Thursday, January 17, 2013

அவதூறு!.....( 1 )

நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும் இருவருமே பெரிய புள்ளிகள் அவரவர் துறையில் பெயர் பதித்தவர்கள் , அடுத்தது வலையுலகில் இவர்கள் இருவருக்குமே இருக்கும் சார்பான ,எதிர்ப்பான   கூட்டம்(வாயை கொடுத்து எதுக்கு  புண்ணாக்கிக்கனும்னு ) ,அடுத்தது வலையுலகில் இந்த விவகாரம் அருகப்பழசானது . இருந்தாலும் பல பதிவர்கள் தைரியமாக இவர்களை பற்றி பதிவிட்டிருக்கவே என்னுடைய கருத்தையும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுத வந்துவிட்டேன். 

சாறு நிவேதிதா - இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் அண்ணன் "ராஜ்மோகன்" , சாதாரணமாக இருந்த புத்தக நடையில் இருந்தும், எழுத்துக்களை கோர்த்து கதை சொல்லும் பாங்கில் இருந்தும்  இவர் முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்டவராக தெரிந்தார், உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரின் புத்தகங்களை படித்து தலையை பிய்த்துகொன்டு தூக்கமில்லாமல் கிடந்திருக்கிறேன் , பிறகு மீள மீள வாசிக்க வாசிக்கத்தான் ஓரளவுக்கு புரிந்தது அதையும் தாண்டி  அவர்  எழுத்துக்களில் சொல்ல வரும் விடயங்கள் பல்வேறு விதமான படிமங்களை உருவாக்குவதையும், ஒரே வார்த்தைக்குள்  பல முடிவுகளை நாமே சிந்திக்க வேண்டிய விசித்திரத்தையும் உணர்ந்தேன் .
தமிழில் வெளியான முதலாவது பின்நவீனத்துவ நூல் என்னும் அடையாளத்தோடு வந்த Existentialism-mum Fancy Banian-    um படிக்க நான் பட்ட பாடு................. பின்புதான் சில விடயங்கள் புரிந்தது சாதாரண வாசிப்பு 
முறையும் உள்வாங்கும் திறனையும் தாண்டி சாருவின் எழுத்துக்களுக்கு வேறு ஒரு முறை தேவைப்படுகின்றது , அதற்கு பல முறை மீள் வாசிப்பு தேவை அதை உள்வாங்கி மனதுக்குள் பலமுறை அசைபோடும் பக்குவமும்.வேண்டுமென்று  ,  ராசா லீலாவும் அப்படித்தான், ஜீரோ டிக்ரி புரியவே இல்லை  ஜீரோ டிக்ரீயை 
California State University இல் தனி பாடமாகவே கற்பிக்கப்படுவதை அறிந்தபோதுதான் அது ஏன் எனக்கு புரியவில்லை என்பது புரிந்தது   , excile  இன்னமும் படிக்க கிடைக்கவில்லை


 சாறு மீதான தூண்டுதல்தான் அவரை பற்றி நிறைய தேட வைத்தது.  அப்படி கொழும்பு தமிழ் சங்கத்தில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு புத்தகமும், அதனை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக அவரின் வலைதளத்தில் எழுதியிருக்கும் விடயங்களும் சாருவின் எழுத்துக்கள் சிலரை மோசமான வித்தத்தில் மட்டமாக  நடத்துகின்றன என்பது அப்பட்டமாக தெரிந்தது நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்களை பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டாலோ சொல்லப்பட்டாலோ அதிர்ச்சி அடைவதும் அல்லது எதிர்ப்பதும் தான் இயல்பு, ஆனால் இவர் ஏன் இவரை இவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டும் இதன் உள்  நோக்கம் என்னவாக இருக்கும் ? விமர்சனம் என்பது பட்டை தீட்டுவதாகவும் தவறுகளை சரி செய்துகொள்வதட்காகவும்  இருக்க வேண்டுமே ஒழிய இப்படிநார் நாராய் கிழிப்பதாக அமைய என்ன காரணம் ? இப்படி பல கேள்விகள் மனதுக்குள் எழவே இன்னும் இன்னும் புரட்ட சில விடயங்களில் சாறு எவ்வளவு சுயநலமாக அடிமட்ட மனநிலையில்  அரசியல் விளையாடுகிறார் என்பது புரிந்தது ...

