Tuesday, April 22, 2014

கருப்பனும் ...மிஸ்டர் ..... சசிகுமாரும் (4)

எல்லா குட்டி பூனைகள் போலத்தான் கருப்பனின் சின்ன வயதும்  ஆனால் ஏற்கனவே சொன்னது போல அவன் கொஞ்சம் வித்யாசமானவன் மனிதனுக்கு இருக்கும் சில உணர்வுகளை புரிதல் அவனிடம் இருந்தது இது ஒரு வகையில் என் கணித்தலின் தவறோ என்னவோ ஆனால் அடம் பிடித்தல் ,அன்பு காட்டுதல் கோபப்படுதல் ஏன் சில நேரங்களில் பொசசிவ்னஸ், என்று கருப்பன் கொஞ்சம் வித்யாசம் வீட்டுக்கு கூட்டி வந்த காலத்தில் அவன் ரொம்ப சின்னவன் தூங்குதல் பிடித்த பொழுது போக்கு சதா சர்வ காலமும் தூங்குவான் அதை ரசிப்பதே ஒரு தனி அழகு

என்ன ஒரு ஆத்மார்த்தமான உறக்கம் அது ....என் அளவில் அப்படி ஒரு மெய் மறந்த தூக்கத்தை கண்டு நீண்ட காலம் இன்னுமொன்று நம் மனதுக்கு பிடித்தவர்கள் எப்போ ரொம்ப அழகா இருப்பாங்கனா கண்டிப்பா அது தூங்கும் நேரமாகத்தான் இருக்கும் நான் என் காதல் காலங்களில் அவளிடம் அடிக்கடி  சொல்வது  அவள் தூங்கும்  போது அவளை பார்க்க வேணும் என்று ஆனால் காலம் அதெல்லாம் வெறும் கானல் நீராக்கி அவளை ஒரு திசைக்கும்  என்னை வேறு திசைக்கும்  அடித்து இழுத்து வந்துவிட்டது.

பிறந்த சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆன  குழந்தைகளின்   உறக்கத்தை பார்த்திருப்போம் என்ன ஒரு ஆனந்தமான உறக்கம் ஆழ் மனதில் எந்த சிந்தனையும் இல்லாதவிடத்து மட்டுமே அது சாத்தியப்படும்   அந்த உறக்கம் .கருப்பன் எப்போதுமே அப்படித்தான் அவன் தூங்குவதை பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு வகையில்  தியானம், இருதய நோயாளர்களை மீன் தொட்டி மீன்கள் அசைந்து விளையாடுவதை பார்க்க சொல்வார்களே ...அதுபோல. கருப்பன் சின்ன வயதில் பால் குடிப்பது என்றால் வேறு ஒன்றுமே வேண்டாம் இவன் வேறு கரு கருவென்று இருப்பதால் பாலை மண்டுவதை பார்த்து இப்படியாவது வெள்ளை ஆகிவிட வேண்டும் என்று ஆசைபடுகின்றானோ என்று நானும் தம்பியும் பேசி சிரிப்போம்.

இதில் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவனுக்கு அப்பாவை பார்த்து விடவேண்டும் இல்லையென்றால் உண்ணாவிரதம் தான் கருப்பனுக்கு அப்பாவின் சப்பாத்துக்குள் சுருண்டு தூங்குவது ரொம்ப பிடிக்கும் எப்படி  பழகினானோ  தெரியவில்லை தூங்குவதென்றால் கண்டிப்பாக அப்பாவின் சப்பாத்துள் சுருண்டுவிடுவான்.
சில  நேரம் இவன் எழுந்திருக்கும் வரை அப்பா வேலைக்கு போகாமல் நின்றுக்கொண்டிருப்பார் ......சசிக்குமார் இன்னும் ஒரு படி மேல் எங்காவது கிளம்புகிறோம் என்றால் கூடவே வந்து வழி அனுப்பி வைப்பது அவன் முதல் கடமையாக இருக்கும்.

