Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் "நியாயமும், நியாயமின்மையும்"


"உலகம்  முழுவதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதி தமிழ் நாட்டில் நமது சக ரத்த உறவுகள் இஸ்லாமியர்களுடன் தங்கி இருக்கின்றான்" என்பது போல காட்டப்படுவதுதான் இஸ்லாமிய அமைப்புகளுக்கு பெரும் நெருடலாக அமைந்ததாக சொல்லப்படுகின்றது. அப்படி அமைவது  நியாயமும் உண்டு தமிழகத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க பட்ட பாட்டை என்னிடம் சொல்லி ரொம்பவே வருந்தினார். யுத்த காலத்தில் இலங்கையில் இந்த அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டதுண்டு  அவர்களின் போராட்டத்தில் நியாயம் உண்டு  தைரியமாக மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா " இப்படி ஒரு இந்துத்துவ தீவிரவாதி ஒருவனை பற்றி  தமிழில் அல்லது இந்தியாவில் எந்த மொழியில் படம்  எடுத்தாலும் அதை அங்கு திரையிட முடியும் என்று ?" 

சினிமா என்பது ஒரு வலுவான  ஊடகம் அதில் உயிரோட்டமாக சொல்லப்படும் எந்த விசயமும் ஏற்படுத்தும் தாக்கமும் பாய்ச்சலும் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை உண்டு பண்ணும்.  எனவே இப்படியான காட்சிகள் எல்லா முஸ்லிம்  சகோதரர்களையும் அச்சத்துடன் அருவருப்பாக பார்க்க தூண்டுவதாக அமையும் என்பது உண்மை .எனவே  முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் இதை எதிர்த்து போராட  வழுவான காரணம் உண்டு. அங்கு அந்த படம் தடை செய்யப்படாமல் காட்சிகள் அகற்ற சொல்லி வழியுருத்தவும் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு.    தொடர்ந்து மணிரத்னத்தின் பாம்பே படத்தில் இருந்து ஒரு சமூகத்தை குறி வைப்பதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டமானதுதான் . அப்படி செய்யப்பட காரணம் சிறுபான்மை இனம் என்ற பார்வைதான், அது ஒரு வகையான எகத்தாளம்   இலங்கையிலும் அதே நிலைமைதான் ...


பாபர் மசூதியை காவி உடை உடுத்தி சென்று இடித்த அந்த காவியுடை இந்துத்துவ பயங்கரவாதிகளை பற்றி படம் எடுங்கள். அவர்கள் செய்த கொடூரங்களை, உயிரோடு இருந்த  கர்பிணித்தாயின்  வயிற்றை  கிழித்து குழந்தையை எடுத்த காட்சியை அப்படியே படமாக்குங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் படத்தை வெளியிட்டுக்காட்டுங்கள் முடியுமா??  .... ஆனால் இலங்கையில் நிலைமை அதுவல்ல இலங்கையில் இந்த படத்திற்கு எதிராக சிலர் இடும் கருத்துக்கள் முழுக்க முழுக்க மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பது வேதனை தருகின்றது. 

அதற்கு கொடுக்கப்படும் எதிர் கருத்துக்களிலும் அதே மதவாத நெடிதான் வீசுகின்றது .. அதை தவிர்த்து இந்த படத்தை இங்கு எதிர்ப்பதற்கு  வலுவான  காரணம் எதுமே கிடையாது , ஒரு வாரமாக facebook  , tweettaril  இது தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் நிச்சயம் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அடி மனதில் இருந்த இனத்துவேசங்கள் இதை காரணமாக கொண்டு வெளியே வந்தது. காரணமே இல்லாமல் சிலர் சண்டை போட்டதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாய் பயந்து போனேன் இது எங்கே கொண்டு போய் விடப்போகின்றது என்று, அப்படி கருத்து மோதலில் ஈடுபட்டவர்களில் 80 விழுக்காட்டினர் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து சண்டையிட்டது கவலைக்குரியதாக இருந்தது 

இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேறு ... நான் பெரிதும் மதிக்கும் ஒரு எழுத்தாளர் விமர்சகர் முன்னாள் அறிவிப்பாளர்   ஒருவர் கமல் அமெரிக்காவுக்கு கு ... கழுவி  விடுகின்றார் என்று பகிரங்கமாக சொல்லியிருந்தார் இதில்  தேவையே இல்லாமல் இலங்கையில் நடந்த போராட்டத்தை  வேறு வம்புக்கிழுத்து மொட்டை தலையையும் முழங்காலையும் முடிச்சு போட்டு விட்டிருந்தார் ... அதற்கு எதிர் கருத்தாக சில இந்துத்துவ மதவாதிகள் இட்ட கருத்துக்களும் எரிச்சலாய் இருந்தது என்னை பொறுத்த வரை இலங்கையில் இந்த படத்தை எதிர்ப்பதில் நியாயம் என்பது குறைவான விழுக்காடுகள்தான் , காரணம் அதையும் விட இங்கு  எதிர்க்க வேண்டிய சமாச்சாரங்கள்  நிறைய உண்டு .