Friday, January 11, 2013

25 வயது ( சுய தம்பட்டம் )

அத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழில் அந்த வார்த்தை மட்டும்தான்  என்பதால் அதை அடி மனதில் இருந்து உண்மையாக சொல்கின்றேன் "எல்லா வாழ்துக்க்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" நான் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அகந்தையை குறிக்கும் என்று நான் கருதவில்லை "நாதியற்றவன்" என்பதன் சுருக்கம் தான் நான் என்பது என் கருத்து .   
25 வயது என்பதை நினைக்கும் போதுதான் எனக்குள் வாழ்கையின் மூன்றில் ஒரு பங்கிலும் அதிகமான காலம்  வாழ்ந்துவிட்டேன் என்பதை சந்தோசமாக உணர முடிகின்றது. வயது அதிகமாக அதிகமாக பொறுப்பை விட திருப்தி  அதிகமாகின்றது என்பது சந்தோசமான விசயமா ?? வாழ்வின்  அடிமட்ட  நிலையில் இருந்து எனக்கான பாதையை தேட ஆரம்பித்து இன்னமும் தாகத்தோடு போராட ஆசைப்படும் ஒருவன் என்ற மமதை இல்லாத நம்பிக்கையும் உண்டு. இதுவரையில் தோல்விகள்தான் அதிகம் என்றாலும் மனம் எப்போதும் தளரேன் காரணம் "நான் தமிழன் பச்சை தமிழன்."

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்பது எனது நண்பர்களுக்கு தெரியும். நேற்றுவரை எதை சாதித்தோம் என்று கொண்டாடுவது என்ற கேள்வி தான் அந்த உணர்வுக்கு காரணமாய் இருந்தது. இருந்தும் சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான  காரியம் என்பதை நினைக்கும் போது அதுவும் ஒரு சாதனை தான் என்பது என் அகந்தயில்லாத நம்பிக்கை. எனக்கே தெரியாமல் எனக்கு   போடப்பட்ட முகமூடிகள் அதிகம் இன்னும் தெளிவாக சொல்வதானால் எனக்கு நல்ல பெயர் என்பது ரொம்ப குறைவு. எனக்கே தெரியாமல் அவை உருவாக்கப்படுகின்றன.  இந்த வருடம் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய மனப்போராட்டம் இதுதான் "நான்" என்பது பற்றி எனக்கே தெரியாதபோது எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ???? இது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று அல்லவா? ஆனால் அந்த மன போராட்டத்தில் இருந்து நான் மிக பத்திரமாக வெளிவந்துவிட்டேன், இது இந்த வருடத்தில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றி .. 

யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....

Thursday, January 10, 2013

விஸ்வரூபம்



ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் கூட்டத்தை, எப்போதோ நடக்கப்போகும் உண்மையை அறிந்து திசை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும். கமலுக்கு நடந்ததும் அதுதான் இன்னும் பத்து வருடங்களில் நடக்கப்போவதை ( தனது  துறையில் ) இப்போதே உணர்ந்து புது முயற்சிகளை எடுப்பவர்களில் கமலுக்கு தனி இடம் உண்டு. அவரின் பல முயற்சிகள் தோல்வி அடைவதும் அதனால்தான்  ஒரு  உதாரணத்திற்கு   குணா படம் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம் அப்போதைய சூழழுக்கு அது ஒரு அறுவை படம். ஆனால் அதையே தழுவி 10 வருடம் கழித்து வந்த காதல் கொண்டேன் வெற்றி அடைந்ததே? அப்படியான ஒரு முயற்சிதான் கமலின்  DTH  முயற்சி இங்கு நான் கமல் கலைத்துறைக்கு சேவை செய்யும் பரிபூரண எண்ணத்தில் இதை செய்கிறார் என்று சொல்ல வரவில்லை, வியாபாரம்தான் ஆனாலும் காலமாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் துறையில் மாற்றம் கொண்டு வருபவர்களும் அதை உள்வாங்க முயல்பவர்களாலும் மட்டும்தான் காலம் கடந்து நிலைக்க முடியும் குறைந்தது காலத்துடன் ஓட முடியும்.  கமலின் தீர்க்க தரிசனம் இப்போதைக்கு பொருந்தாது என்பதும் உண்மைதான் ஆனால் DTH  இல் வெளியிடப்பட்டிருந்தால்   அது திரைத்துறையில் ஒரு பெரிய மயில் கல்லாக இருந்திருக்கும் !...

மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம்

நம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று தன்னிலை மறந்ததும்.... சில நிமிடங்களில்  ஒரு விரக்தி நீண்ட பெருமூச்சு  ( இவை வர்ணிப்பாக யாரும் கருதக்கூடாது ) மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கொள்கை கொண்டவர்கள் மட்டும் பதிவை தொடருங்கள் , பதினைந்து செங்கல் கற்கள் இரண்டு தகரம் கை நீட்ட இடமில்லாத ஒரு வீட்டை அதில் குருவிகள் போல வாழும் ஒரு குடுமபத்தின் எதிர்காலத்துக்காக தன்னை அர்பணிக்க சென்ற அந்த தாய்க்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும்?  தனக்காக யார் யாரோ முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி சிறைக்குள் அவள் காதுகளுக்குள் எட்டியிருந்தால் இறுதி நிமிடம் வரை வாழும் நம்பிக்கை எவ்வளவு இருந்திருக்கும் , உலகின் உச்சகட்ட கொடுமை நூறு வீத வாழும் நம்பிக்கை இருக்கும் போது தனக்கே தெரியாமல்  இறப்பதுதான். 

ரிசானாவுக்கு நடந்ததும் அதுதான் " நேற்று முன்தினம் ரிசானாவை  கவனிக்கும் வைத்தியர் உலக ஊடகங்களுக்கும் , இலங்கை ஊடகளுக்கும்  அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார்  ரிசானா   சிறைக்குள் எதுவும் அறியாதவளாக இருக்கின்றார், மரண தண்டனை உறுதியானது அவருக்கு தெரியாது,  தான் குடும்பத்துடன் மீண்டும் சந்தோசமாக வாழப்போவதாக   முழுமையாக நம்புகிறார் என்று " தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் . அப்படியானால் ஒரு உச்சகட்ட கொடுமை ஒன்று அந்த தாய்க்கு நடத்தப்பட்டுள்ளது, 

இன்னுமொருபுறம் ரிசானாவின் கையில் இருக்கும் போது  இறந்த அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாகவே இறந்தார் என்றும் அது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் gulf  news உள்ளிட்ட பல ஊடகங்கள் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியே இருந்தாலும் வெறும் 17 வயது சிறுமி ஒரு  குற்றம் புரிந்தால் அவரை சீர்திருத்த முயலக்கூடாதா ? மரண தண்டனைதான் தீர்வா??? இன்று எல்லா ஊடகங்களிலும்  ரிசானாவின் குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன் ரிசானா  மரணித்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லி இருக்கின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இன்னும் பல ரிசானாக்கள் வாழ்வை தேடி சென்று வாழ்கையை தொலைக்கும் அவலம் கண்டிப்பாய் தொடரும், மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...

Wednesday, December 26, 2012

"வதன நூல் வதை நூல் ஆன கதை "

என் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா  தப்பான தகவல் அனுப்புறது ? தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..

Tuesday, December 18, 2012

"இரவு தேசம் " 1

       நெடுநாள் பழகியது  போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள்  அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
 கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி 
  ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற  அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் ,  பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை  கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது  உதாரணம். இது வயது கோளாறு?

இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் ,  இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை...  அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன  குழந்தை  விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே  அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான்.   அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !...

