்க்க தூண்டுவதாக அமையும் என்பது உண்மை .எனவே  முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் இதை எதிர்த்து போராட  வழுவான காரணம் உண்டு. அங்கு அந்த படம் தடை செய்யப்படாமல் காட்சிகள் அகற்ற சொல்லி வழியுருத்தவும் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு.    தொடர்ந்து மணிரத்னத்தின் பாம்பே படத்தில் இருந்து ஒரு சமூகத்தை குறி வைப்பதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டமானதுதான் . அப்படி செய்யப்பட காரணம் சிறுபான்மை இனம் என்ற பார்வைதான், அது ஒரு வகையான எகத்தாளம்   இலங்கையிலும் அதே நிலைமைதான் ...


பாபர் மசூதியை காவி உடை உடுத்தி சென்று இடித்த அந்த காவியுடை இந்துத்துவ பயங்கரவாதிகளை பற்றி படம் எடுங்கள். அவர்கள் செய்த கொடூரங்களை, உயிரோடு இருந்த  கர்பிணித்தாயின்  வயிற்றை  கிழித்து குழந்தையை எடுத்த காட்சியை அப்படியே படமாக்குங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் படத்தை வெளியிட்டுக்காட்டுங்கள் முடியுமா??  .... ஆனால் இலங்கையில் நிலைமை அதுவல்ல இலங்கையில் இந்த படத்திற்கு எதிராக சிலர் இடும் கருத்துக்கள் முழுக்க முழுக்க மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பது வேதனை தருகின்றது. 

அதற்கு கொடுக்கப்படும் எதிர் கருத்துக்களிலும் அதே மதவாத நெடிதான் வீசுகின்றது .. அதை தவிர்த்து இந்த படத்தை இங்கு எதிர்ப்பதற்கு  வலுவான  காரணம் எதுமே கிடையாது , ஒரு வாரமாக facebook  , tweettaril  இது தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் நிச்சயம் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அடி மனதில் இருந்த இனத்துவேசங்கள் இதை காரணமாக கொண்டு வெளியே வந்தது. காரணமே இல்லாமல் சிலர் சண்டை போட்டதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாய் பயந்து போனேன் இது எங்கே கொண்டு போய் விடப்போகின்றது என்று, அப்படி கருத்து மோதலில் ஈடுபட்டவர்களில் 80 விழுக்காட்டினர் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து சண்டையிட்டது கவலைக்குரியதாக இருந்தது 

இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேறு ... நான் பெரிதும் மதிக்கும் ஒரு எழுத்தாளர் விமர்சகர் முன்னாள் அறிவிப்பாளர்   ஒருவர் கமல் அமெரிக்காவுக்கு கு ... கழுவி  விடுகின்றார் என்று பகிரங்கமாக சொல்லியிருந்தார் இதில்  தேவையே இல்லாமல் இலங்கையில் நடந்த போராட்டத்தை  வேறு வம்புக்கிழுத்து மொட்டை தலையையும் முழங்காலையும் முடிச்சு போட்டு விட்டிருந்தார் ... அதற்கு எதிர் கருத்தாக சில இந்துத்துவ மதவாதிகள் இட்ட கருத்துக்களும் எரிச்சலாய் இருந்தது என்னை பொறுத்த வரை இலங்கையில் இந்த படத்தை எதிர்ப்பதில் நியாயம் என்பது குறைவான விழுக்காடுகள்தான் , காரணம் அதையும் விட இங்கு  எதிர்க்க வேண்டிய சமாச்சாரங்கள்  நிறைய உண்டு .

கமல் இஸ்லாமிய எதிராளியா?? என்ற கேள்வியே ரொம்ப மட்டமானது அவர் மத நம்பிக்கை அற்றவர் என்பது எல்லோருக்குமே தெரியும் .. "கிரகனாதி கிரகங்களுக்கும் அப்பால் ஒரு அசகாய சக்தி உளதாம்..." என்று இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கவிதை சொன்னவர் , ஹே ராம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு அப்போது நடந்த கொடுமைகளை சொல்லி எதிர்ப்பை சம்பாதித்தவர் , தசாவதாரம் படத்தில் சைவர்களை கிட்டத்தட்ட இழிவு படுத்தி வைணவர்களை பற்றி சொன்னவர். அவருக்கு மதம் அல்ல முக்கியம் சொல்ல வரும் கதைதான் முக்கியம் இது வெளிப்படை ஆக  விஸ்வரூபம் என்ற படமும் அப்படியானவற்றின் தொடர்ச்சிதான் ( அவருக்கு ஒஸ்கார் கனவு உண்டு அதற்காக அமெரிக்காவுக்கு சாதகமாக அவர் படம் எடுப்பார் என்று சொன்னாலும் அதற்கும் குறைவான விழுக்காடுகள்தான் நியாயம் அகாடமி விருதுகள் எல்லாமே அமெரிக்காவை தூக்கி பிடிப்பவர்களுக்கு மட்டுமா வழங்கப்படுகின்றது ??) ஒரு படைப்பாளியாக கமல்  துறைக்கும் உழைப்புக்கும் நேர்மையானவர் அவரின் படைக்கும் திறனை ஆதரிப்பதில் தவறு இல்லை ...... அந்த வகையில் படத்திற்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியே ஆனாலும் தமிழகத்தில் இதற்கான போராட்டங்களில் நியாயம் உண்டு என்பதால் போராடும் இஸ்லாமிய  அமைப்புகளின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் .....