ஒரு முறை உறவுக்காரர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம் 3 நாட்கள்  அங்கேயே தங்க வேண்டி வரும் என்பதால் சசிக்குமாருக்கு உணவு ஏற்பாடு செய்தாக வேணும் கருப்பன் எப்படியோ சமாளிப்பான் காரணம் அவனை கட்டிப்போட முடியாதே!! மேலும் அக்கம் பக்கத்தில் அவன் மீது நல்ல அபிப்ராயம் எலி பிடிப்பதில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தான் எங்கள் வீட்டின் ஓரத்தில் இருந்த எலி வளையும்  அவர்கள் காலி செய்து பாதுகாப்பான இடம் தேடி போய்விட்டார்கள் ஆனால் சசிக்குமார் அப்படி அல்ல யாரும் ஏதும் கொடுத்தால் சாப்பிட்டு தொலைய மாட்டான் வீட்டில் எங்களுக்கு சமைப்பதுதான் அவனுக்கும்

எனவே அக்கம் பக்கத்தில் சொல்லிவிட்டு சென்றே ஆக  வேண்டும் எங்கள் அயல் வீட்டுக்காரர்கள் சிங்களவர்கள் நல்ல மனிதர்கள்  பார்த்துக்கொள்வார்கள் கிளம்பிவிட்டோம் நம்புவீர்களா ??? 3 நாள் எந்த உணவும் எடுக்காம படுத்த படுக்கையாகி கிடந்தான் , !!! ...நாம வந்து உணவு சமைத்து தந்த பிறகுதான் சாப்பிட்டான் இது எங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான் இவனாலே சில பயணங்களை தவிர்த்ததும் உண்டு

கருப்பன் விளையாடுவது பார்க்க ரொம்ப பிடிக்கும் எல்லா பூனயார்களையும் போலத்தான் தன்  வாலை தானே பிடிக்கும் பாரம்பரிய முயற்சி பல நூறாண்டுகால முயற்சி இல்லையா?? கருப்பனும் தன பங்குக்கு தன்  இனத்தின் கடமையை நிறைவேற்ற படாதா பாடு  படுவான் இதை ஓரமாக சசிக்குமார் ஆச்சர்யத்தை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருப்பான் ஹி .....ஹீ... சசியை வம்புக்கிளுப்பதில் கருப்பனுக்கு அலாதி ப்ரியம்  அதுவும் தொங்கும் அவன் காதுகளை அசைத்து  பார்க்க பயங்கர இஷ்டம் அவனுக்கு ... சசி கடுப்பானாலும் ஒன்றும் செய்ய முடியாது காரணம் அவனை கட்டிப்போட்டிருப்பது  கருப்பனுக்கு  தெரியும்


கருப்பனை வைத்துக்கொண்டு வீடு கூட்டிப்பெருக்க   ஐயோ... அம்மா படும் கஷ்டம் இருக்கே தும்பு தடியின் அசைவை பாய்ந்து பிடிக்க கருப்பன் தொடர்ந்து முயற்சி செய்து செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்வான் இதற்கு மத்தியில் அம்மாவுக்கு கருப்பனுக்கும் இடையில் நடக்கும் சம்பாசனைதான் செம்ம ஜாலி ! ஆனால் இது ஒரு வித்யாசமான உணர்வு எதிர்முனையில் இருந்து பதில் வராது என்று தெரிந்த அதனிடம் பேசுதல் கோபப்படுதல் சிணுங்குதல் அன்புபாராட்டுதல் என அநேகமாக பூனைகளுடனும் நாய்களிடமும்தான்  தான் நடக்குது பாம்புக்கூடயா  பேச முடியும் !!!  ஆனால் சில காலம் கடந்த பிறகு விளையாட்டு மறந்துவிட்டது சசியுடனும் நல்ல உறவு வளர்ந்துவிட்டது சசிகுமார் தூங்கும்போது அவன் கழுத்தின் மேல் ஏறி நம்மாலும் தூங்க ஆரபித்து விடுவான் செம நட்பு அது




Wednesday, April 16, 2014

திருமிகு மலிங்க

அப்போதே என் பெயரில் பல சாதனைகள் இருந்தன ...ஆனாலும் பலர் பார்வையில் நான்  முடிக்கு சாயம் பூசிக்கொண்ட ,காதுக்கு தோடு போட்ட ...,டட்டூ அடித்திருக்கும் ( கிட்டத்தட்ட ரௌடி ) ஒரு ஒழுக்கமற்றவனாகவே தெரிந்தேன். அதனாலேதான் இந்த பதவி என்னிடம் வர இவ்வளவு காலமோ என்னவோ.! கடைசி போட்டியில் பிடிஒன்றை தவறவிட்டபோது அணியின் தலைவனாக அவமானமாக இருந்தது ! ஆனால் அதற்காக என்னால் தலை  குனிய முடியாது அப்படி குனிந்தால் தலைவனாக அணியை என்னால் வழி நடத்த முடியாமல் போயிருக்கும். அதை அந்த நிமிடமே மறந்துவிட்டு அடுத்த பந்திலிருந்து அணியை மீண்டும் தன்னம்பிக்கையுடன் வழி நடத்தினேன் உலகக்கின்னத்தையும் வென்றேன் 