Thursday, December 13, 2012

"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகனை முழுமையாக பாதுகாக்கவில்லை "



ரஜினி சாரை பார்க்கும் போதெல்லாம் வியப்பும், ஒரு சின்ன   கவலையும்  குடிகொள்ளும் வியப்பு என்பது ஒரு தனி மனிதன் அடைந்திருக்கும் இந்த எட்ட முடியாத எல்லையை நினைத்து, அந்த உயர்வை நினைத்து, உழைப்பை நினைத்து .  கவலைகொள்வது சினிமாவில் ரஜினி என்ற ஆளுமை பின்னாளில் சிக்கிப்போன குறுகிய வட்டம்தான். மிக சிறிய வட்டம் அது, ஆனால் அந்த குறுகிய வட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்த்து வியக்கும் புள்ளியாக மாற்றியமைத்த ரஜினி சார் மீது மறுபடியும் வியப்பு ....


அண்ணாமலை வெற்றிக்கு பிறகு வந்த படங்களை பார்த்தால் அந்த வட்டம் என்ன என்பது நன்றாக தெரியும் வெளிப்படையாக் புரியும் ( எந்திரன்  , பாபா வை தவிர ). என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு தெரியாத மிக சரியான நடிகர் ரஜினி சார்தான் சிவாஜி கணேசன் அவர்களின் பழைய படங்கள்; பார்த்தவர்களுக்கு புரியும் ஒரு பாடல் என்றால்கூட வாய் கிட்டத்தட்ட 190 பாகைகளை தாண்டும், நெஞ்சு  நரம்பெல்லாம் புடைத்து வெடிக்கும் இது அக்மார்க் நாடகத்தனம்  , கமல் சார் ஒரு புது வடிவத்தை கதாபாத்திரத்ற்கு கொடுப்பார். ஆனால் மிக சரியாக பாத்திரம் என்னவோ அதை அப்படியே உள்வாங்கி கொடுக்கும் ஒரு தனித்துவ நடிகர் என்றால் ரஜினி சார்தான். முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களுக்கு அது புரியும் இன்னொரு பக்கம் ராகவேந்தரா படத்தில் ரஜினி சாரின் முக அமைதி ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று , ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பரிணாமத்தை காட்டுவார் , மறக்க முடியாதது அவர் பண்ணிய தில்லுமுல்லு , தளபதி படத்தில் மௌனத்தில் ஒரு உணர்ச்சி பிரளயத்தையே முகத்தில் காட்டுவார் .



" உண்மை நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பது"என்ற வாசகத்தை  தாரக மந்திரமாக கொண்டு படம் எடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் அதை அப்படியே பின்பற்றுபவர் என்பதால்தானோ என்னவோ மகேந்திரனுக்கு மிக பிடித்த நடிகர் ரஜினி.  (இன்றளவும் தமிழின் முக்கிய இயக்குனர்களில் மகேந்திரன்  முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்று நம்புகின்றேன்  ) .அப்பேற்பட்ட நடிகனை வணிக சினிமா ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துவிட்டது என்பது கவலையைத்தான்  தருகிறது,  எது எப்படியோ விறு விறு வேகம். மந்திர புன்னகை, சின்ன சிரிப்பில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் லாவகம், எவனாலும் செய்ய முடியாத stayle  என்று ரஜினி சாருக்கு தமிழ் சினிமா வகுத்துக்கொடுத்த சின்ன வட்டத்தை கொண்டு உலகம் முழுவதும் உயர்ந்து நிற்க அவருக்கு துணை வந்த அவரின் உழைப்பு இருக்கின்றதே அது அவ்வளவு இலகுவானது   இல்லை " 63 வயதில் நம் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் பத்திரமாக மிகப்பெரிய எவராளும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் ,ஆனால் ஒரு நல்ல  யதார்த்த நடிகனை நாம் எப்போதோ  தொலைத்துவிட்டோம் "....

Wednesday, November 21, 2012

கிளிநொச்சி


கிளிநொச்சி வயல் வெளிகளும் கண்ணீர் ததும்ப ததும்ப மூக்கிலிருந்து நீர் வழிய வழிய சாப்பிட்ட நாட்டு கோழியும்,காலை  இளம் வெயிலில்  தோகை  மயிலும் , யுத்தம் விட்டுசென்ற தடயங்களையும் அதை நம் மக்கள் மிக இயல்பான ஒன்றாக திரும்பி பார்பதையும் என்னவென்று சொல்ல? யாழ் சென்றது மூன்றாவது முறை அனால் கிளிநொச்சி மண்ணில் அதிக நேரம் செலவிட்டது இதுதான் முதல் முறை ( நன்றி கிருஷாந்தன் ) .