Tuesday, January 22, 2013

" கடிநாய் கவனம் ""நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையில் பெரும்பகுதி பிரயாணங்களுக்காக காத்திருப்பதிலேயே செலவாகின்றது" என்றால் தவறில்லை அந்த காத்திருப்பு ஒரு இனிய காத்திருப்பு அல்ல எரிச்சலை கொண்டுதரகூடியது.  கிராமத்துப்பக்கம் ஒரு பேருந்தின்  வருகைக்காக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்த நாட்களும் உண்டு. ஒரு பேருந்தில் இருந்து இன்னுமொரு பேருந்து அதிலிருந்து இன்னுமொரு வண்டி என்று இயங்கும்  நாளில் மூன்றில் ஒரு பங்கை பிரயாணமும் அதற்காய் காத்திருக்கும் நேரங்களும் தின்றுவிடும். 

எனக்கு இதில் உடன்பாடே கிடையாது இதனால் காத்துக்கொண்டு ஒரு இடத்தில் நிற்பதையும் விட நடந்துவிடுவது மேல் என்பதே எண்ணம் , அதை பழக்கமாக்கியும் வைத்திருந்தேன். அது இன்றும் தொடர்கின்றது. பெரும்பாலும் இரவில் நடப்பது ரொம்ப பிடித்திருந்தது. ஊரில் இரவு 7 மணி ஆனாலே கடுமையாக இருட்டிவிடும் அந்த கருமையின் கடுமையையும் விழுங்கும் வீதத்தில் குளிரும்.... ஊரில் நள்ளிரவு தாண்டியும் ஒத்தையாக  நடந்து செல்லலாம்.  பாதுகாப்பு குறித்த பயமே எழாது சில நாய்களிடம் இருந்து தப்பினால் போதும்  .அதற்குள் நடப்பதெல்லாம் மிகப்பெரிய அனுபவம். 

பௌர்ணமி நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் இருளை தவிர எதுவுமே தெரியாது நாம் ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் செல்வது போல இருக்கும், எதோ ஒரு அசாத்தியமான உருவம் நம்மை விழுங்குவது போல உணர்வு தரும். கொழும்புக்கு வந்த பிறகு இரவில் நடப்பதற்கான தேவை வெகுவாக குறைந்துவிட்டது, அப்படியே நடக்கும் வாய்ப்பிருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்த முயல்வதில்லை காரணம் அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்ற சந்தேகம் ,  அப்படியே நடந்தாலும் இந்த செயற்கை வெளிச்சம் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசத்தை குறைத்துவிடும் என்பதால் நடந்து செல்வது திருப்தியாகவும் அமையாது .


ஆனால் இங்கும் நடந்துவர ஆசைப்படும் ஒரு இடம் உண்டு. அது எமது அலுவலகத்துக்கு வரும் வழி, வண்டியில் வந்தால் வெறும் 7 நிமிட தூரம் நடந்தால் 20 நிமிடம் . ஆனால் இரவு நேர கடமைகளின் போது  அந்த வழியில் பெரும்பாலும் நடந்து வரவே ஆசைப்படுவேன், காரணம் பாதையின் இரு மருங்கிலும் இருக்கும் மிகப்பெரிய வயல்வெளிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சை பசேலென்று தெரியும் அந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் நடப்பது ஏதோ புதுமையான ஒரு உலகத்தில் நடப்பது போன்றிருக்கும். வயல்வெளிப்பாதைக்குள்  வந்ததுமே அங்கிருக்கும் ஒவ்வொன்றும் என் வருகைக்காகவே காத்திருந்து சத்தமிடும், சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் , நான் ரசிக்கின்றேன் என்ற நாணமோ என்னமோ நெற்கதிர்கள் அடிக்கடி தலையை குனிந்துகொள்ளும், 

