Sunday, September 29, 2013

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் (3)


பூனைகள் நாய்கள் மட்டும் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு எப்படி மனிதனுடன் ஆழமான உறவை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திக்கொள்கின்றன? என்ற கேள்வியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை மனிதன் கொடுக்கும் பயிற்சிகள் ஒரு கர
ணம் என்றாலும் முழு மாமிச பட்சிணியான நாய்கள் பூனைகள் இன்று மனிதனை போல எல்லாவற்றையுமே உண்டு வாழ்வது எப்படி சாத்தியமானது?

பூனைகள் வளரும்போது எப்படியெல்லாம் மனிதனோடு இயல்பாக ஒன்று கலக்கின்றன என்பதை கறுப்பனிடம் தான் கண்டுகொண்டேன்.   அவனிடம் மனித உணர்வுகள் அசாத்தியமாக நிறைந்துபோயிருந்தன  நிறையவே கோபம், பிடிவாதம், புரிந்துகொள்ளல் அன்பு, ஏக்கம் என்று நிறைய மனித உணர்வுகள் அளவுக்கு அதிகமாகவே அவனிடம் நிறைந்துபோயிருந்தன்

நிற்க


நான் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வந்து வீட்டில் என்னிடம் கொட்டிய பாசமும்  ஐயையோ..... ஆனந்தமே!!! ...கறுப்பனை அப்பா எப்படி வீட்டுக்கு கொண்டு வந்தார் என்ற கேள்விக்கு இரவில் தான் பதில் வாங்க முடிந்தது. இதற்கு மத்தியில் என்னை துரத்து துரத்தென்று துரத்தியடித்த அந்த நாய்குட்டி இன்னமும் நான் அவனை தாண்டி போகும்போதெல்லாம் எதோ வேண்டாதவனை பார்ப்பதுபோல முறைக்குறான்.

அப்பா வேலை செய்யும் பகுதியில் இருந்து கருப்பனை வீட்டுக்கு கொண்டுவர எந்த வாகனத்தையும் நம்ப முடியாது யாரும் பூனைகளை வண்டியில் ஏற்ற அனுமதிக்க  மாட்டார்கள். பையில் போட்டு பஸ்ஸில் யாருக்கும் தெரியாமல் கொண்டுவருவது கறுப்பனுக்கு ஆபத்தானது. இருக்கும் ஒரே வழி அட்டைபெட்டிக்குள் நாய்க்குட்டியை கொண்டுவருவது போல கொண்டுவருவதுதான்


 எங்க ஊரில் கிட்டத்தட்ட 98 வீதமானவர்கள் தேயிலையை நம்பி வருமானம் ஈட்டுபவர்கள்.(அந்த ஒரே காரணத்துக்காக இன்றுவரை என் மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாலாது ) நாங்களும் அப்படித்தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசம்  அப்பா ஒரு நிறுவனத்தில்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அம்மா தேயிலை தோட்டம் ஒன்றின் அலுவலக தலைமை  குமாஸ்தா  எங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களை விடவும் எவ்வளவோ பரவாயில்லை. ஆக  போக்குவரத்து என்றால் அங்க பேருந்துதான் ஒரே ஆபத்பாண்டவன். இப்படி வாகனங்களில் நாய்களுக்கு இடமுண்டு ஆனால் அட்டைபெட்டிக்குள் சுவாசிக்க சில துவாரங்களை உருவாக்கி அதற்குள் நாய்களை போட்டு பஸ்ஸில் கொண்டுவந்துவிடலாம் இடையில் பசிக்காமல் இருக்க பன் ஏதாவது உள்ளே வைத்துவிடலாம் இதே முறையில்தான் கருப்பனை ரொம்ப கவனமாக கொண்டுவர வேண்டும்.

ஆனால் இடையில் கருப்பன் கத்தி உள்ளே இருப்பது பூனைதான் என்று காட்டிக்கொடுத்துவிட்டால் கெதி  அந்தரம். எப்படியோ அப்படி எதுவும் நடக்கவில்லையாம் ரொம்ப சமத்தாக தூங்கிவிட்டானாம் பிரச்சினையே இல்லாம கறுப்பன் வீட்டில் லேண்ட் ஆகிட்டான்.