கமல் இஸ்லாமிய எதிராளியா?? என்ற கேள்வியே ரொம்ப மட்டமானது அவர் மத நம்பிக்கை அற்றவர் என்பது எல்லோருக்குமே தெரியும் .. "கிரகனாதி கிரகங்களுக்கும் அப்பால் ஒரு அசகாய சக்தி உளதாம்..." என்று இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கவிதை சொன்னவர் , ஹே ராம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு அப்போது நடந்த கொடுமைகளை சொல்லி எதிர்ப்பை சம்பாதித்தவர் , தசாவதாரம் படத்தில் சைவர்களை கிட்டத்தட்ட இழிவு படுத்தி வைணவர்களை பற்றி சொன்னவர். அவருக்கு மதம் அல்ல முக்கியம் சொல்ல வரும் கதைதான் முக்கியம் இது வெளிப்படை ஆக  விஸ்வரூபம் என்ற படமும் அப்படியானவற்றின் தொடர்ச்சிதான் ( அவருக்கு ஒஸ்கார் கனவு உண்டு அதற்காக அமெரிக்காவுக்கு சாதகமாக அவர் படம் எடுப்பார் என்று சொன்னாலும் அதற்கும் குறைவான விழுக்காடுகள்தான் நியாயம் அகாடமி விருதுகள் எல்லாமே அமெரிக்காவை தூக்கி பிடிப்பவர்களுக்கு மட்டுமா வழங்கப்படுகின்றது ??) ஒரு படைப்பாளியாக கமல்  துறைக்கும் உழைப்புக்கும் நேர்மையானவர் அவரின் படைக்கும் திறனை ஆதரிப்பதில் தவறு இல்லை ...... அந்த வகையில் படத்திற்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியே ஆனாலும் தமிழகத்தில் இதற்கான போராட்டங்களில் நியாயம் உண்டு என்பதால் போராடும் இஸ்லாமிய  அமைப்புகளின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் .....

Tuesday, January 22, 2013

" கடிநாய் கவனம் "



"நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையில் பெரும்பகுதி பிரயாணங்களுக்காக காத்திருப்பதிலேயே செலவாகின்றது" என்றால் தவறில்லை அந்த காத்திருப்பு ஒரு இனிய காத்திருப்பு அல்ல எரிச்சலை கொண்டுதரகூடியது.  கிராமத்துப்பக்கம் ஒரு பேருந்தின்  வருகைக்காக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்த நாட்களும் உண்டு. ஒரு பேருந்தில் இருந்து இன்னுமொரு பேருந்து அதிலிருந்து இன்னுமொரு வண்டி என்று இயங்கும்  நாளில் மூன்றில் ஒரு பங்கை பிரயாணமும் அதற்காய் காத்திருக்கும் நேரங்களும் தின்றுவிடும். 

எனக்கு இதில் உடன்பாடே கிடையாது இதனால் காத்துக்கொண்டு ஒரு இடத்தில் நிற்பதையும் விட நடந்துவிடுவது மேல் என்பதே எண்ணம் , அதை பழக்கமாக்கியும் வைத்திருந்தேன். அது இன்றும் தொடர்கின்றது. பெரும்பாலும் இரவில் நடப்பது ரொம்ப பிடித்திருந்தது. ஊரில் இரவு 7 மணி ஆனாலே கடுமையாக இருட்டிவிடும் அந்த கருமையின் கடுமையையும் விழுங்கும் வீதத்தில் குளிரும்.... ஊரில் நள்ளிரவு தாண்டியும் ஒத்தையாக  நடந்து செல்லலாம்.  பாதுகாப்பு குறித்த பயமே எழாது சில நாய்களிடம் இருந்து தப்பினால் போதும்  .அதற்குள் நடப்பதெல்லாம் மிகப்பெரிய அனுபவம். 

பௌர்ணமி நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் இருளை தவிர எதுவுமே தெரியாது நாம் ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் செல்வது போல இருக்கும், எதோ ஒரு அசாத்தியமான உருவம் நம்மை விழுங்குவது போல உணர்வு தரும். கொழும்புக்கு வந்த பிறகு இரவில் நடப்பதற்கான தேவை வெகுவாக குறைந்துவிட்டது, அப்படியே நடக்கும் வாய்ப்பிருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்த முயல்வதில்லை காரணம் அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்ற சந்தேகம் ,  அப்படியே நடந்தாலும் இந்த செயற்கை வெளிச்சம் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசத்தை குறைத்துவிடும் என்பதால் நடந்து செல்வது திருப்தியாகவும் அமையாது .


