நாளை விடுதலை
கடந்த 19 ஆம் திகதி சக்தி பண்பலையில் ஒலிபரப்பான கவிராத்திரிக்கென நான் புனைந்த வரிகள் உங்கள் பார்வைக்கு வழக்கம் போல என்னை வழி நடத்தும் கவி ராத்திரியின் தயாரிப்பாளர் மற்றும் சக்தி வானொலியின் பிரதம தயாரிப்பாளர் திரு .ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி ...அன்புடன் அன்பன் ...கிருஷ்ணாஎன்னையும் கவிதை எழுதச்சொன்னார்கள்
என் இரவுகளின் கருமையை மையாக்கினேன்
என் தனிமைகளின் வெறுமையை சொல்லாக்கினேன்
சிரம் சுமந்த வறுமையும் முறுவல் மறந்த முகங்களும்
அவல பொட்டலங்களுடன் அல்லாடும் மனிதர்களின் அடிப்படையும் தெரிந்ததனால்
நானும் எழுதினேன்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்
மழை கொண்டு வருகிறது சமதர்ம மேகம்
பஞ்சமில்லை எங்களுக்கு
வழி வழியாக தொடர்கிறது இந்த உழைப்பின் மோகம்
சோம்பல் இல்லை எங்களுக்கு
அளந்து அளந்து உணவை அளந்து
வளைந்து வளைந்து உழைப்பை சுமந்து
நெளிந்து நெளிந்து கூச்சம் மறந்து
இழந்து இழந்து அனைத்தும் மறந்து
நாங்கள் கொட்டிய உழைப்பில்தான்
கொடி கட்டி பறந்தது இந்து சமுத்திரத்தின் முத்து
இலை கூட கருகும் மார்கழி பனியிலும்
சுள்ளென்று சுடும் கோடை வெயிலிலும்
ஆளையே அல்லும் மாரி மழையிலும்
மலையை விட்டிரங்காத என் முப்பாட்டனின் உதிரம்தான்
இந்த மண்ணின் சிகப்பில் தெரிகிறது
உழைப்புக்கேட்ட்ற ஊதியம் இன்றி
பிழைக்க வேறு நாதியும் இன்றி
மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் ஒடுக்கப்பட்ட உடமைகளுக்கும்
சத்தமிடத்தெம்பில்லாத என் முப்பாட்டனின் வியர்வைதான் இந்த மண்ணில் செறிந்திருக்கிறது
எங்கள் முதுகெலும்புகள் ஒவ்வொன்றும் இந்த நாடிட்காகவே தேய்ந்த கதை தெரியுமா
எங்கள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவனிக்காகவே காய்ந்த கதை தெரியுமா
வந்தவன் போனவன் எல்லாம் பணத்தில் மிதக்க
கண்டவன் நின்றவன் எல்லாம் சுகத்தில் திளைக்க
எங்கள் சுயத்தை கூட மறந்து நிற்க நாம் என்ன தெருவில் கிடக்கும் குப்பை நிரப்பும்
முச்சந்தி தொட்டிகளா
பன்னெடுங்கால சுதந்திரம் ,
பறை சாற்றும் ஜனநாயகம்
நாம் வெகுண்டெழுந்த போதெல்லாம்
கட்டியணைத்த தந்திரம்
இறுக்கத்தை தளர்த்தியபோது முதுகில் ரத்தம்
வழிந்தபோது தெரிந்தது எங்கள் இனத்தின் ஏமாற்றம்
அயலில் ஆறு கோடி பேர் என்பர்
எங்கள் தந்தை நாடென்பர்
வந்தால் வாழவைக்கும் மூத்தகுடி என்பர்
அது சரி .....
ரத்தம் இங்கு சிந்திய போதே
திரையில் முத்தம் சிந்தியவர்களுக்கு வீடேழுப்பியவர்களிடம்
மத்தியில் நாம் அநாதரவாய் நிற்பதை சொன்னால்
பதை பதித்து ஓடிவந்துவிடப்போகிறார்கள்
என் சகோதரனே
நீ உனக்காக சிந்திக்கிறாய்
நான் எனக்காக சிந்திக்கிறேன்
நாம் நமக்காக சிந்திப்பதில்லை
உன் விடுதலை உன்னிடம்
என் விடுதலை என்னிடம்
நம் விடுதலை நம்மிடம்
புகையிருட்டுக்குள் தொலைந்துகொண்டிருக்கும்
உன் பருவங்களை துலக்கு
வெற்றுபோதைக்குள் தோற்றுபோகும்
உன் விடலைபருவத்தை தட்டிஎழுப்பு
கூவி அழைக்கும் புதிய அலைகளின்
உரிமைசுவடுகளின் பின்னால் நட
முறுவல் சிந்த வேண்டிய முகத்தில்
முனகலிடும் வாயை கிழித்துவிடு
எங்கள் நெருப்பில் குளிர் காய்பவரிடம்
எங்கள் உவர்ப்பில் உணவுன்பவரிடம்
எங்கள் நிழலில் இளைப்பாருபவரிடம்
எங்களுக்கானதை கேள்
மறுத்தால் கொடுப்பதை நிறுத்து
கெடுபபதுதானே தவறு கொடுப்பதை நிறுத்துவதில் இல்லையே
நம்பிக்கயோடு கைகோர்ப்போம்
புரட்சி வீதியில் சேர்ந்து நடப்போம்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்
சிறந்த வரிகளுக்கு நன்றி.
ReplyDeleteவிடுதலை விரைவில் உங்கள் வாசல் கதவை தட்டும்..... உங்கள் இரவுகளின் கருமையை மையாக்கி எழுதிய ஒவ்வொரு வரிகளுக்கும் பலன் நிச்சயம் தேடி வரும்..வாழ்வில் அடிமைத்தனம் எப்போதுமே நிலைத்திருப்பதில்லை...மனிதனாகப்பிறப்பது அடிமையாக வாழ்வதற்கு அல்ல..