இது நடந்து ஒரு மாத இடையில் இதே முறையில் வீட்டுக்கு வந்த எip தான் என்னை கதற கதற துரத்தின அந்த சின்னப்பயல். :)

(தொடரும் )

Thursday, September 26, 2013

யாழ் பயண அனுபவம் 2

மொத்தம் 8 நாட்கள் யாழில் தங்கி இருந்த நாட்கள் எப்போதும் போல அழகானவை. கடந்த ஆண்டுக்கு முன்னைய ஆண்டு யாழ்பாணம் செல்லும் போது  இருந்த குழு இந்த முறை இல்லை. அப்போது எனக்கென்று எந்த பொறுப்பும் இருக்கவில்லை, அதே வேளை யாழ்பாணம் சென்றது முதல் தடவை என்பதால் ஒவ்வொன்றிலும் ஆச்சர்யம் நிறைந்து போயிருந்தது இம்முறை அப்படியல்ல ஒரு சில பொறுப்புகள் இருந்ததும் பழைய ஆச்சர்யம் மிஸ்ஸிங் .

சக்தியின் யாழ் கலையகம் அமைந்திருந்த பகுதியில் நிறைய கடை தொகுதிகள் அமைந்திருக்கும்  அதில் யாழ் விழிப்புலனற்றோர்  சங்கமும் தங்களுடைய கைவண்ணத்தில் உருவான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது. அதன் உறுப்பினர்கள் இருவர் பாதையில் நின்று அதிஷ்ட சீட்டுக்களை வித்துக்கொண்டிருந்தார்கள்

அதன் முன்னைய நாள் கலையகத்துக்கு சந்திக்க வந்த விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேச கிடைத்தது.  பேசும்போது அவர் எனது ஊர்காரர் என்றும்   10 வருடத்துக்கு முன்பு சக்தியின் ஊடாக யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணைந்ததாக கூறியிருந்தார் ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது பார்வை அற்றோருக்கு உதவுவதை விடவும் இந்த உலகின் உச்சகட்ட சந்தோசம் திருப்தி வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை ,

மறுநாள் கடை தொகுதிகளை தாண்டி செல்லும்போது மேற்படி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதிஷ்ட டிக்கட் விற்றுக்கொண்டிருந்தார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாத அவர் வாய் விடாமல் கூவிக்கொண்டே இருந்தது. என்னிடம் இருபது ரூபாய் தாள் இருந்தது அதை கொடுத்து ஒரு டிக்கட் கொடுங்கோ என்று கேட்க அவர் ஒரு டிக்கட் கொடுத்தார் எவ்வளவு தந்தீர்கள் என்று கேட்டார் 20 ரூபாய் என்று சொன்னேன் ஒரு டிக்கட் 10 ரூபாய்தான் என்று மீதத்தை  தர போனார் நான் வேண்டாம் இருக்கட்டும்  என்று சொல்லி நகரப்போக அவர் என் கையை பிடித்து வலுக்கட்டாயமாக பணத்தை தந்துவிட்டார் கொஞ்சம் கடுமையான குரலில் "பிடியுங்கோ" என்று சொன்னது அவரின்  கோபத்தை உணர்த்தியது.

ஏன் இப்படி செய்தார் நான் அதை உதவியாகத்தானே செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டு நடந்தேன் பிறகுதான் ஒரு உண்மை உரைத்தது. "அட கண் பார்வை இல்லாமல் ஒருத்தன் உழைச்சிட்டிருக்கான் ஒரே நிமிஷத்துல வெறும் பத்து ரூபாய நீட்டி அந்த உழைப்பாளிய கொச்சைப்படுத்தி பிச்சைக்காரனாக்க பார்த்திருக்கேன்னு" நெனச்சப்போ மனசே இறுகிவிட்டது. என்னை அறியாத ஒரு கூச்சம் அருவருப்பு  மனதுக்குள்  தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மறுநாள் முதல் வேலையாக அந்த வழியில் அவரை தேடி பிடித்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சாந்தமானது மனது.  இதில ஆச்சர்யம் என்னனா அவர் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்திருந்தார் என்னை பொருத்தவரைக்கும் நான் செய்தது மிக பெரிய தவறு

ஊனம் என்பது ஈனமல்ல ஊனத்தை குறையாக நினைக்கும் மனதுதான் ஈனம்

Wednesday, September 25, 2013

யாழ் பயண அனுபவம் - 1

பயண அனுபவங்களை  பதிவிடுவதென்பது ஒரு அலாதியான விடயம்.  பயணம் அனுபவிக்க வேண்டிய அழகான புத்தகம் போல. ஒவ்வொரு இடமும் ஏதாவது ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுக்கும் புதிதாய் சந்திக்கும் இயற்கையின் மாற்றங்கள், சில கிலோமீட்டர் வித்தியாசத்திலேயே மாறும் இயற்கையின் வடிவங்கள் மனிதர்களின் மொழி நிற வேறுபாடுகள்  என்று ஒவ்வொரு பயணமும் "அகிரா குரோசோவாவின்" படங்கள் கொடுக்கும் எல்லா உணர்வுகளையும் அதன் உச்சத்தில் சேர்த்து கொடுக்கின்றது