ஆனால் இங்கும் நடந்துவர ஆசைப்படும் ஒரு இடம் உண்டு. அது எமது அலுவலகத்துக்கு வரும் வழி, வண்டியில் வந்தால் வெறும் 7 நிமிட தூரம் நடந்தால் 20 நிமிடம் . ஆனால் இரவு நேர கடமைகளின் போது  அந்த வழியில் பெரும்பாலும் நடந்து வரவே ஆசைப்படுவேன், காரணம் பாதையின் இரு மருங்கிலும் இருக்கும் மிகப்பெரிய வயல்வெளிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சை பசேலென்று தெரியும் அந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் நடப்பது ஏதோ புதுமையான ஒரு உலகத்தில் நடப்பது போன்றிருக்கும். வயல்வெளிப்பாதைக்குள்  வந்ததுமே அங்கிருக்கும் ஒவ்வொன்றும் என் வருகைக்காகவே காத்திருந்து சத்தமிடும், சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் , நான் ரசிக்கின்றேன் என்ற நாணமோ என்னமோ நெற்கதிர்கள் அடிக்கடி தலையை குனிந்துகொள்ளும், 

அதில் பெரும்பாலும் 10 மணி அளவில் நடந்து வருவது மிகவும் பிடிக்கும் வயல் வெளிகளை   கடந்து செல்லும் போது கேற்கும் விதம் விதமான பறவைகளின் சத்தங்களை ஆழமாய் அனுபவிப்பதுண்டு. அண்ணாந்து வானத்தை பார்த்தபடி நடப்பதும் ரொம்ப பிடிக்கும் , காதுகளுக்குள் பறவைகளின் சத்தங்கள் ,காற்றின் ஓசை, மெல்லிய குளிர், காற்றில் நெற்கதிர்கள் அசையும் அழகு மெல்லிய ஒளியில் தெரிவது  என்று அத்தனையும் கடந்து நம் முன்னே "நீ ஒன்றும் இல்லை" என்று  சொல்வதுபோல மிகப்பெரிய அகன்ற திரையாக காட்சி தரும் வானம் ஆகா .... இவற்றில் இருந்து ஏதோ ஒரு சந்தோசம் கிடைக்கின்றது என்பதை உணரும்போது     ஒரு "அகந்தயில்லாத கர்வமும் வருவதுண்டு" ... ஆனால்  அந்த பாதை அவ்வளவு தூரம் பாதுகாப்பானதும் அல்ல 

நான் இருபது நிமிடங்கள் கடந்து வரும் அந்த பாதையை சூழ அமைந்துள்ள கிராமம் முழுவதும் சிங்களவர்களே வாழ்கின்றனர். மொழி தெரியாத ஒருவனாக அதை கடந்து வருவதில் உள்ள த்ரில் ரொம்ப பிடிக்குமென்பது இன்னுமொரு காரணம் , அடுத்தது திருடர்களும் அதிகம் என்று கேள்விபட்டிருக்கின்றேன் ஒன்று என்னை திருடன் என்று யாரும் நினைத்துவிடும் வாய்ப்பும் உண்டு சின்னதாக ஒரு சந்தேகம் வந்தாலும் அவ்வளவுதான் மொழியும் தெரியாது என்பதால் பின்னி எடுத்துவிடுவார்கள் அதிலும் தமிழ் என்று தெரிந்தால்???? ...அந்த த்ரில்லும் பிடிக்கும் ,


இன்னுமொரு சிக்கல் நாய்கள்.. கடி நாய்கள். கிட்டத்தட்ட 15 வயது வரையில் நாய்கள் என்றாலே அலறி அடித்து ஓடிவிடும் பழக்கம்  இருந்தது. ஆனால்  இப்போது நாய்களை எவ்வளவு கொடூரமான நாய்களாக இருந்தாலும் சமாளிக்கும்வித்தை என்னவென்று தெரிந்துவிட்டதால் பாதையை கடக்கும் நிமிடங்களில் நாய்களை இலகுவாக சமாளிக்க முடிகின்றது. நாய்களிடம் ஒரு பண்பு உண்டு நாம் அவற்றின் குரலுக்கு அசைவை காட்டினால்தான் அவை பிரச்சினை கொடுக்கின்றன ( react  பண்ணினால் ) எந்த சலனமும் இல்லாமல் அவற்றின் குறைப்பை சட்டை செய்யாமல் நடந்துகொண்டே இருந்தால்  சில நேர பின்தொடறலின் பின் அவை தாமாக அடங்கிவிடுகின்றன.இவன் பயணத்தால் நமக்கு பாதிப்பு இல்லை என்று தாமாக விலகி நமக்கு வழி விட்டு விடுகின்றன!.  இதுதான் மனிதர்களை சமாளிக்கும் வித்தையும் கூட ஆனால் துரதிஷ்டவசமாக சில  மனிதர்கள் நம் பயணத்துக்கு   அவ்வளவு நாகரீகமாக  வழி விடுவதில்லை ......! தமக்கு பாதிப்பே இல்லாவிட்டாலும் ....     ( " கடிநாய் கவனம் ")