அதில் பெரும்பாலும் 10 மணி அளவில் நடந்து வருவது மிகவும் பிடிக்கும் வயல் வெளிகளை   கடந்து செல்லும் போது கேற்கும் விதம் விதமான பறவைகளின் சத்தங்களை ஆழமாய் அனுபவிப்பதுண்டு. அண்ணாந்து வானத்தை பார்த்தபடி நடப்பதும் ரொம்ப பிடிக்கும் , காதுகளுக்குள் பறவைகளின் சத்தங்கள் ,காற்றின் ஓசை, மெல்லிய குளிர், காற்றில் நெற்கதிர்கள் அசையும் அழகு மெல்லிய ஒளியில் தெரிவது  என்று அத்தனையும் கடந்து நம் முன்னே "நீ ஒன்றும் இல்லை" என்று  சொல்வதுபோல மிகப்பெரிய அகன்ற திரையாக காட்சி தரும் வானம் ஆகா .... இவற்றில் இருந்து ஏதோ ஒரு சந்தோசம் கிடைக்கின்றது என்பதை உணரும்போது     ஒரு "அகந்தயில்லாத கர்வமும் வருவதுண்டு" ... ஆனால்  அந்த பாதை அவ்வளவு தூரம் பாதுகாப்பானதும் அல்ல 

நான் இருபது நிமிடங்கள் கடந்து வரும் அந்த பாதையை சூழ அமைந்துள்ள கிராமம் முழுவதும் சிங்களவர்களே வாழ்கின்றனர். மொழி தெரியாத ஒருவனாக அதை கடந்து வருவதில் உள்ள த்ரில் ரொம்ப பிடிக்குமென்பது இன்னுமொரு காரணம் , அடுத்தது திருடர்களும் அதிகம் என்று கேள்விபட்டிருக்கின்றேன் ஒன்று என்னை திருடன் என்று யாரும் நினைத்துவிடும் வாய்ப்பும் உண்டு சின்னதாக ஒரு சந்தேகம் வந்தாலும் அவ்வளவுதான் மொழியும் தெரியாது என்பதால் பின்னி எடுத்துவிடுவார்கள் அதிலும் தமிழ் என்று தெரிந்தால்???? ...அந்த த்ரில்லும் பிடிக்கும் ,


இன்னுமொரு சிக்கல் நாய்கள்.. கடி நாய்கள். கிட்டத்தட்ட 15 வயது வரையில் நாய்கள் என்றாலே அலறி அடித்து ஓடிவிடும் பழக்கம்  இருந்தது. ஆனால்  இப்போது நாய்களை எவ்வளவு கொடூரமான நாய்களாக இருந்தாலும் சமாளிக்கும்வித்தை என்னவென்று தெரிந்துவிட்டதால் பாதையை கடக்கும் நிமிடங்களில் நாய்களை இலகுவாக சமாளிக்க முடிகின்றது. நாய்களிடம் ஒரு பண்பு உண்டு நாம் அவற்றின் குரலுக்கு அசைவை காட்டினால்தான் அவை பிரச்சினை கொடுக்கின்றன ( react  பண்ணினால் ) எந்த சலனமும் இல்லாமல் அவற்றின் குறைப்பை சட்டை செய்யாமல் நடந்துகொண்டே இருந்தால்  சில நேர பின்தொடறலின் பின் அவை தாமாக அடங்கிவிடுகின்றன.இவன் பயணத்தால் நமக்கு பாதிப்பு இல்லை என்று தாமாக விலகி நமக்கு வழி விட்டு விடுகின்றன!.  இதுதான் மனிதர்களை சமாளிக்கும் வித்தையும் கூட ஆனால் துரதிஷ்டவசமாக சில  மனிதர்கள் நம் பயணத்துக்கு   அவ்வளவு நாகரீகமாக  வழி விடுவதில்லை ......! தமக்கு பாதிப்பே இல்லாவிட்டாலும் ....     ( " கடிநாய் கவனம் ")

Monday, January 21, 2013

."பவரு பவருதான் இது சூப்பர் பவருதான் "

