Friday, January 6, 2012

முடிந்த வருடமும் தொடரும் நிணைவுகளும்

முதலில் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கால மாற்றம் அளவிட முடியாத வேகத்தை தொட்டிருப்பதை என்னால் கடந்த மூன்று வருடங்களாக துல்லியமாய் உணர முடிகின்றது ஊரும் ஊர்காற்றும் சூழ்ந்திருந்த வரை காலம் இவ்வளவு வேகமாய் இருக்கவில்லை வாழ்க்கையை தேடி கொழும்பு வந்த பிறகுதான் காலமாற்றத்தின் வேகம் எவ்வளவு என்பதை உணர முடிகின்றது

கடந்து போன வருடம் எனக்கு எந்த காலத்திலும் மறக்க முடியாத மாறாத ரணங்களை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுள்ளது , வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் தாங்க வேண்டிய சுமையை நான் கடந்த ஆண்டில் தாங்கிவிட்டேன் அதே வேளை மரணம் எவ்வளவு இயல்பானது என்பதையும் கடந்த ஆண்டு எனக்கு உணர்த்தியிருந்தது , மரண ஊர்வலங்கள் , மரண பெட்டி ,இவற்ற்றை பார்த்தாலே எனக்கு உடல் நடுக்கம் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை வரும் ஆனால் கடந்த ஆண்டு அப்பாவின் இழப்புக்கு பின்னர் அத்தனயும் இயல்பாக என்னால் பார்க்க முடிகின்றது கடந்த வருடத்தின் இரண்டு மாதங்கள் வரையிலும் என்னை சூழ இருந்த உறவுகள் நட்புகள் என்று இப்போது என்னுடன் யாருமே இல்லை இருக்கும் ஒரு சிலரோடும் பழகும் ஆர்வம் வெகுவாய் குறைந்து போக பொழுதுகள் பல நேரங்களில் தனிமையை மட்டுமே விரும்புகின்றது . தனித்து விடப்பட்ட பின்னர் எனக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது (மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி )

சில நேரங்களில் எனக்குள் நல்ல பக்குவம் வந்துவிட்டதோ என்றும் நினைக்க தோன்றுகின்றது. பெரும்பாலும் வள வளா என்று பேசும் என் பேச்சு இப்போது தாராளமாய் குறைந்துள்ளது ஆனால் எப்போது நான் சக மனிதர்களுடன் " வெட்டி " பேச்சை குறைத்தேனோ அப்போதே திமிர் தலைக்கேறியவன் என்ற பட்டத்தை அழகாக சூடிவிட்டு விட்டார்கள் அது கொஞ்சம் வேதனையாய் இருந்தாலும் அதையும் சகித்து கொள்ளும் ஒரு கடுமையான வேலையை பழக வேண்டிய கட்டாயத்தையும் கடந்த ஆண்டு எனக்கு தந்திருந்தது , கோபமும் கொஞ்சம் குறைந்துள்ளது ஆனால் காலுக்கு கீழேயே குழி பறிப்புகளும் நடப்பதால் தவிர்க்க முடியாமல் வெடிக்க வேண்டியுள்ளது ஆனால் இப்போதெல்லாம் அதுவும் ரொம்ப பழக்கமாகி விட்டது சின்னதான ஒரு சிரிப்புடன் நகரும் பக்குவத்தையும் கடந்த வருடம் தந்ததாய் உணர்கிறேன்

வானொலியும் ஊடகமும்தான் இனி என்று நான் எப்போது தீர்மானித்தேனோ அப்போதே ஒரு விடயத்துக்கு நான் முகம் கொடுக்க தயாராய் இருந்தேன் அது இப்போது எனக்கு பலமாய் இருக்கின்றது ( எதிர் பார்க்காமல் நடந்தால் அது கஷ்டமாக இருக்கும் என்பது உண்மை ) அப்போதிருந்து பல்வேறு தடைகளையும் மீறி வானொலிக்குள் வந்த பிறகு ஊடகம் என்ற வார்த்தையின் உண்மை ஆழத்தை நான் உணர இந்த மூன்று வருடம் போதும் என்று அதிக பிரசங்கியாக என்னால் பேச முடியாது . ஆனால் அந்த ஆழத்தின் விசாலத்தை என்னால் உணர முடிகின்றது வானொலி அறிவிப்பாளனாக ஆரம்பித்த எனது ஊடக பயணம் , குறுகிய இடைவெளிக்குள் தொலைக்காட்சிக்குள் செல்ல அதன் சீரிய தொடர்ச்சியாக பத்திரிகை துறைக்குள்ளும் சென்றது கடந்த ஆண்டில்.
சக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை வாரத்தின் இரு நாட்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன் ,மற்றும் லண்டனில் வெளியாகும் சுடர் ஒளி என்ற பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியராக
செயற்படும் வாய்ப்பு கிடைத்தது கடந்த ஆண்டில் வாய் ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற பட படப்பிலேயே பல தடவை சொதப்பிய நினைவுகலும்
கடந்த ஆண்டில் தாராளமாய் உள்ளது

பலமான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் மிகப்பெரிய வேளை இவ்வாண்டில் கம்பீரமாய் என் முன் நிற்கின்றது லேசான பயமும் இல்லாமல் இல்லை வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு வருடத்தில் நிற்கிறேன் இப்போதெல்லாம் மனம் அடிக்கடி ஒரு வாசகத்தை நினைத்துக்கொள்கின்றது
அது "செய் அல்லது செத்து மடி "
Copyright © 2014 நட்சத்திரவீதியில்