Monday, January 21, 2013

."பவரு பவருதான் இது சூப்பர் பவருதான் "

பவரு ஜெயிசிட்டாறு அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பவர காமடி பண்ணவே அணுகின எல்லாரும் தப்பிச்சுட்டாங்க காலர  தூக்கி விட்டுக்கலாம். ( அந்த பட்டியலில்  இந்தியாவின் எல்லா தமிழ்  தொலைக்காட்சிகளும் + மிர்ச்சி , ஹலோ fm  மாதிரி வானொலிகளும் அடங்கும் )  ஆனால் பாவம் ஒரே ஒரு மனுஷன் மேல மட்டும் அநியாயத்துக்கு பலர் பாயிறாங்க "நீயா நானா" ல அந்த "போலி கெளரவம்" எப்பிசோடு நானும் பார்த்திருக்கின்றேன். உண்மைல கேள்வி கேட்ட கோபி மேலயும்., நடுவராக வந்திருந்த "எழுத்தாளர் செல்வப்புவியரசு" மீதும் விமர்சனங்கள் எழுந்ததுக்கு அந்த ரெண்டு பேரும்  எப்டியும் காரணமாக அமையவே இல்லை. அங்கு ரெண்டு பேரையும் பெருமளவு விமர்சனங்களுக்குள்ள தள்ளினது "பவரின் வெகுளித்தனம்தான்றதும்" இங்கு உண்மை சம காலத்துக்கு தேவையான மிகப்பெரிய தத்துவத்த பவரு கத்து வச்சுருக்காரு "எது நடந்தாலும் வாய மூடி சும்மா இருடா ... பாட்டு வரிகள் பவர் ஸ்டாருக்கு ரொம்ப பொருத்தம் "

இதுல நான் தனிப்பட்ட ரீதியா முகம் சுழிச்சது ஒரே ஒரு இடத்துல, "கோபிநாத்" கேள்வி கேட்டு பவரை பற்றி எழுத்தாளர் செல்வப்புவியரசிடம் கேட்டபோது அதற்கு செல்வப்புவியரசு அவர்கள் ஒரு "தூசணத்தை"  உபயோகித்து ஆரம்பிப்பார் அது "மயிரு" என்ற டீசண்டான தூசணத்தில் ஆரம்பிச்சு எதுவாவும் இருக்கலாம் விஜய் tv  அத பீப் போட்டு மறைச்சுட்டாங்க .   அந்த இடம் எனக்கு ரொம்பவே நெருடிடுச்சு "போலியான கவுரவத்த  உருவாக்குரானு எல்லாருமே கிண்டல் பண்ற ஒருத்தன் அத கேட்டுட்டு அமைதியா சிரிச்ச முகத்தோட இருக்குறத பார்த்ததும் "எனக்கும் பவர் மீது ஈர்ப்பு வந்துடுச்சு ...

இன்னுமொரு முக்கியமான மேட்டர் பவர் உபயோகிச்சு பார்க்குற நூதனமான விளம்பர உத்தி , தன்னை எல்லாருமே கிண்டல் பண்றாங்கன்னு நன்றாக  தெரியும்  அதே நேரம் தன்ன கிண்டல் பண்றத  பலர் ரசிக்கிறாங்க என்றதும் பவர் நல்லா புரிஞ்சு வச்சுருக்காரு  அதை வச்சே ஒரு சக்சஸ கொடுத்து பவரு நம்பிக்கைக்கு உதாரணமா மாறி சகிப்புக்கு  முன்னுதாரனமாவே ஆகிட்டாருப்பா , ......

Friday, January 18, 2013

"சிவப்பு தேநீர்"