பவரு ஜெயிசிட்டாறு அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பவர காமடி பண்ணவே அணுகின எல்லாரும் தப்பிச்சுட்டாங்க காலர  தூக்கி விட்டுக்கலாம். ( அந்த பட்டியலில்  இந்தியாவின் எல்லா தமிழ்  தொலைக்காட்சிகளும் + மிர்ச்சி , ஹலோ fm  மாதிரி வானொலிகளும் அடங்கும் )  ஆனால் பாவம் ஒரே ஒரு மனுஷன் மேல மட்டும் அநியாயத்துக்கு பலர் பாயிறாங்க "நீயா நானா" ல அந்த "போலி கெளரவம்" எப்பிசோடு நானும் பார்த்திருக்கின்றேன். உண்மைல கேள்வி கேட்ட கோபி மேலயும்., நடுவராக வந்திருந்த "எழுத்தாளர் செல்வப்புவியரசு" மீதும் விமர்சனங்கள் எழுந்ததுக்கு அந்த ரெண்டு பேரும்  எப்டியும் காரணமாக அமையவே இல்லை. அங்கு ரெண்டு பேரையும் பெருமளவு விமர்சனங்களுக்குள்ள தள்ளினது "பவரின் வெகுளித்தனம்தான்றதும்" இங்கு உண்மை சம காலத்துக்கு தேவையான மிகப்பெரிய தத்துவத்த பவரு கத்து வச்சுருக்காரு "எது நடந்தாலும் வாய மூடி சும்மா இருடா ... பாட்டு வரிகள் பவர் ஸ்டாருக்கு ரொம்ப பொருத்தம் "

இதுல நான் தனிப்பட்ட ரீதியா முகம் சுழிச்சது ஒரே ஒரு இடத்துல, "கோபிநாத்" கேள்வி கேட்டு பவரை பற்றி எழுத்தாளர் செல்வப்புவியரசிடம் கேட்டபோது அதற்கு செல்வப்புவியரசு அவர்கள் ஒரு "தூசணத்தை"  உபயோகித்து ஆரம்பிப்பார் அது "மயிரு" என்ற டீசண்டான தூசணத்தில் ஆரம்பிச்சு எதுவாவும் இருக்கலாம் விஜய் tv  அத பீப் போட்டு மறைச்சுட்டாங்க .   அந்த இடம் எனக்கு ரொம்பவே நெருடிடுச்சு "போலியான கவுரவத்த  உருவாக்குரானு எல்லாருமே கிண்டல் பண்ற ஒருத்தன் அத கேட்டுட்டு அமைதியா சிரிச்ச முகத்தோட இருக்குறத பார்த்ததும் "எனக்கும் பவர் மீது ஈர்ப்பு வந்துடுச்சு ...

இன்னுமொரு முக்கியமான மேட்டர் பவர் உபயோகிச்சு பார்க்குற நூதனமான விளம்பர உத்தி , தன்னை எல்லாருமே கிண்டல் பண்றாங்கன்னு நன்றாக  தெரியும்  அதே நேரம் தன்ன கிண்டல் பண்றத  பலர் ரசிக்கிறாங்க என்றதும் பவர் நல்லா புரிஞ்சு வச்சுருக்காரு  அதை வச்சே ஒரு சக்சஸ கொடுத்து பவரு நம்பிக்கைக்கு உதாரணமா மாறி சகிப்புக்கு  முன்னுதாரனமாவே ஆகிட்டாருப்பா , ......

Friday, January 18, 2013

"சிவப்பு தேநீர்"

{1925காலப்பகுதியில் தென்னிந்தியாவின் தேயிலை தோட்டமொன்றில் ஒரு உரையாடல் }


" இப்போ பரவயில்ல டாக்டர் 10 வருசத்துக்கு முன்னால நெனச்சே பார்க்க முடியாதளவுக்கு நிலைமை படு மோசமா இருந்தது மொத்த ஜனங்கள்ல பாதிபேரு ஒவ்வொரு வருசமும் மலேரியா வந்து செத்துப்போவாக .அதவிட கொறச்சல் பேரு நிமோனியா வந்து வயிற்ரோட்டம் வந்து செத்து போவாக .அப்போ எல்லாம் கூலிக   ஓடாம இருக்க எல்லா இடத்துலயும் காவக்காரங்கள நிறுத்தி வைப்போம். வேல செய்யும்போது கூட ஓடாம இருக்க கூலிகள கண்கானிச்சிட்டே  இருப்போம். பெரும்பாலான மேஸ்திரிக ராவுல கூலிகள அடச்சு வச்சுருவாக சில நேரம் சங்கிலில கட்டி வச்சுருவாக இத்தன  ஜாக்கிரதையா  இருந்தாலும் கூலிக  ஓடிப்போயிடுவாக, போறவங்க பாதி வழிலேயே செத்துறுவானுங்க, சில பேர  திருப்பி புடிச்சுட்டு வந்து மத்த கூலிகளுக்கு முன்னால பீதி ஏட்படுரா மாதிரி அடிச்சே கொன்னுடுவானுங்க