என் வெளித்தோற்றத்தை பார்த்து என்னை எடை போட்டபோதேல்லாம் என்னால் கிரிக்கட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே யோசித்தேன், எவருக்காகவும் என்னை மாற்றிக்கொண்டதில்லை மாற்றப்போவதுமில்லை, தலைமை பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை சிந்தனையில் இருந்ததெல்லாம் முடியுமான காலம் வரை கிரிக்கட் விளையாட வேண்டும் என்பது மட்டுமே ..இப்போதும் என்னால் ஆனதை சொல்லித்தருவேன் ஆனால் என் வெளிதோற்றத்தை கண்டு யாரும் என்னை எடை போட்டால் அது என் தவறு அல்ல 

லசித் மலிங்க ஒரு தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி அந்த செவ்வி முழுக்க மலிங்க கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை சொல்லும் செவ்வியாக இருந்தது 

Tuesday, April 15, 2014

சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது

புதுவருட வாழ்த்துக்கள் சில மாதங்கள் கழித்து மீண்டும் எழுதி பார்க்க மனம் சொல்லியது கடந்த 14 திகதி அதிகாலை KTV இல் வண்ண வண்ண பூக்கள் படம் பார்த்தேன் நீண்ட காலமாக பார்க்க ஆசைப்பட்ட படம் அதிகாலை பொழுது என்பதால் விளம்பர தொல்லையும் இல்லை அதிலும்  முழுமையாக இரண்டரை மணி நேரம் ஒரு படம் இடைவெளி இல்லாமல் விளம்பர தொல்லை இல்லாமல்  KTV ல பார்க்க கிடைப்பது அபூர்வம்

காட்டுக்குள் தனியாக நிக்கும் ஒரு பெண் அவள் மீது காதல் கொள்ளும் நாயகன் நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் இன்னுமொரு நாயகி பிரஷாந்தின் ஆரம்ப கால முகம் பாலுமகேந்திரா இயக்கம் என்பதால் மிகைபடுத்தாத நடிப்பு

பிரஷாந்த் மீது சராசரி ரசிகனுக்கு இருக்கும் கோவம் மிக சாதாரணமானது அவரின் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மட்டும் சில படங்களை தவிர்த்திருந்தால் இன்று பிரசாந்த் இன் நிலைமையே வேறு .ஒரு நல்ல நடிகனை நாசமாக்கிவிட்டார்கள் ...அடுத்தது தமிழின் மிக இயற்கையான இயல்பான அழகு கொண்ட நடிகைகளில் மௌனிகா , வினோதினி இருவருக்கும் முதல் 10 இடங்களுக்குள் கண்டிப்பாக இடம் இருக்கும் எவ்வளவு இயல்பு அதிலயும் வினோதினி இயல்பிலும் இயல்பு

ஒரு காட்சியில் விநோதினியை திருமணம் செய்ய ஆசைபடும் பிரசாந்திடம் எதோ தான்  செக்ஸுக்காக மட்டுமே பழகியதை போல சில வசனங்களை உச்சரிப்பார் வினோதினி கல்யாணத்துக்கு முன்னாள் உடல் உறவு என்பது எதோ மாபாதகம் போல காட்டப்பட்ட காலத்தில் பாலுமகேந்திரா அதை விரசமோ ஆபாசமோ இல்லாமல் இயல்பாக காட்டுகின்றார்  ,  அப்படி இல்ல தன்னால் நீண்ட காலம் வாழ முடியாது என்று பிரஷாந்தின் நண்பனிடம் சொல்லும் காட்சி என்று வினோதினி அழகு


மௌனிகாவின் இயற்கையான அழகு தமிழில் அபூர்வம் பாலுமகேந்திரா ரசனைகாரர் ....முள்ளும் மலரும் ஷோபாவுக்கு இயல்பான அழகு என்றால் மௌனிகா அதன் அடுத்த உயரம் ( இதுல முக்கியமானது இரண்டு பேரோடையும் பாலுமகேந்திரா கிசு கிசுக்கப்பட்டார் மௌனிகா இறுதி காலத்தில் அவரை மணந்துகொண்டார் )

எப்படியோ இந்த சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது சுவாரஷ்யம்  பின்னணி இசை என்னவோ அவ்வளவாக ஒட்டவில்லை ராஜா சாரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்

Copyright © 2014 நட்சத்திரவீதியில்