{1925காலப்பகுதியில் தென்னிந்தியாவின் தேயிலை தோட்டமொன்றில் ஒரு உரையாடல் }


" இப்போ பரவயில்ல டாக்டர் 10 வருசத்துக்கு முன்னால நெனச்சே பார்க்க முடியாதளவுக்கு நிலைமை படு மோசமா இருந்தது மொத்த ஜனங்கள்ல பாதிபேரு ஒவ்வொரு வருசமும் மலேரியா வந்து செத்துப்போவாக .அதவிட கொறச்சல் பேரு நிமோனியா வந்து வயிற்ரோட்டம் வந்து செத்து போவாக .அப்போ எல்லாம் கூலிக   ஓடாம இருக்க எல்லா இடத்துலயும் காவக்காரங்கள நிறுத்தி வைப்போம். வேல செய்யும்போது கூட ஓடாம இருக்க கூலிகள கண்கானிச்சிட்டே  இருப்போம். பெரும்பாலான மேஸ்திரிக ராவுல கூலிகள அடச்சு வச்சுருவாக சில நேரம் சங்கிலில கட்டி வச்சுருவாக இத்தன  ஜாக்கிரதையா  இருந்தாலும் கூலிக  ஓடிப்போயிடுவாக, போறவங்க பாதி வழிலேயே செத்துறுவானுங்க, சில பேர  திருப்பி புடிச்சுட்டு வந்து மத்த கூலிகளுக்கு முன்னால பீதி ஏட்படுரா மாதிரி அடிச்சே கொன்னுடுவானுங்க

,ஒ... எஸ்டேட்ல எவ்வளவு  பயங்கரமான விசயங்கள எல்லாம் பார்த்திருக்கேன் தெரியுமா டாக்டர் கூலிகளா வந்தவங்கள்ள 90 வீதம் பேரு ஏமாத்தி  எஸ்டேட்டுக்கு  கொண்டுவரப்பட்டவங்கதான்.  அவுகளுக்கும் கூலிகளுக்கும் சம்பந்தமே இல்லாத நால  மிருகங்கள  மாதிரிதான் நடத்துவானுங்க. ஆடு மாடுகள கூட இதவிட நல்லபடியா  நடத்துவானுங்கனு சொன்னா கூட தப்பே இல்ல. திருநெல்வேலி கூலிகள சேத்த பின்னலாதான் நிலைமை கொஞ்சம் நல்லாயிட்டு வருது , 

வெள்ளைக்கார தொரைகலும் ரௌடிக மாரிதான் , புடிச்சு  கூலி பொண்ணுங்கள  படுக்க கூப்டுவாக சம்மதிக்கலனா அடிச்சே கொன்னுடுவாக , வேற வழி  இல்லாம இணங்கி போற பொண்ணுங்க கர்ப்பமாகிட்டா   ரொம்ப கொடூரம் கருவ கலைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க சில நேரம்    வயித்துக்குள கைய விட்டு கருவ இழுத்துருவாக இல்லனா கரு கலைரா வரைக்கும் வயித்துல ஏறி மிதிக்கவும் செய்வாக , வருசா வருஷம் எஸ்டேட்ல இருக்குற ஜனங்கள்ல பாதி பேருக்கு மேல உயிரை விடலனா அது அதிஷ்டம்தான் ..... ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 



"இப்படி பலரின் உயிர் கொடையினால்  உருவாக்கப்பட்டதுதான் உலகம் அழகு அழகு என்று கொண்டாடும் இந்த சொர்க்க பூமி 

"இன்று டீ எஸ்டேட்களை பற்றி உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன்" என்று என்று கூறிய டாக்டர் ஏப்ரகாம் யோசனையுடன் தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல தொடர்ந்தார் இன்று இந்த எஸ்டேட்களில் உற்பத்தி செய்யப்படும் தேநீரை "சிவப்பு தேநீர்" என்று சொன்னால் அது   மிகைப்படுத்தல் ஆகாது என்று நினைக்கிறேன்  கடந்த காலங்களில் தங்களை தாங்களே பலி கொடுத்துக்கொண்ட ஆயிரம் ஆயிரம் ஆண் பெண்களின் இரத்தத்தாலும் கண்ணீராலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்த   தேநீர். இந்த 
முகம் தெரியாத தேயிலை தொழிளாலர்கள் மற்றும் எழுத்துப்பணியாளர்கள் தென்னிந்தியாவில், சிலோனில் தேயிலை தொழிலை நிர்மாணிக்க செய்த தியாகங்கள் அரசாங்கத்தினாலும் நமது நாட்டு மக்களாலும் என்றாவது ஒருநாள் புரிந்துகொள்ளப்படும். அங்கீகரிக்கப்படும். என்று நாம் நம்புவோம்.  ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 
1925 இல் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை அச்சு பிசகாமல் அப்படியே 2013 இலும் சொல்லவேண்டி உள்ளது இன்னும் நூறு வருடம் போனாலும் அரசாங்கமோ நாட்டு மக்களோ அந்த  மாபெரும் தியாகங்களை நினைக்கப்போவதில்லை ........காரணம் அவை யாருக்கும் தேவை இல்லை 