,ஒ... எஸ்டேட்ல எவ்வளவு  பயங்கரமான விசயங்கள எல்லாம் பார்த்திருக்கேன் தெரியுமா டாக்டர் கூலிகளா வந்தவங்கள்ள 90 வீதம் பேரு ஏமாத்தி  எஸ்டேட்டுக்கு  கொண்டுவரப்பட்டவங்கதான்.  அவுகளுக்கும் கூலிகளுக்கும் சம்பந்தமே இல்லாத நால  மிருகங்கள  மாதிரிதான் நடத்துவானுங்க. ஆடு மாடுகள கூட இதவிட நல்லபடியா  நடத்துவானுங்கனு சொன்னா கூட தப்பே இல்ல. திருநெல்வேலி கூலிகள சேத்த பின்னலாதான் நிலைமை கொஞ்சம் நல்லாயிட்டு வருது , 

வெள்ளைக்கார தொரைகலும் ரௌடிக மாரிதான் , புடிச்சு  கூலி பொண்ணுங்கள  படுக்க கூப்டுவாக சம்மதிக்கலனா அடிச்சே கொன்னுடுவாக , வேற வழி  இல்லாம இணங்கி போற பொண்ணுங்க கர்ப்பமாகிட்டா   ரொம்ப கொடூரம் கருவ கலைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க சில நேரம்    வயித்துக்குள கைய விட்டு கருவ இழுத்துருவாக இல்லனா கரு கலைரா வரைக்கும் வயித்துல ஏறி மிதிக்கவும் செய்வாக , வருசா வருஷம் எஸ்டேட்ல இருக்குற ஜனங்கள்ல பாதி பேருக்கு மேல உயிரை விடலனா அது அதிஷ்டம்தான் ..... ("RED  TEA  தொகுப்பிலிருந்து) "இப்படி பலரின் உயிர் கொடையினால்  உருவாக்கப்பட்டதுதான் உலகம் அழகு அழகு என்று கொண்டாடும் இந்த சொர்க்க பூமி 

"இன்று டீ எஸ்டேட்களை பற்றி உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன்" என்று என்று கூறிய டாக்டர் ஏப்ரகாம் யோசனையுடன் தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல தொடர்ந்தார் இன்று இந்த எஸ்டேட்களில் உற்பத்தி செய்யப்படும் தேநீரை "சிவப்பு தேநீர்" என்று சொன்னால் அது   மிகைப்படுத்தல் ஆகாது என்று நினைக்கிறேன்  கடந்த காலங்களில் தங்களை தாங்களே பலி கொடுத்துக்கொண்ட ஆயிரம் ஆயிரம் ஆண் பெண்களின் இரத்தத்தாலும் கண்ணீராலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்த   தேநீர். இந்த 
முகம் தெரியாத தேயிலை தொழிளாலர்கள் மற்றும் எழுத்துப்பணியாளர்கள் தென்னிந்தியாவில், சிலோனில் தேயிலை தொழிலை நிர்மாணிக்க செய்த தியாகங்கள் அரசாங்கத்தினாலும் நமது நாட்டு மக்களாலும் என்றாவது ஒருநாள் புரிந்துகொள்ளப்படும். அங்கீகரிக்கப்படும். என்று நாம் நம்புவோம்.  ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 
1925 இல் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை அச்சு பிசகாமல் அப்படியே 2013 இலும் சொல்லவேண்டி உள்ளது இன்னும் நூறு வருடம் போனாலும் அரசாங்கமோ நாட்டு மக்களோ அந்த  மாபெரும் தியாகங்களை நினைக்கப்போவதில்லை ........காரணம் அவை யாருக்கும் தேவை இல்லை 

Thursday, January 17, 2013

"இரவு தேசம் " 2


இரவை இருளை அனுபவிப்பது என்பது ஒரு அழகான, ஆழமான பயணம்.   அந்த பயணம் நமக்குள் மாற்றங்களை கொண்டுவரக்கூடியது, நம்மை நாம் அனுபவிக்கும் பயணமது.
எந்த நிலையில் இருந்தாலும் எதை அடைந்திருந்தாலும் அடிப்படை என்ன என்பதை சொல்லும் பயணமது , நமக்குள் நாம் உரையாடிக்கொள்ளும் பயணம். இன்னும் தயார்படுத்தலின் விதைகள் இருளுக்குள் விழும் போது  விருட்சம் பெரு  விருட்சம்!!! ,