எனக்கு உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வாழ்நாள் லட்சியமாகவே மாறிப்போய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் மிருக பலம் கொண்டு உறங்கிக்கொண்டிருக்கின்றது ஹி ஹீ ...இலங்கை பயணம் செய்ய மிக அழகான ஒரு நாடு. சந்தேகமே இல்லை உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் இயற்கை மாற்றங்களை தேடி தமது தேச எல்லைகளை கடந்து செல்ல வேண்டிய நிலைமை. ஆனால்  இலங்கை அப்படி அல்ல "ஒரு மாவட்டத்துக்கு ஒரு காலநிலை இயற்கை வடிவ மாற்றம், சில நேரங்களில் ஒரு பிரதேசத்துக்கு  பிரதேசம் கூட காலநிலையில் மாற்றம் காட்டுவது" இலங்கையை நினைத்து  எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கின்றது.

வடக்கு கிழக்குக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அதை நான் உணர்வு சார்ந்த விடயமாகவே எண்ணுவதுண்டு (இதை என் அருகில் இருக்கும் பலரே  கேலியாக பேசுவதுண்டு ) திரும்பும் பக்கம் எல்லாம் தமிழ் வாச
சக்தி fm குழுவுடன் நல்லூர் ஆலய முன்றலில்


னை என்பது  எனக்குள் பல உணர்வுகளை கிளரச்செய்து எதோ ஒரு பெருமிதத்தை கர்வத்தை  கொண்டுவரும்.
யாழ்பானம் தனியாக செல்வது என்பது வேறு ஆனால் "சக்தி" என்ற மிக வலுவான பிரம்மிக்க வைக்கும் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு ஊடகத்துடன் நானும் ஒரு அங்கத்தவன் என்ற வகையிள் செல்லும் போது கிடைக்கும் அனுபவங்கள் அபாரமானவை அருமையானவை.

இம்முறை  யாழ் சென்றது சக்தியுடன் என் கடைசி பயணமாக கூட இருக்கலாம் என்பதால் நிறைய ரசித்தேன் ...நிறைய சிந்தித்தேன் நிறைய உணர்ந்தேன் ...இடையில் வடக்கு மற்றும் நான் சார்ந்த மத்திய மாகானத்துக்குமான தேர்தலும் நடந்து  முடிந்துவிட்டது. வடக்கில் மக்களின் இயல்பான போராட்ட குணமும் தமிழனுக்கே உரிய திமிரும் வெளிப்பட்டுவிட்டது மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் என்பது இலங்கையை பொறுத்த வரைக்கும் ஒரு கேலிக்கூத்தான விடயம்தான். ஆனாலும் "கடுகு என்றாலும் அதை என்னவன் தரவேண்டும் நீ வேண்டாம்" என்று மக்கள் கொடுத்த அடி வரலாற்று  திருப்புமுனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா  மிக பலம் வாய்ந்த பழுத்த கல்விமான் அரசியலின் சானக்கியங்களுக்குள் எப்படி தமிழ் மக்களின் விடியலுக்காக காய்களை  நகர்த்துவார் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.

வட மாகாண முதலமைச்சர்
மறுபக்கம் நான் சார்ந்த மலையக தமிழர்கள் இனியாவது கிடைக்கும் என்று 100 வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சலுகைகளுக்காக மீண்டும் அணி திரண்டு உரத்த குரலில் வாக்களித்துள்ளனர்.ஆனால் உரிமைகள் கிடைத்தால் சலுகைகள் தானே கிடைக்கும் என்பதை என் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றார்கள் என்பதை காண ஆசையாக உள்ளது.  வழக்கம் போல  இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியும் தொழிலாளர் தேசிய சங்கம் அடுத்த இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது மலையகத்தை பொறுத்த வரைக்கும் அங்கும் ஒரு வரலாற்று வெற்றி தமிழர்கள் சார்பில் நிலைநாட்ட பட்டுள்ளது தமிழ் பிரதிநிதிகள் 11 பேர் என்பது அர்த்தமற்ற அதே நேரத்தில் ஒரு வரலாற்று வெற்றிதான் .

Copyright © 2014 நட்சத்திரவீதியில்