"செல்வந்த வீடாத்தான் இருந்துச்சுது தம்பி 
செல் வந்ததால இப்படி ஆயிட்டுது "  என்று ஒரு பெரியவர் சொல்லி  குமுறி குமுறி சிரித்தார் !!!
என்னால் சிரிக்க முடியவில்லை ...

யுத்த நேரத்தில் விழுந்த செல்களின் மிச்ச இரும்புகளில் பூக்களை வளர்த்து நீரூற்றுகிரார்கள். 
உயிர் பறிக்க வந்த இரும்பில்   ஒரு உயிரை "பூக்க வைக்க"  என் மக்களுக்கு  யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அது ரத்தத்தில் ஊறியிருக்கின்றது. 

யுத்தத்தையும் அது பல தலைமுறைகளுக்கு நினைவாக விட்டு சென்றுள்ள  ரணங்களை கூட நம் மக்கள் எவ்வளவு இயல்பாக நகைச்சுவை உணர்வோடு மீட்டு பார்கின்றார்கள் .....



( (கிளிநொச்சியில் நண்பர்களுடன் சுட்டது )

Sunday, October 21, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ .. ( அறிந்ததை உளறுகிறேன் ) - 3


ஞாயிறு மாலை நேரம் கடைசி நேர பரபரப்பை வேண்டுமென்றே உருவாக்கும் என் கோனாங்கி தனத்திற்கு அன்றைய நாளும் தப்பவில்லை , நான்கு மணிக்கு அலுவலகத்தில் நிற்க வேண்டும்... ( இப்போ யோசிச்சு என்ன பிரயோசனம் ஏகன் கிற மொக்க படத்த பதினாறாவது தடவையா கலைஞர் டி வீல   முடியிற வரைக்கும் பார்க்கும் போது யோசிச்சு இருக்கணும் )  என்னை நானே திட்டிக்கொண்டு ஓடினேன்... நடந்தேன்... ஓடினேன் , சும்மா சொல்லக்கூடாது அலுவலகம் இருக்கும் பண்ணிபிட்டியாவுக்கு தெகிவளை இல்  இருந்து பத்து நிமிடத்துக்கொரு தடவை பஸ் இருப்பதால் ஓகே ஓகே .... அரக்க பறக்க அவசரமாய் ஓடி வந்து ஏறுவதற்கும் வண்டி  கிளம்புவதட்கும் சரியாய் இருந்தது, இரவு  நிகழ்ச்சில  என்ன என்ன பேசலாம் என்றெல்லாம்... " கிழிச்ச அவ்ளோ எல்லாம் சிந்திச்சா  நீ   ( மைன்ட் வாய்சு...)....

ஆ..... ஆகா ... அடடா  என்னா ஸ்பீடு  மனுஷன் யார்கூட என்ன கோவமோ " அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் யா இருக்கு " ஓகே நேரத்துக்கு அலுவலகம் போய்டலாம் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே " ( மைன்ட் வாய்சு  இல்ல மைன்ட் சாங்கு ...) சடார்னு வண்டி நின்னாலும்  சாங்கு நிக்கல , முதல்ல ஒரு வயசான பாட்டி அவங்க பின்னால யம்ம்மா ..... கொழும்புல நமக்கு பிடிச்ச விசயங்கள்ல இந்த சகோதர மொழி பொண்ணுங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு " "என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் " ( இப்போ மைன்ட்  சாங்கு இல்ல வண்டி நிறுத்துன இடத்துல இருந்த கடைல ரேடியோ ...)... பொண்ணுக்கு பின்னால ச்சே சீ ... அப்டி இல்ல அவ பின்னால ஒரு மனிதர் அடடா ... பார்வை இல்ல, கண் பார்வை இல்லாத ஒருத்தர் தடுமாறி வண்டில ஏற , உதவியா கண்டக்டரும் உதவ எனக்கு முன் சீட்ல உட்கார்ந்துட்டார். அவருக்கு பக்கத்துல வயசான பாட்டி.... என் பக்கத்துல..... ( ஆஹா... கனவே தானா... மறுபடி மைன்ட் சாங்கு ) .... 