கண் திறந்திருக்கும் போது நம்முடையது என்று நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளங்களை பற்றி இருளுக்கு எந்த அக்கறையும் இல்லை, அங்கு எல்லாமே எங்களுடையது  எதுவுமே எங்களுடையது அல்ல , சாத்தப்படும் போது அதாவது மூடப்படும்போது எல்லை வந்துவிடும் இதுதான் யதார்த்தம், கதவு யன்னல், கேட் என்று எது மூடப்பட்டாலும் அது ஒரு எல்லையை உருவாக்கும் ஆனால் இமைகள் மூடப்படும்போது மட்டும் இமை என்னும் கதவை ஊடறத்து பயணப்பட முடிவது ஆச்சர்யம்!!! அங்கு எல்லைகளே  கிடையாது  இமைகளை தாண்டி "எல்லை இல்லாத ஒரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும்",

பல இமை மூடிய இருள்கள் நீதிமன்றத்தை போல நடந்துகொள்ளும் அங்கு நாம் உண்மை  மட்டுமே பேசுபவர்களாக மாறி விடுகிறோம் பொய் அங்கு இரண்டாம் பட்சமாய் உதவிக்கு மட்டுமே வரும். அல்லது ஆறுதலுக்காக வரும். அந்த நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு நியாயத்தை மட்டுமே தொடும்.,    சில நேரங்களில் பிரபஞ்ச ரகசியமே அந்த இருள்தானோ என்று நான்  இருளுடன் முட்டி மோதி தோற்றதுண்டு  ( சிறு பிள்ளைத்தனம் ) !ஆனால் .... உண்மை இருளுக்குள்  ஆத்மார்த்தமாய்  மூழ்கும் போது நம்மிடம் இருந்தும்,நாம் என்று அடையாளப்பட்டிருக்கும்   நம் தேவை உள்ள பலரிடம் இருந்தும்,  நமக்கு அவசியமானவர்களிடம் இருந்தும் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் சந்தோசமான அபாயமும் உண்டு.   இவை எல்லாம்  அலாதியான அனுபவங்கள் , அனுபவிக்க வேண்டிய   நிஜங்கள் கண்டுகொள்ளப்படாமல் வீணடிக்கப்படுகின்றது 

  

அவதூறு!.....( 1 )

நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும் இருவருமே பெரிய புள்ளிகள் அவரவர் துறையில் பெயர் பதித்தவர்கள் , அடுத்தது வலையுலகில் இவர்கள் இருவருக்குமே இருக்கும் சார்பான ,எதிர்ப்பான   கூட்டம்(வாயை கொடுத்து எதுக்கு  புண்ணாக்கிக்கனும்னு ) ,அடுத்தது வலையுலகில் இந்த விவகாரம் அருகப்பழசானது . இருந்தாலும் பல பதிவர்கள் தைரியமாக இவர்களை பற்றி பதிவிட்டிருக்கவே என்னுடைய கருத்தையும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுத வந்துவிட்டேன். 

சாறு நிவேதிதா - இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் அண்ணன் "ராஜ்மோகன்" , சாதாரணமாக இருந்த புத்தக நடையில் இருந்தும், எழுத்துக்களை கோர்த்து கதை சொல்லும் பாங்கில் இருந்தும்  இவர் முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்டவராக தெரிந்தார், உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரின் புத்தகங்களை படித்து தலையை பிய்த்துகொன்டு தூக்கமில்லாமல் கிடந்திருக்கிறேன் , பிறகு மீள மீள வாசிக்க வாசிக்கத்தான் ஓரளவுக்கு புரிந்தது அதையும் தாண்டி  அவர்  எழுத்துக்களில் சொல்ல வரும் விடயங்கள் பல்வேறு விதமான படிமங்களை உருவாக்குவதையும், ஒரே வார்த்தைக்குள்  பல முடிவுகளை நாமே சிந்திக்க வேண்டிய விசித்திரத்தையும் உணர்ந்தேன் .
தமிழில் வெளியான முதலாவது பின்நவீனத்துவ நூல் என்னும் அடையாளத்தோடு வந்த Existentialism-mum Fancy Banian-    um படிக்க நான் பட்ட பாடு................. பின்புதான் சில விடயங்கள் புரிந்தது சாதாரண வாசிப்பு 
முறையும் உள்வாங்கும் திறனையும் தாண்டி சாருவின் எழுத்துக்களுக்கு வேறு ஒரு முறை தேவைப்படுகின்றது , அதற்கு பல முறை மீள் வாசிப்பு தேவை அதை உள்வாங்கி மனதுக்குள் பலமுறை அசைபோடும் பக்குவமும்.வேண்டுமென்று  ,  ராசா லீலாவும் அப்படித்தான், ஜீரோ டிக்ரி புரியவே இல்லை  ஜீரோ டிக்ரீயை 
California State University இல் தனி பாடமாகவே கற்பிக்கப்படுவதை அறிந்தபோதுதான் அது ஏன் எனக்கு புரியவில்லை என்பது புரிந்தது   , excile  இன்னமும் படிக்க கிடைக்கவில்லை