Thursday, January 17, 2013

"இரவு தேசம் " 2


இரவை இருளை அனுபவிப்பது என்பது ஒரு அழகான, ஆழமான பயணம்.   அந்த பயணம் நமக்குள் மாற்றங்களை கொண்டுவரக்கூடியது, நம்மை நாம் அனுபவிக்கும் பயணமது.
எந்த நிலையில் இருந்தாலும் எதை அடைந்திருந்தாலும் அடிப்படை என்ன என்பதை சொல்லும் பயணமது , நமக்குள் நாம் உரையாடிக்கொள்ளும் பயணம். இன்னும் தயார்படுத்தலின் விதைகள் இருளுக்குள் விழும் போது  விருட்சம் பெரு  விருட்சம்!!! ,

கண் திறந்திருக்கும் போது நம்முடையது என்று நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளங்களை பற்றி இருளுக்கு எந்த அக்கறையும் இல்லை, அங்கு எல்லாமே எங்களுடையது  எதுவுமே எங்களுடையது அல்ல , சாத்தப்படும் போது அதாவது மூடப்படும்போது எல்லை வந்துவிடும் இதுதான் யதார்த்தம், கதவு யன்னல், கேட் என்று எது மூடப்பட்டாலும் அது ஒரு எல்லையை உருவாக்கும் ஆனால் இமைகள் மூடப்படும்போது மட்டும் இமை என்னும் கதவை ஊடறத்து பயணப்பட முடிவது ஆச்சர்யம்!!! அங்கு எல்லைகளே  கிடையாது  இமைகளை தாண்டி "எல்லை இல்லாத ஒரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும்",

பல இமை மூடிய இருள்கள் நீதிமன்றத்தை போல நடந்துகொள்ளும் அங்கு நாம் உண்மை  மட்டுமே பேசுபவர்களாக மாறி விடுகிறோம் பொய் அங்கு இரண்டாம் பட்சமாய் உதவிக்கு மட்டுமே வரும். அல்லது ஆறுதலுக்காக வரும். அந்த நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு நியாயத்தை மட்டுமே தொடும்.,    சில நேரங்களில் பிரபஞ்ச ரகசியமே அந்த இருள்தானோ என்று நான்  இருளுடன் முட்டி மோதி தோற்றதுண்டு  ( சிறு பிள்ளைத்தனம் ) !ஆனால் .... உண்மை இருளுக்குள்  ஆத்மார்த்தமாய்  மூழ்கும் போது நம்மிடம் இருந்தும்,நாம் என்று அடையாளப்பட்டிருக்கும்   நம் தேவை உள்ள பலரிடம் இருந்தும்,  நமக்கு அவசியமானவர்களிடம் இருந்தும் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் சந்தோசமான அபாயமும் உண்டு.   இவை எல்லாம்  அலாதியான அனுபவங்கள் , அனுபவிக்க வேண்டிய   நிஜங்கள் கண்டுகொள்ளப்படாமல் வீணடிக்கப்படுகின்றது 

  

அவதூறு!.....( 1 )

நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும் இருவருமே பெரிய புள்ளிகள் அவரவர் துறையில் பெயர் பதித்தவர்கள் , அடுத்தது வலையுலகில் இவர்கள் இருவருக்குமே இருக்கும் சார்பான ,எதிர்ப்பான   கூட்டம்(வாயை கொடுத்து எதுக்கு  புண்ணாக்கிக்கனும்னு ) ,அடுத்தது வலையுலகில் இந்த விவகாரம் அருகப்பழசானது . இருந்தாலும் பல பதிவர்கள் தைரியமாக இவர்களை பற்றி பதிவிட்டிருக்கவே என்னுடைய கருத்தையும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுத வந்துவிட்டேன். 

சாறு நிவேதிதா - இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் அண்ணன் "ராஜ்மோகன்" , சாதாரணமாக இருந்த புத்தக நடையில் இருந்தும், எழுத்துக்களை கோர்த்து கதை சொல்லும் பாங்கில் இருந்தும்  இவர் முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்டவராக தெரிந்தார், உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரின் புத்தகங்களை படித்து தலையை பிய்த்துகொன்டு தூக்கமில்லாமல் கிடந்திருக்கிறேன் , பிறகு மீள மீள வாசிக்க வாசிக்கத்தான் ஓரளவுக்கு புரிந்தது அதையும் தாண்டி  அவர்  எழுத்துக்களில் சொல்ல வரும் விடயங்கள் பல்வேறு விதமான படிமங்களை உருவாக்குவதையும், ஒரே வார்த்தைக்குள்  பல முடிவுகளை நாமே சிந்திக்க வேண்டிய விசித்திரத்தையும் உணர்ந்தேன் .
தமிழில் வெளியான முதலாவது பின்நவீனத்துவ நூல் என்னும் அடையாளத்தோடு வந்த Existentialism-mum Fancy Banian-    um படிக்க நான் பட்ட பாடு................. பின்புதான் சில விடயங்கள் புரிந்தது சாதாரண வாசிப்பு 
முறையும் உள்வாங்கும் திறனையும் தாண்டி சாருவின் எழுத்துக்களுக்கு வேறு ஒரு முறை தேவைப்படுகின்றது , அதற்கு பல முறை மீள் வாசிப்பு தேவை அதை உள்வாங்கி மனதுக்குள் பலமுறை அசைபோடும் பக்குவமும்.வேண்டுமென்று  ,  ராசா லீலாவும் அப்படித்தான், ஜீரோ டிக்ரி புரியவே இல்லை  ஜீரோ டிக்ரீயை 
California State University இல் தனி பாடமாகவே கற்பிக்கப்படுவதை அறிந்தபோதுதான் அது ஏன் எனக்கு புரியவில்லை என்பது புரிந்தது   , excile  இன்னமும் படிக்க கிடைக்கவில்லை