பக்கத்துலையே வந்து உட்கார்ந்த சமந்தாவ பார்க்கனும்னு மனசு போகுது ( நிஜமா நம்ம நடிகை சமந்தாவே தோற்று போய்டுவாங்க ) ஆனா நமக்கு இயல்பாவே கொஞ்சம் இல்ல நெறைய கூச்சம் நாள மனசு போற பக்கம் கண் போகல "ஹா .... பரவாலயே வர வர கௌரவத்த காப்பாத்திக்கிரா மாதிரி எழுதி  பழகிட்ட ( மைன்ட் வாய்சு )  .. இருந்தாலும் கரண்ட் அடிச்சவன் மாறி அப்டியே முன்னாலேயே பார்க்க ஆசை... முடியுமா????.... முடியுமா????? ஹீ ஹீ ..." நெருங்க விடுதில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்"....( மறுபடி மைன்ட்  சாங்கு ) 

எனக்கு முன்னால இருக்குறவர பாருங்க.. பார்வயில்லாதது எவ்ளோ நல்லது இல்ல ( ச்சே வர வர ரொம்ப கீழ்த்தரமா யோசிக்க ஆரம்பிச்சுட்ட ) ஆனாலும் உண்மைதான் வண்டி ஒவ்வொரு ஸ்டாப்பா நின்னு நின்னு போகுது அப்புறம் மனசுக்கும் கண்ணுக்கும் இடைல உள்ள சண்டைல கண்ணுதான் ஜெயிச்சுது நா அவள பார்க்க..... அவள நான் பார்க்க .....பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் பார்த்த பக்கமே பார்திட்டிருக்க ... எனக்கே கொஞ்சம் கூச்சமாயிடுச்சு "ச்சே நம்ம பார்வை எவ்ளோ மட்டமா இருக்கு கண்ட இடத்துலயும் கண்ணு போக முதல்ல பார்வைய திருப்பு ... திருப்பு ...திருப்பு ..."( மைன்ட் வாய்சு இப்போ எக்கோ உடன் )   எப்டி ???? "ஹா அதான் இரவு  நிகழ்ச்சி அதபத்தி யோசிக்கலாமே " நெனச்சு  முடிக்குறதுக்குள்ள சிட்டு பரந்துடும்னு நெனைக்கவே இல்ல .. ( பறந்ததடி ஒரு பெண் புறா )அட அட என்ன நடந்தாலும் ஒரே பக்கம் முகத்த வச்சுட்டு.... சுக வாசிப்பா நீ ( பார்வையில்லாதவர் பார்த்து மைன்ட் வாய்சு )

  அட நாம இறங்க வேண்டிய இடத்துக்கும் வந்தாச்சே எல்லாரும் இறங்கியாச்சு நானும் இறங்கியாச்சு பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் அப்டியே உட்கார்ந்திருக்கிறார் பாவம் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சுன்னு தெரியல போல ... போய் சொல்லுவோமா ??? ஐயோ... மழை... குடையும் இல்ல அடுத்த வண்டிய பிடிக்கணும் ஓடு ... ஓடு .... 

அடுத்த வண்டியையும் பிடிச்சாச்சு வேலைக்கும் வந்தாச்சு ....பயங்கர குற்ற உணர்வு " ஒரு பொண்ண பார்த்து வழிய தெரியுது " ஒரு மனுஷனுக்கு உதவ தெரியலையே ... ச்சே அந்த மனுஷன் யாருமே இல்லாத வண்டில எல்லாரும் இருக்காங்கனு நெனச்சுட்டு இன்னமும் இருக்குமோ? இல்ல ஒருத்தரும் இல்லாத வண்டில யாராவது சண்டி புகுந்து மனுஷனோட பணத்த கிணத்த பரிச்சுடுமோ... அந்த பொண்ணு  ... ஆ ..அவள விடு அடுத்த நாள் அடுத்த வண்டி இன்னொரு பொண்ணு ஆனா அந்த பார்வை இல்லாத மனிதர் ( ச்சே என்ன   மனசு வண்டில இருந்து இன்னமும் இறங்கல ......)