 சாறு மீதான தூண்டுதல்தான் அவரை பற்றி நிறைய தேட வைத்தது.  அப்படி கொழும்பு தமிழ் சங்கத்தில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு புத்தகமும், அதனை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக அவரின் வலைதளத்தில் எழுதியிருக்கும் விடயங்களும் சாருவின் எழுத்துக்கள் சிலரை மோசமான வித்தத்தில் மட்டமாக  நடத்துகின்றன என்பது அப்பட்டமாக தெரிந்தது நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்களை பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டாலோ சொல்லப்பட்டாலோ அதிர்ச்சி அடைவதும் அல்லது எதிர்ப்பதும் தான் இயல்பு, ஆனால் இவர் ஏன் இவரை இவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டும் இதன் உள்  நோக்கம் என்னவாக இருக்கும் ? விமர்சனம் என்பது பட்டை தீட்டுவதாகவும் தவறுகளை சரி செய்துகொள்வதட்காகவும்  இருக்க வேண்டுமே ஒழிய இப்படிநார் நாராய் கிழிப்பதாக அமைய என்ன காரணம் ? இப்படி பல கேள்விகள் மனதுக்குள் எழவே இன்னும் இன்னும் புரட்ட சில விடயங்களில் சாறு எவ்வளவு சுயநலமாக அடிமட்ட மனநிலையில்  அரசியல் விளையாடுகிறார் என்பது புரிந்தது ...

Friday, January 11, 2013

25 வயது ( சுய தம்பட்டம் )

அத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழில் அந்த வார்த்தை மட்டும்தான்  என்பதால் அதை அடி மனதில் இருந்து உண்மையாக சொல்கின்றேன் "எல்லா வாழ்துக்க்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" நான் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அகந்தையை குறிக்கும் என்று நான் கருதவில்லை "நாதியற்றவன்" என்பதன் சுருக்கம் தான் நான் என்பது என் கருத்து .   
25 வயது என்பதை நினைக்கும் போதுதான் எனக்குள் வாழ்கையின் மூன்றில் ஒரு பங்கிலும் அதிகமான காலம்  வாழ்ந்துவிட்டேன் என்பதை சந்தோசமாக உணர முடிகின்றது. வயது அதிகமாக அதிகமாக பொறுப்பை விட திருப்தி  அதிகமாகின்றது என்பது சந்தோசமான விசயமா ?? வாழ்வின்  அடிமட்ட  நிலையில் இருந்து எனக்கான பாதையை தேட ஆரம்பித்து இன்னமும் தாகத்தோடு போராட ஆசைப்படும் ஒருவன் என்ற மமதை இல்லாத நம்பிக்கையும் உண்டு. இதுவரையில் தோல்விகள்தான் அதிகம் என்றாலும் மனம் எப்போதும் தளரேன் காரணம் "நான் தமிழன் பச்சை தமிழன்."

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்பது எனது நண்பர்களுக்கு தெரியும். நேற்றுவரை எதை சாதித்தோம் என்று கொண்டாடுவது என்ற கேள்வி தான் அந்த உணர்வுக்கு காரணமாய் இருந்தது. இருந்தும் சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான  காரியம் என்பதை நினைக்கும் போது அதுவும் ஒரு சாதனை தான் என்பது என் அகந்தயில்லாத நம்பிக்கை. எனக்கே தெரியாமல் எனக்கு   போடப்பட்ட முகமூடிகள் அதிகம் இன்னும் தெளிவாக சொல்வதானால் எனக்கு நல்ல பெயர் என்பது ரொம்ப குறைவு. எனக்கே தெரியாமல் அவை உருவாக்கப்படுகின்றன.  இந்த வருடம் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய மனப்போராட்டம் இதுதான் "நான்" என்பது பற்றி எனக்கே தெரியாதபோது எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ???? இது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று அல்லவா? ஆனால் அந்த மன போராட்டத்தில் இருந்து நான் மிக பத்திரமாக வெளிவந்துவிட்டேன், இது இந்த வருடத்தில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றி .. 

யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....