 சாறு மீதான தூண்டுதல்தான் அவரை பற்றி நிறைய தேட வைத்தது.  அப்படி கொழும்பு தமிழ் சங்கத்தில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு புத்தகமும், அதனை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக அவரின் வலைதளத்தில் எழுதியிருக்கும் விடயங்களும் சாருவின் எழுத்துக்கள் சிலரை மோசமான வித்தத்தில் மட்டமாக  நடத்துகின்றன என்பது அப்பட்டமாக தெரிந்தது நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்களை பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டாலோ சொல்லப்பட்டாலோ அதிர்ச்சி அடைவதும் அல்லது எதிர்ப்பதும் தான் இயல்பு, ஆனால் இவர் ஏன் இவரை இவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டும் இதன் உள்  நோக்கம் என்னவாக இருக்கும் ? விமர்சனம் என்பது பட்டை தீட்டுவதாகவும் தவறுகளை சரி செய்துகொள்வதட்காகவும்  இருக்க வேண்டுமே ஒழிய இப்படிநார் நாராய் கிழிப்பதாக அமைய என்ன காரணம் ? இப்படி பல கேள்விகள் மனதுக்குள் எழவே இன்னும் இன்னும் புரட்ட சில விடயங்களில் சாறு எவ்வளவு சுயநலமாக அடிமட்ட மனநிலையில்  அரசியல் விளையாடுகிறார் என்பது புரிந்தது ...

Friday, January 11, 2013

25 வயது ( சுய தம்பட்டம் )

அத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழில் அந்த வார்த்தை மட்டும்தான்  என்பதால் அதை அடி மனதில் இருந்து உண்மையாக சொல்கின்றேன் "எல்லா வாழ்துக்க்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" நான் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அகந்தையை குறிக்கும் என்று நான் கருதவில்லை "நாதியற்றவன்" என்பதன் சுருக்கம் தான் நான் என்பது என் கருத்து .   
25 வயது என்பதை நினைக்கும் போதுதான் எனக்குள் வாழ்கையின் மூன்றில் ஒரு பங்கிலும் அதிகமான காலம்  வாழ்ந்துவிட்டேன் என்பதை சந்தோசமாக உணர முடிகின்றது. வயது அதிகமாக அதிகமாக பொறுப்பை விட திருப்தி  அதிகமாகின்றது என்பது சந்தோசமான விசயமா ?? வாழ்வின்  அடிமட்ட  நிலையில் இருந்து எனக்கான பாதையை தேட ஆரம்பித்து இன்னமும் தாகத்தோடு போராட ஆசைப்படும் ஒருவன் என்ற மமதை இல்லாத நம்பிக்கையும் உண்டு. இதுவரையில் தோல்விகள்தான் அதிகம் என்றாலும் மனம் எப்போதும் தளரேன் காரணம் "நான் தமிழன் பச்சை தமிழன்."

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்பது எனது நண்பர்களுக்கு தெரியும். நேற்றுவரை எதை சாதித்தோம் என்று கொண்டாடுவது என்ற கேள்வி தான் அந்த உணர்வுக்கு காரணமாய் இருந்தது. இருந்தும் சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான  காரியம் என்பதை நினைக்கும் போது அதுவும் ஒரு சாதனை தான் என்பது என் அகந்தயில்லாத நம்பிக்கை. எனக்கே தெரியாமல் எனக்கு   போடப்பட்ட முகமூடிகள் அதிகம் இன்னும் தெளிவாக சொல்வதானால் எனக்கு நல்ல பெயர் என்பது ரொம்ப குறைவு. எனக்கே தெரியாமல் அவை உருவாக்கப்படுகின்றன.  இந்த வருடம் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய மனப்போராட்டம் இதுதான் "நான்" என்பது பற்றி எனக்கே தெரியாதபோது எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ???? இது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று அல்லவா? ஆனால் அந்த மன போராட்டத்தில் இருந்து நான் மிக பத்திரமாக வெளிவந்துவிட்டேன், இது இந்த வருடத்தில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றி .. 

யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....

Thursday, January 10, 2013

விஸ்வரூபம்



ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் கூட்டத்தை, எப்போதோ நடக்கப்போகும் உண்மையை அறிந்து திசை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும். கமலுக்கு நடந்ததும் அதுதான் இன்னும் பத்து வருடங்களில் நடக்கப்போவதை ( தனது  துறையில் ) இப்போதே உணர்ந்து புது முயற்சிகளை எடுப்பவர்களில் கமலுக்கு தனி இடம் உண்டு. அவரின் பல முயற்சிகள் தோல்வி அடைவதும் அதனால்தான்  ஒரு  உதாரணத்திற்கு   குணா படம் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம் அப்போதைய சூழழுக்கு அது ஒரு அறுவை படம். ஆனால் அதையே தழுவி 10 வருடம் கழித்து வந்த காதல் கொண்டேன் வெற்றி அடைந்ததே? அப்படியான ஒரு முயற்சிதான் கமலின்  DTH  முயற்சி இங்கு நான் கமல் கலைத்துறைக்கு சேவை செய்யும் பரிபூரண எண்ணத்தில் இதை செய்கிறார் என்று சொல்ல வரவில்லை, வியாபாரம்தான் ஆனாலும் காலமாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் துறையில் மாற்றம் கொண்டு வருபவர்களும் அதை உள்வாங்க முயல்பவர்களாலும் மட்டும்தான் காலம் கடந்து நிலைக்க முடியும் குறைந்தது காலத்துடன் ஓட முடியும்.  கமலின் தீர்க்க தரிசனம் இப்போதைக்கு பொருந்தாது என்பதும் உண்மைதான் ஆனால் DTH  இல் வெளியிடப்பட்டிருந்தால்   அது திரைத்துறையில் ஒரு பெரிய மயில் கல்லாக இருந்திருக்கும் !...

மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம்

நம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று தன்னிலை மறந்ததும்.... சில நிமிடங்களில்  ஒரு விரக்தி நீண்ட பெருமூச்சு  ( இவை வர்ணிப்பாக யாரும் கருதக்கூடாது ) மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கொள்கை கொண்டவர்கள் மட்டும் பதிவை தொடருங்கள் , பதினைந்து செங்கல் கற்கள் இரண்டு தகரம் கை நீட்ட இடமில்லாத ஒரு வீட்டை அதில் குருவிகள் போல வாழும் ஒரு குடுமபத்தின் எதிர்காலத்துக்காக தன்னை அர்பணிக்க சென்ற அந்த தாய்க்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும்?  தனக்காக யார் யாரோ முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி சிறைக்குள் அவள் காதுகளுக்குள் எட்டியிருந்தால் இறுதி நிமிடம் வரை வாழும் நம்பிக்கை எவ்வளவு இருந்திருக்கும் , உலகின் உச்சகட்ட கொடுமை நூறு வீத வாழும் நம்பிக்கை இருக்கும் போது தனக்கே தெரியாமல்  இறப்பதுதான். 

ரிசானாவுக்கு நடந்ததும் அதுதான் " நேற்று முன்தினம் ரிசானாவை  கவனிக்கும் வைத்தியர் உலக ஊடகங்களுக்கும் , இலங்கை ஊடகளுக்கும்  அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார்  ரிசானா   சிறைக்குள் எதுவும் அறியாதவளாக இருக்கின்றார், மரண தண்டனை உறுதியானது அவருக்கு தெரியாது,  தான் குடும்பத்துடன் மீண்டும் சந்தோசமாக வாழப்போவதாக   முழுமையாக நம்புகிறார் என்று " தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் . அப்படியானால் ஒரு உச்சகட்ட கொடுமை ஒன்று அந்த தாய்க்கு நடத்தப்பட்டுள்ளது, 

இன்னுமொருபுறம் ரிசானாவின் கையில் இருக்கும் போது  இறந்த அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாகவே இறந்தார் என்றும் அது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் gulf  news உள்ளிட்ட பல ஊடகங்கள் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியே இருந்தாலும் வெறும் 17 வயது சிறுமி ஒரு  குற்றம் புரிந்தால் அவரை சீர்திருத்த முயலக்கூடாதா ? மரண தண்டனைதான் தீர்வா??? இன்று எல்லா ஊடகங்களிலும்  ரிசானாவின் குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன் ரிசானா  மரணித்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லி இருக்கின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இன்னும் பல ரிசானாக்கள் வாழ்வை தேடி சென்று வாழ்கையை தொலைக்கும் அவலம் கண்டிப்பாய் தொடரும், மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...
Copyright © 2014 நட்சத்திரவீதியில்