 வண்டில கண்ட இடத்துல மேஞ்சி கண்டதையும் கற்பனை பண்ண வச்சு இறங்கினதுக்கு பிறகும் பல மணி நேரம் ஆகியும்  என் பார்வை இன்னமும் வண்டில ,  நான் போன அடுத்த நிமிஷம் யாரோ ஒருத்தன் உதவில அந்த பார்வை இல்லாதவர் இறங்கி போயிருப்பார் அடுத்த நிமிஷமே அந்த வண்டியின் சத்தங்களையும் மறந்திருப்பார் இல்ல ??? இதுல உண்மையிலேயே பார்வை பற்றி வருத்தப்பட வேண்டியது நானா??? இல்ல பார்வை இல்லாத அவரா??? .....

கொசுறு - "யாவும் கற்பனையே " (நம்புங்கோல் )

Sunday, October 7, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-1


(இந்த பதிவு ஒரு தொடர் பதிவு... சைக்கோ   என்று ரொம்ப சாதாரணமாக அடையாளப்படுத்தப்படும் பலர் பற்றியது வார்த்தை கோர்வைகள் சில நேரம் புரியாமல் இருக்கலாம் இரண்டொரு தடவை பொறுமையாய் வாசித்து பாருங்கள் .. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும்  சைக்கோ   தனத்தை அல்லது மன நிலை மாற்றத்தை பதிவிடும் ஒரு முயற்சி ..)

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மிகவும்  சிக்கலான வார்த்தைதான். அதில் பொதிந்து போயிருக்கும் அர்த்தமும் மிக  ஆழமானது. ஆழமாய் போக போக என்ன ஏது என்ற முடிவு பெறுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. இந்த வார்த்தைக்குள் நாம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை அடக்கி வைத்தியசாலை என்ற பெயரில் அடைத்து வைத்துவிட்டிருக்கின்றோம் என்றால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் என்பதும் உண்மை அல்ல.

 கடைசி வரியில் எழுதியிருப்பது பலருக்கு பரீட்சயமானது. நம் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்க்குமொவ்வொருவரும் விதம் விதமான மனோபாவம் கொண்டவர்கள்.  பல விடயங்களில் இந்த மனோபாவங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் அதில் இருந்து யாரேனும் ஒரு சின்ன வித்தியாசத்தை காட்டினாலும் அவனை வித்தியாசமாக பார்க்க வைப்பதும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தைதான் .மிக சராசரியான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக இருக்கட்டும் , அந்தந்த வயதில் கிடைப்பதெல்லாமே கிடைத்தவனாக இருக்கட்டும் சராசரியான வாழ்க்கை அமையாதவனாக இருக்கட்டும் , அல்லது அதை தேடுபவனாக இருக்கட்டும்  ( வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் இந்த நான்கு பிரிவுக்குள் அடக்கிவிடலாம ) எல்லோருக்குமே இந்த வார்த்தை மிக பொதுவானது. 

ஆனால் பைத்தியம் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் பைத்தியமா? பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டால் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா? பைத்தியம் என்றவனும் சிரிக்கிறான், அழுகிறான், கோபப்படுகிறான் அவனை பைத்தியம் என்று அடையாளம் கொடுத்தவனும் இந்த சராசரி உணர்வுகளை அசாமான்யமாய் வெளிக்காட்டும் பல சந்தர்ப்பங்களை நினைக்க முடிகின்றது  , மன நலம் பாதிக்கப்பட்டவன் தனியாய் சிரிக்கின்றான் என்றால், ஒருவன் சிரிப்பதை பார்த்து காரணமே இல்லாமல் சிரிப்பவனையும் அடுத்தவனை காயப்படுத்தி சிரிப்பவனையும் , விரக்தியில் சிரிப்பவனையும் வெறியில் சிரிப்பவனையும் எந்த வார்த்தையில் அடக்குவது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணம் வந்தவனும், இல்லை நான் தெளிவு என்ற எண்ணம் கொண்டவனும் என்று எவனுமே மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தையில் இருந்த இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் தப்பவே முடியாது .... (இரண்டாம் தொடுப்பு வரும் )
Copyright © 2014 நட்சத்திரவீதியில்