Thursday, January 10, 2013

விஸ்வரூபம்ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் கூட்டத்தை, எப்போதோ நடக்கப்போகும் உண்மையை அறிந்து திசை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும். கமலுக்கு நடந்ததும் அதுதான் இன்னும் பத்து வருடங்களில் நடக்கப்போவதை ( தனது  துறையில் ) இப்போதே உணர்ந்து புது முயற்சிகளை எடுப்பவர்களில் கமலுக்கு தனி இடம் உண்டு. அவரின் பல முயற்சிகள் தோல்வி அடைவதும் அதனால்தான்  ஒரு  உதாரணத்திற்கு   குணா படம் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம் அப்போதைய சூழழுக்கு அது ஒரு அறுவை படம். ஆனால் அதையே தழுவி 10 வருடம் கழித்து வந்த காதல் கொண்டேன் வெற்றி அடைந்ததே? அப்படியான ஒரு முயற்சிதான் கமலின்  DTH  முயற்சி இங்கு நான் கமல் கலைத்துறைக்கு சேவை செய்யும் பரிபூரண எண்ணத்தில் இதை செய்கிறார் என்று சொல்ல வரவில்லை, வியாபாரம்தான் ஆனாலும் காலமாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் துறையில் மாற்றம் கொண்டு வருபவர்களும் அதை உள்வாங்க முயல்பவர்களாலும் மட்டும்தான் காலம் கடந்து நிலைக்க முடியும் குறைந்தது காலத்துடன் ஓட முடியும்.  கமலின் தீர்க்க தரிசனம் இப்போதைக்கு பொருந்தாது என்பதும் உண்மைதான் ஆனால் DTH  இல் வெளியிடப்பட்டிருந்தால்   அது திரைத்துறையில் ஒரு பெரிய மயில் கல்லாக இருந்திருக்கும் !...

மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம்

நம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று தன்னிலை மறந்ததும்.... சில நிமிடங்களில்  ஒரு விரக்தி நீண்ட பெருமூச்சு  ( இவை வர்ணிப்பாக யாரும் கருதக்கூடாது ) மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கொள்கை கொண்டவர்கள் மட்டும் பதிவை தொடருங்கள் , பதினைந்து செங்கல் கற்கள் இரண்டு தகரம் கை நீட்ட இடமில்லாத ஒரு வீட்டை அதில் குருவிகள் போல வாழும் ஒரு குடுமபத்தின் எதிர்காலத்துக்காக தன்னை அர்பணிக்க சென்ற அந்த தாய்க்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும்?  தனக்காக யார் யாரோ முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி சிறைக்குள் அவள் காதுகளுக்குள் எட்டியிருந்தால் இறுதி நிமிடம் வரை வாழும் நம்பிக்கை எவ்வளவு இருந்திருக்கும் , உலகின் உச்சகட்ட கொடுமை நூறு வீத வாழும் நம்பிக்கை இருக்கும் போது தனக்கே தெரியாமல்  இறப்பதுதான். 

ரிசானாவுக்கு நடந்ததும் அதுதான் " நேற்று முன்தினம் ரிசானாவை  கவனிக்கும் வைத்தியர் உலக ஊடகங்களுக்கும் , இலங்கை ஊடகளுக்கும்  அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார்  ரிசானா   சிறைக்குள் எதுவும் அறியாதவளாக இருக்கின்றார், மரண தண்டனை உறுதியானது அவருக்கு தெரியாது,  தான் குடும்பத்துடன் மீண்டும் சந்தோசமாக வாழப்போவதாக   முழுமையாக நம்புகிறார் என்று " தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் . அப்படியானால் ஒரு உச்சகட்ட கொடுமை ஒன்று அந்த தாய்க்கு நடத்தப்பட்டுள்ளது, 

இன்னுமொருபுறம் ரிசானாவின் கையில் இருக்கும் போது  இறந்த அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாகவே இறந்தார் என்றும் அது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் gulf  news உள்ளிட்ட பல ஊடகங்கள் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியே இருந்தாலும் வெறும் 17 வயது சிறுமி ஒரு  குற்றம் புரிந்தால் அவரை சீர்திருத்த முயலக்கூடாதா ? மரண தண்டனைதான் தீர்வா??? இன்று எல்லா ஊடகங்களிலும்  ரிசானாவின் குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன் ரிசானா  மரணித்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லி இருக்கின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இன்னும் பல ரிசானாக்கள் வாழ்வை தேடி சென்று வாழ்கையை தொலைக்கும் அவலம் கண்டிப்பாய் தொடரும், மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...
Copyright © 2014 நட்சத்திரவீதியில்