Thursday, September 26, 2013

யாழ் பயண அனுபவம் 2

மொத்தம் 8 நாட்கள் யாழில் தங்கி இருந்த நாட்கள் எப்போதும் போல அழகானவை. கடந்த ஆண்டுக்கு முன்னைய ஆண்டு யாழ்பாணம் செல்லும் போது  இருந்த குழு இந்த முறை இல்லை. அப்போது எனக்கென்று எந்த பொறுப்பும் இருக்கவில்லை, அதே வேளை யாழ்பாணம் சென்றது முதல் தடவை என்பதால் ஒவ்வொன்றிலும் ஆச்சர்யம் நிறைந்து போயிருந்தது இம்முறை அப்படியல்ல ஒரு சில பொறுப்புகள் இருந்ததும் பழைய ஆச்சர்யம் மிஸ்ஸிங் .

சக்தியின் யாழ் கலையகம் அமைந்திருந்த பகுதியில் நிறைய கடை தொகுதிகள் அமைந்திருக்கும்  அதில் யாழ் விழிப்புலனற்றோர்  சங்கமும் தங்களுடைய கைவண்ணத்தில் உருவான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது. அதன் உறுப்பினர்கள் இருவர் பாதையில் நின்று அதிஷ்ட சீட்டுக்களை வித்துக்கொண்டிருந்தார்கள்

அதன் முன்னைய நாள் கலையகத்துக்கு சந்திக்க வந்த விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேச கிடைத்தது.  பேசும்போது அவர் எனது ஊர்காரர் என்றும்   10 வருடத்துக்கு முன்பு சக்தியின் ஊடாக யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணைந்ததாக கூறியிருந்தார் ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது பார்வை அற்றோருக்கு உதவுவதை விடவும் இந்த உலகின் உச்சகட்ட சந்தோசம் திருப்தி வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை ,

மறுநாள் கடை தொகுதிகளை தாண்டி செல்லும்போது மேற்படி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதிஷ்ட டிக்கட் விற்றுக்கொண்டிருந்தார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாத அவர் வாய் விடாமல் கூவிக்கொண்டே இருந்தது. என்னிடம் இருபது ரூபாய் தாள் இருந்தது அதை கொடுத்து ஒரு டிக்கட் கொடுங்கோ என்று கேட்க அவர் ஒரு டிக்கட் கொடுத்தார் எவ்வளவு தந்தீர்கள் என்று கேட்டார் 20 ரூபாய் என்று சொன்னேன் ஒரு டிக்கட் 10 ரூபாய்தான் என்று மீதத்தை  தர போனார் நான் வேண்டாம் இருக்கட்டும்  என்று சொல்லி நகரப்போக அவர் என் கையை பிடித்து வலுக்கட்டாயமாக பணத்தை தந்துவிட்டார் கொஞ்சம் கடுமையான குரலில் "பிடியுங்கோ" என்று சொன்னது அவரின்  கோபத்தை உணர்த்தியது.

ஏன் இப்படி செய்தார் நான் அதை உதவியாகத்தானே செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டு நடந்தேன் பிறகுதான் ஒரு உண்மை உரைத்தது. "அட கண் பார்வை இல்லாமல் ஒருத்தன் உழைச்சிட்டிருக்கான் ஒரே நிமிஷத்துல வெறும் பத்து ரூபாய நீட்டி அந்த உழைப்பாளிய கொச்சைப்படுத்தி பிச்சைக்காரனாக்க பார்த்திருக்கேன்னு" நெனச்சப்போ மனசே இறுகிவிட்டது. என்னை அறியாத ஒரு கூச்சம் அருவருப்பு  மனதுக்குள்  தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மறுநாள் முதல் வேலையாக அந்த வழியில் அவரை தேடி பிடித்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சாந்தமானது மனது.  இதில ஆச்சர்யம் என்னனா அவர் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்திருந்தார் என்னை பொருத்தவரைக்கும் நான் செய்தது மிக பெரிய தவறு

ஊனம் என்பது ஈனமல்ல ஊனத்தை குறையாக நினைக்கும் மனதுதான் ஈனம்

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்